Wednesday, 4 December 2013

மோசே ஏன் ஓடிப்போனார்

மோசே ஏன் ஓடிப்போனார்

எகிப்தை விட்டு மோசே ஓடிப்போவதைப் பார். அவரைத் துரத்திக் கொண்டுவரும் ஆட்களை உன்னால் பார்க்க முடிகிறதா? அவர்கள் ஏன் மோசேயைக் கொல்ல நினைக்கிறார்களென்று உனக்குத் தெரியுமா? இப்போது நாம் அதைக் கண்டுபிடிக்கலாம். 
மோசே எகிப்தைவிட்டு ஓடிப்போகிறார்
மோசே எகிப்தைவிட்டு ஓடிப்போகிறார்


எகிப்தின் ராஜாவான பார்வோனின் வீட்டில் மோசே வளர்ந்து வந்தார். நல்ல அறிவாளியாகவும் மகா திறமைசாலியாகவும் ஆனார். தான் ஒரு எகிப்தியன் அல்ல, ஆனால் தான் ஒரு இஸ்ரவேலன் என்பதை மோசே அறிந்திருந்தார், தன்னுடைய சொந்த அப்பாவும் அம்மாவும் இஸ்ரவேல அடிமைகள் என்பதையும் அறிந்திருந்தார்.
ஒருநாள், தன்னுடைய ஜனத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து வர மோசே தீர்மானித்தார், அப்போது அவருக்கு 40 வயது. இஸ்ரவேல் ஜனங்கள் படுபயங்கரமாக நடத்தப்பட்டு வந்தார்கள். எகிப்தியன் ஒருவன் ஓர் இஸ்ரவேல அடிமையை அடித்துக் கொண்டிருப்பதை மோசே பார்த்தார். உடனே சுற்றிமுற்றி நோட்டமிட்டு, எவரும் கவனிக்காதபோது அந்த எகிப்தியனை அடித்துப் போட்டார். அடித்த அடியில் அவன் செத்தே போனான். பின்பு அவனுடைய உடலை மணலில் புதைத்துப்போட்டார்.
அடுத்த நாள் மோசே மறுபடியுமாக தன் ஜனத்தாரைப் பார்க்கப் போனார். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்க தன்னால் முடியுமென்று நினைத்தார். அந்தச் சமயத்தில் இஸ்ரவேலர் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். எனவே, தவறு செய்தவரிடம்: ‘உன் சகோதரனை ஏன் அடிக்கிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆள்: ‘உன்னை எங்கள் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் யார் வைத்தது? அந்த எகிப்தியனைக் கொன்றது போல் என்னையும் கொல்லப் போகிறாயா?’ என்று கேட்டான்.
மோசேக்கு இப்பொழுது பயமாகிவிட்டது. அந்த எகிப்தியனைக் கொன்றது ஜனங்களுக்கு தெரிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார். பார்வோனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு, மோசேயைக் கொல்ல ஆட்களை அனுப்பினான். அதனால்தான் மோசே எகிப்தை விட்டு ஓடிப்போக நேர்ந்தது.
மோசே எகிப்தை விட்டு வெகு தூரத்திலிருந்த மீதியான் தேசத்திற்குச் சென்றார். அங்கே எத்திரோவின் குடும்பத்தைச் சந்தித்து அவருடைய மகள் சிப்போராளைக் கல்யாணம் செய்தார். மேய்ப்பனான எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தார். அந்த மீதியான் தேசத்தில் அவர் 40 வருஷம் வாழ்ந்தார். இப்போது அவருக்கு 80 வயது ஆகிவிட்டது. ஒருநாள், அவர் எத்திரோவின் ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் ஆச்சரியமான ஒரு காரியம் நடந்தது. அது மோசேயின் முழு வாழ்க்கையையும் மாற்றியது. அந்த ஆச்சரியமான காரியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
யாத்திராகமம் 2:11-25; அப்போஸ்தலர் 7:22-29.


கேள்விகள்

  • மோசே எங்கு வளர்ந்தார், தன்னுடைய சொந்த அப்பா, அம்மாவைப் பற்றி அவர் என்ன அறிந்திருந்தார்?
  • மோசேக்கு 40 வயதிருக்கும்போது அவர் என்ன செய்தார்?
  • சண்டை போட்டுக் கொண்டிருந்த ஓர் இஸ்ரவேலனிடம் மோசே என்ன சொன்னார், அதற்கு அந்த ஆள் என்ன கேட்டான்?
  • மோசே எகிப்தை விட்டு ஏன் ஓடிப்போனார்?
  • மோசே எங்கு ஓடிப்போனார், அங்கு யாரைச் சந்தித்தார்?
  • எகிப்திலிருந்து ஓடிப்போன பிறகு 40 வருஷம் அவர் என்ன செய்தார்?

கூடுதல் கேள்விகள்

  • யாத்திராகமம் 2:11-25-ஐ வாசி. மோசேக்கு பல வருடங்கள் எகிப்தியரின் ஞானம் கற்பிக்கப்பட்ட போதிலும் யெகோவாவிடமும் அவருடைய ஜனங்களிடமும் எப்படி விசுவாசத்தைக் காட்டினார்? (யாத். 2:11, 12; எபி. 11:24)
  • அப்போஸ்தலர் 7:22-29-ஐ வாசி. எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க மோசே தானாகவே முயன்றதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (அப். 7:23-25; 1 பே. 5:6, 10)

No comments:

Post a Comment