என்றென்றும் வாழ்வது எப்படி
இந்தக் குட்டிப் பெண்ணும் அவளுடைய
நண்பர்களும் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீ சொல்ல முடியுமா?
ஆம், நீ வாசித்துக் கொண்டிருக்கிற இந்தப் புத்தகத்தை—என்னுடைய பைபிள் கதை
புத்தகத்தை—வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நீ வாசித்துக்
கொண்டிருக்கிற கதையைத்தான்—“என்றென்றும் வாழ்வது எப்படி” என்ற இதே
கதையைத்தான்—அவர்களும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
![]() |
ஒரு பையன் படிக்கிறான் |
அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
முதலாவதாக, நாம் என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவாவையும் அவருடைய
குமாரனான இயேசுவையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பைபிள் இவ்வாறு
சொல்கிறது: ‘என்றென்றும் வாழ்வதற்கான வழி, ஒரே மெய்க் கடவுளையும் அவர்
பூமிக்கு அனுப்பின அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்
கொள்வதே.’
யெகோவா தேவனையும் அவருடைய குமாரனான இயேசுவையும் பற்றி
நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? ஒரு வழியானது என்னுடைய பைபிள் கதை
புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரையாக வாசிப்பதன் மூலமாகும். இது
யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நிறைய சொல்கிறதல்லவா? அதோடு, அவர்கள்
செய்திருக்கிற காரியங்களையும் இன்னும் செய்யப் போகிற காரியங்களையும் பற்றி
ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வெறுமென
வாசித்தால் போதாது, அதைவிட அதிகத்தை நாம் செய்ய வேண்டும்.
தரையில் இருக்கிற இன்னொரு புத்தகத்தைப் பார்க்கிறாயா? அது பைபிள்.
இந்தப் புத்தகத்தின் கதைகளுக்கு அடிப்படையாய் இருக்கிற பைபிள் வசனங்களை
யாரையாவது வாசித்துக் காட்டச் சொல். நாம் எல்லோரும் யெகோவாவுக்கு சரியான
முறையில் சேவை செய்வதற்கும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கும் தேவையான முழு
தகவலையும் பைபிள் நமக்குக் கொடுக்கிறது. அதனால் அடிக்கடி பைபிள் படிப்பதைப்
பழக்கமாக்கிக் கொள்.
என்றாலும் யெகோவா தேவனையும் இயேசு
கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வது மாத்திரமே போதாது. அவர்களையும்
அவர்களுடைய போதகங்களையும் பற்றி நாம் ரொம்பவே அறிந்திருந்தாலும் நித்திய
ஜீவன் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம். அப்படியானால் வேறு எதுவும் நமக்குத்
தேவைப்படுகிறதென்று உனக்குத் தெரியுமா?
நாம் கற்றுக்கொள்கிற
காரியங்களின்படி வாழ வேண்டும். யூதாஸ்காரியோத்தை உனக்கு நினைவிருக்கிறதா?
இயேசு தேர்ந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவனும் ஒருவன். யூதாஸுக்கு
யெகோவாவையும் இயேசுவையும் பற்றி ஏராளமான அறிவு இருந்தது. என்றாலும்
அவனுக்கு என்ன நடந்தது? கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் சுயநலவாதியானான்.
இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்கு காட்டிக் கொடுத்தான். அதனால் யூதாஸுக்கு
நித்திய ஜீவன் கிடைக்காது.
நாம் படித்த கேயாசி என்பவனை உனக்கு நினைவிருக்கிறதா? தனக்குச்
சொந்தமில்லாத சில உடைகளையும் பணத்தையும் அடைய அவன் ஆசைப்பட்டான். அதனால்
ஒரு பொய் சொன்னான். அதற்காக யெகோவா அவனைத் தண்டித்தார். நாம் அவருடைய
சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் நம்மையும்கூட அவர் தண்டிப்பார்.
என்றாலும், யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்த பல நல்ல ஆட்களும்
இருக்கிறார்கள். அவர்களைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் தானே?
சிறுவனாகிய சாமுவேல், நாம் பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரியாக
இருக்கிறான். நாம் பார்த்த பிரகாரம், ஆசரிப்புக் கூடாரத்தில் அவன் யெகோவாவுக்குச் சேவை
செய்ய ஆரம்பித்தபோது அவனுக்கு நான்கு அல்லது ஐந்து வயதுதான் ஆகியிருந்தது
இல்லையா? அப்படியானால், ரொம்ப சின்னப் பிள்ளையாக இருந்தாலும்கூட
யெகோவாவுக்கு நீ சேவை செய்யலாம்.
![]() |
பைபிள் |
நாமெல்லாரும் பின்பற்ற விரும்புகிற நபர் இயேசு கிறிஸ்துதான். காட்டப்பட்டபடி அவர் சிறு பையனாக இருந்தபோதுகூட, ஆலயத்தில் மற்றவர்களிடம்
பரலோகத் தகப்பனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய முன்மாதிரியை
நாம் பின்பற்றுவோமாக. நம்முடைய அருமையான கடவுள் யெகோவாவையும் அவருடைய
குமாரன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி நம்மால் எவ்வளவு பேருக்கு சொல்ல
முடியுமோ அவ்வளவு பேருக்கு சொல்வோமாக. இதையெல்லாம் செய்து வந்தால்,
கடவுளுடைய புதிய பரதீஸ் பூமியில் நாம் என்றென்றும் வாழ முடியும்.
யோவான் 17:3; சங்கீதம் 145:1-21.
கேள்விகள்
- என்றென்றும் வாழ வேண்டுமென்றால் நாம் எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேணடும்?
- இந்தப் படத்திலுள்ள குட்டிப் பெண்ணையும் அவளுடைய நண்பர்களையும் போல யெகோவா தேவனையும் இயேசுவையும் பற்றி நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
- இந்தப் படத்தில் பார்க்கிற இன்னொரு புத்தகம் என்ன, அதை நாம் ஏன் அடிக்கடி வாசிக்க வேண்டும்?
- என்றென்றும் வாழ வேண்டுமானால் யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிக் கற்றுக்கொள்வதோடு வேறு எதுவும் தேவை?
- கதை 69-லிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
- கதை 55-ல் பார்த்த குட்டிப் பையனான சாமுவேலின் சிறந்த உதாரணம் நமக்கு என்ன காட்டுகிறது?
- இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம், அப்போது எதிர்காலத்தில் நம்மால் என்ன செய்ய முடியும்?
கூடுதல் கேள்விகள்
- யோவான் 17:3-ஐ வாசி.
யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வதற்கு வெறுமனே
விஷயங்களை மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது என்பதை பைபிள் வசனங்கள்
எப்படிக் காட்டுகின்றன? (மத். 7:21; யாக். 2:18-20; 1 யோ. 2:17)
- சங்கீதம் 145:1-21-ஐ வாசி. (அ) யெகோவாவைத் துதிப்பதற்கான அநேக காரணங்களில் சில யாவை? (சங். 145:8-11; வெளி. 4:11)
(ஆ) யெகோவா எப்படி ‘எல்லோருக்குமே நல்லவராய்’ இருக்கிறார், இது நம்மை எப்படி அவரிடம் இன்னும் நெருங்கி வரச் செய்கிறது? (சங். 145:9, NW; மத். 5:43-45)
(இ) யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசித்தால் நாம் என்ன செய்வோம்? (சங். 119:171, 172, 175; 145:11, 12, 21)