Thursday, 5 December 2013

இஸ்ரவேலில் ஒரு திருடன்

இஸ்ரவேலில் ஒரு திருடன்

இந்த ஆள் தன் கூடாரத்தில் எதைப் புதைத்துக் கொண்டிருக்கிறான் பார்! ஓர் அழகிய அங்கி, நீளமான ஒரு தங்கக் கட்டி, சில வெள்ளிக் காசுகள். இவற்றை அவன் எரிகோ பட்டணத்திலிருந்து எடுத்திருக்கிறான். ஆனால் எரிகோவிலுள்ள பொருட்களை என்ன செய்திருக்க வேண்டும்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா? 
தான் திருடியதை ஆகான் ஒளித்து வைக்கிறான்
தான் திருடியதை ஆகான் ஒளித்து வைக்கிறான்

அவற்றை அழித்திருக்க வேண்டும், பொன்னையும் வெள்ளியையும் யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தின் பொக்கிஷத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவருக்குச் சொந்தமான பொருட்களை திருடியிருக்கிறார்கள். அந்த ஆளின் பெயர் ஆகான், அவனுடன் இருக்கிறவர்கள் அவனுடைய குடும்பத்தார். என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கலாம்.
ஆகான் இந்தப் பொருட்களைத் திருடிய பின்பு, ஆயி என்ற பட்டணத்துடன் போர் செய்வதற்கு யோசுவா சில ஆட்களை அனுப்புகிறார். ஆனால் போரில் அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள், மீதிப் பேர் ஓடிவிடுகிறார்கள். அதனால் யோசுவா மிகவும் கவலைப்படுகிறார். அவர் முகங்குப்புற தரையில் விழுந்து யெகோவாவிடம் ஜெபிக்கையில்: ‘நாங்கள் இப்படித் தோற்றுப்போகும்படி ஏன் அனுமதித்தீர்?’ என்று கேட்கிறார்.
அதற்கு யெகோவா: ‘எழுந்திரு! இஸ்ரவேலர் பாவம் செய்திருக்கிறார்கள். அழிக்கப்பட வேண்டிய பொருட்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய பொருட்களிலும் சிலவற்றை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். ஓர் அழகிய அங்கியைத் திருடி அதை இரகசியமாய் ஒளித்து வைத்திருக்கிறார்கள். திருடியவனையும் அவன் எடுத்த பொருட்களையும் நீ அழிக்கும் வரை நான் உன்னை ஆசீர்வதிக்க மாட்டேன்’ என்று சொல்கிறார். அந்தக் கெட்ட ஆள் யார் என்பதைக் காட்டப் போவதாகவும் யோசுவாவிடம் அவர் சொல்கிறார்.
அதனால் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூடி வரும்படி யோசுவா சொல்கிறார். அந்தக் கெட்ட மனிதன் ஆகானை யெகோவா அடையாளம் காட்டுகிறார். அப்போது அவன்: ‘நான் பாவம் செய்தேன். ஓர் அழகிய அங்கியையும், ஒரு தங்கக் கட்டியையும், வெள்ளிக் காசுகளையும் பார்த்தேன். ரொம்ப ஆசைப்பட்டதால் அவற்றை எடுத்துக்கொண்டேன். என் கூடாரத்திற்குள் அவற்றை புதைத்து வைத்திருக்கிறேன், நீங்கள் போய் பார்க்கலாம்’ என்று சொல்கிறான்.
இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு யோசுவாவிடம் கொண்டு வரப்பட்டன; அப்போது, அவர் ஆகானிடம்: ‘எங்களுக்கு ஏன் இப்படியொரு தொல்லை கொடுத்தாய்? இப்போது பார், யெகோவா உனக்கு தொல்லை கொடுப்பார்!’ என்று சொல்கிறார். அப்பொழுது ஜனங்கள் எல்லோரும் ஆகானையும் அவனுடைய குடும்பத்தையும் கல்லெறிந்து கொல்கிறார்கள். நமக்குச் சொந்தமில்லாத பொருட்களை நாம் ஒருபோதும் எடுக்கக் கூடாதென்று இது காட்டுகிறது அல்லவா?
அதன் பின்பு இஸ்ரவேலர் ஆயிக்கு விரோதமாக மறுபடியும் போர் செய்கிறார்கள். இந்த முறை அவர்களுக்கு யெகோவா உதவி செய்கிறார், போரில் அவர்கள் வெற்றியடைகிறார்கள்.
யோசுவா 7:1-26; 8:1-29.


கேள்விகள்

  • படத்தில், எரிகோவிலிருந்து எடுத்த பொருட்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறவன் யார், இவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பவர்கள் யார்?
  • ஆகானும் அவனுடைய குடும்பத்தாரும் செய்தது ஏன் படுமோசமான காரியம்?
  • ஆயி பட்டணத்தாருடன் செய்த போரில் இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணத்தை யோசுவா கேட்கும்போது யெகோவா என்ன சொல்கிறார்?
  • ஆகானும் அவனுடைய குடும்பத்தாரும் யோசுவாவுக்கு முன் நிறுத்தப்பட்டபோது என்ன நடக்கிறது?
  • ஆகானுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்ன முக்கிய பாடத்தைக் கற்பிக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • யோசுவா 7:1-26-ஐ வாசி. (அ) படைப்பாளருக்கும் தனக்கும் இருந்த பந்தத்தைப் பற்றி யோசுவா செய்த ஜெபங்கள் என்ன தெரிவிக்கின்றன? (யோசு. 7:7-9; சங். 119:145; 1 யோ. 5:14)
    (ஆ) ஆகானின் உதாரணம் என்ன காட்டுகிறது, இது எப்படி நமக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கிறது? (யோசு. 7:11, 14, 15; நீதி. 15:3; 1 தீ. 5:24; எபி. 4:13)
  • யோசுவா 8:1-29-ஐ வாசி. இன்று கிறிஸ்தவ சபையில் நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு உள்ளது? (யோசு. 7:13; லேவி. 5:1; நீதி. 28:13)

No comments:

Post a Comment