சுவரில் எழுதப்படுகிற கையெழுத்து
![]() |
சுவரில் எழுதுகிற ஒரு கை |
இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்த மக்கள் ஒரு பெரிய விருந்தை
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விருந்துக்கு முக்கியமான ஆயிரம்
பேரை பாபிலோனிய ராஜா அழைத்திருக்கிறான். எருசலேமில் உள்ள யெகோவாவின்
ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன் பாத்திரங்களையும் வெள்ளிப்
பாத்திரங்களையும் கிண்ணங்களையும் அவர்கள் உபயோகித்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், திடீரென்று ஒரு மனிதனின் கைவிரல்கள் தோன்றி
அங்குள்ள சுவரில் எழுதத் தொடங்குகிறது. அதைப் பார்த்து எல்லோரும்
நடுநடுங்கிப் போகிறார்கள்.
![]() |
பெல்ஷாத்சாரும் அவருடைய விருந்தாளிகளும் |
இப்போது நேபுகாத்நேச்சாரின் பேரன் பெல்ஷாத்சார்தான் ராஜாவாக
இருக்கிறான். ‘நம்முடைய ஞானிகளை உடனடியாக இங்கு கொண்டு வாருங்கள்’ என்று
அவன் உரத்த குரலில் சொல்கிறான். ‘இந்த எழுத்தை வாசித்து அதன் அர்த்தத்தைச்
சொல்பவனுக்கு ஏராளமான பரிசுகள் கொடுக்கப்படும். இந்த ராஜ்யத்தின் மூன்றாவது
முக்கிய அதிபதியாக அவன் ஆக்கப்படுவான்’ என்றும் சொல்கிறான். ஆனால் அந்த
ஞானிகள் ஒருவராலும் சுவரிலிருந்த எழுத்தை வாசிக்கவோ அதன் அர்த்தத்தைச்
சொல்லவோ முடியவில்லை.
இந்தக் கூச்சலையெல்லாம் கேட்டு ராஜாவின்
அம்மா அந்தப் பெரிய அறைக்குள் வருகிறார். ‘தயவுசெய்து பயப்பட வேண்டாம்,
பரிசுத்த கடவுளை அறிந்திருக்கிற ஒருவர் உன்னுடைய ராஜ்யத்தில் இருக்கிறார்.
உன்னுடைய தாத்தா நேபுகாத்நேச்சார் ராஜாவாக இருந்தபோது அவரைத் தனது ஞானிகள்
எல்லோருக்கும் மேலாகத் தலைமை அதிகாரியாக வைத்தார். அவருடைய பெயர் தானியேல்.
அவரைக் கூப்பிட்டு அனுப்பும். இந்த எல்லாவற்றின் அர்த்தம் என்ன என்பதை
அவர் உனக்குச் சொல்வார்’ என்று ராஜாவிடம் சொல்கிறார்.
எனவே,
தானியேல் உடனடியாக வரவழைக்கப்படுகிறார். எந்த வெகுமதிகளையும் ஏற்க அவர்
மறுத்துவிடுகிறார், பிறகு பெல்ஷாத்சாரின் தாத்தாவான நேபுகாத்நேச்சாரை ராஜ
பதவியிலிருந்து யெகோவா ஏன் விலக்கினார் என்பது பற்றி சொல்லத்
தொடங்குகிறார். ‘நேபுகாத்நேச்சார் ரொம்பவும் பெருமைபிடித்தவராய் இருந்தார்.
அதனால் யெகோவா அவரைத் தண்டித்தார்.’
‘அவருக்கு என்னவெல்லாம்
நடந்ததென்று உமக்குத் தெரிந்திருந்தபோதிலும் அவரைப் போலவே நீரும்
பெருமைபிடித்தவராக இருக்கிறீர். யெகோவாவின் ஆலயத்திலிருந்து கொண்டுவந்த
இந்தப் பானபாத்திரங்களிலும் கிண்ணங்களிலும் குடித்தீர். மரத்தாலும்
கல்லாலும் செய்யப்பட்ட கடவுட்களை புகழ்ந்தீர், நம்முடைய மகத்தான
சிருஷ்டிகரை நீர் கனப்படுத்தவில்லை. அதனால்தான் இந்த வார்த்தைகளை
எழுதுவதற்கு கடவுளே இந்தக் கையை அனுப்பினார்’ என்று பெல்ஷாத்சாருக்குச்
சொல்கிறார்.
சுவரில் எழுதப்பட்டிருப்பது இதுவே: ‘மெனே, மெனே, தெக்கேல், பார்சின்.’
மெனே என்பதற்கு கடவுள் உன்னுடைய ராஜ்யத்தின் நாட்களை எண்ணிவிட்டார்
என்றும் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார் என்றும் அர்த்தம்.
தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுத்தப்பட்டு குறையுள்ளவனாய்
காணப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தம். பார்சின் என்பதற்கு உன்னுடைய ராஜ்யம்
மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்’
என்று தானியேல் விளக்குகிறார்.
தானியேல் இப்படிப் பேசிக்
கொண்டிருக்கையிலேயே மேதியரும் பெர்சியரும் பாபிலோனைத் தாக்கத்
தொடங்குகிறார்கள். அந்த நகரத்தைக் கைப்பற்றி பெல்ஷாத்சாரைக் கொன்றும்
விடுகிறார்கள். சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள் அதே இரவிலேயே நிறைவேறின!
ஆனால் இஸ்ரவேலருக்கு இப்போது என்ன நடக்கப் போகிறது? அதைப் பார்ப்பதற்கு
முன், தானியேலுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
தானியேல் 5:1-31.
கேள்விகள்
- யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களையும் கிண்ணங்களையும் ஒரு பெரிய விருந்தின்போது பாபிலோனின் ராஜா உபயோகித்துக் கொண்டிருக்கையில் என்ன நடக்கிறது?
- ஞானிகளிடம் பெல்ஷாத்சார் என்ன சொல்கிறான், ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியவில்லை?
- ராஜாவின் அம்மா என்ன செய்யச் சொல்கிறார்?
- ராஜாவிடம் தானியேல் சொல்கிறபடி, இந்த வார்த்தைகளை எழுதுவதற்குக் கடவுள் ஏன் இந்தக் கையை அனுப்பினார்?
- சுவரிலுள்ள இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை தானியேல் எப்படி விளக்குகிறார்?
- தானியேல் பேசிக்கொண்டிருக்கையிலேயே என்ன நடக்கிறது?
கூடுதல் கேள்விகள்
- தானியேல் 5:1-31-ஐ வாசி.
(அ) தேவ பயத்திற்கும், சுவரிலுள்ள வார்த்தைகளைப் பார்த்தபோது பெல்ஷாத்சார்
அடைந்த பயத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல். (தானி. 5:6, 7; சங்.
19:9; ரோ. 8:35-39)
(ஆ) பெல்ஷாத்சாருக்கும் பிரபுக்களுக்கும் முன்பாக தானியேல் எவ்வாறு மிக தைரியமாகப் பேசினார்? (தானி. 5:17, 18, 22, 26-28; அப். 4:30)
(இ) தானியேல் 5-ம் அதிகாரம் யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை எவ்விதத்தில் சிறப்பித்துக் காட்டுகிறது? (தானி. 4:17, 25; 5:21)
No comments:
Post a Comment