Monday, 9 December 2013

சிங்கங்களின் குகையில் தானியேல்

சிங்கங்களின் குகையில் தானியேல்

ஐயையோ! தானியேல் பயங்கரமான ஒரு ஆபத்தில் மாட்டியிருப்பது போல் தெரிகிறதே. ஆனால் அந்தச் சிங்கங்கள் அவரை ஒன்றுமே செய்யவில்லை! ஏன் என்று உனக்குத் தெரியுமா? தானியேலை இந்தச் சிங்கங்கள் நடுவில் போட்டது யார்? நாம் பார்க்கலாம்.
தரியு என்பவர் இப்போது பாபிலோனின் ராஜா. தானியேல் ரொம்ப அன்பானவராகவும் அறிவுள்ளவராகவும் இருப்பதால் தரியுவுக்கு அவரைக் கண்டால் ரொம்ப பிடிக்கும். தானியேலை தரியு தன் ராஜ்யத்தில் தலைமை அதிபதியாக நியமிக்கிறார். அதனால் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்ற ஆட்களுக்கு தானியேல் மீது பொறாமை. அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? 

தரியு
தரியு

தரியுவிடம் சென்று: ‘ராஜாவே, 30 நாட்களுக்கு உம்மைத் தவிர வேறு எந்தக் கடவுளையோ மனிதனையோ ஒருவரும் வணங்கக் கூடாதென்ற ஒரு சட்டத்தை நீர் பிறப்பிக்க வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். எவனாவது இதற்குக் கீழ்ப்படியாமல் போனால் அவனைச் சிங்கங்களுக்கு நடுவில் எறிந்துவிட வேண்டும்’ என்று சொல்கிறார்கள். எதற்காக இவர்கள் இந்தச் சட்டம் போடச் சொல்கிறார்கள் என்று தரியுவுக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல ஆலோசனை என்று நினைத்துக்கொண்டு அந்தச் சட்டத்தை தன் கைப்பட எழுதுகிறார். இனி இந்தச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.
இந்தச் சட்டத்தைப் பற்றி தானியேல் கேள்விப்படுகிறார், ஆனாலும் வீட்டுக்குப் போய் எப்போதும் போல் ஜெபிக்கிறார். யெகோவாவிடம் ஜெபிப்பதை தானியேல் நிறுத்தமாட்டார் என்று அந்தக் கெட்ட ஆட்களுக்குத் தெரியும். தானியேலை ஒழித்துக்கட்டுவதற்குத் தாங்கள் போட்ட சதித்திட்டம் வேலை செய்வது போல் இருப்பதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
என்ன காரணத்திற்காக இந்த ஆட்கள் இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டுவர விரும்பினார்கள் என்பதை தரியு ராஜா அறிந்து கொண்டபோது மிகவும் வருத்தப்படுகிறார். அந்தச் சட்டத்தை இனி அவரால்கூட மாற்ற முடியாது, எனவே, வேறு வழியில்லாமல் தானியேலை சிங்கங்களின் குகையில் எறியும்படி கட்டளையிடுகிறார். ஆனால் தானியேலிடம்: ‘நீ சேவிக்கிற உன் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்’ என்று சொல்கிறார்.
தரியுவுக்கு ரொம்பவும் மனசங்கடமாக இருப்பதால் அன்றைக்கு ராத்திரி அவரால் தூங்கவே முடியவில்லை. மறுநாள் காலை அந்தச் சிங்கங்களின் குகைக்கு அவர் ஓடுகிறார். அவரை நீ இங்கே பார்க்கலாம். குகைக்குள் எட்டிப் பார்த்து: ‘தானியேலே, உயிருள்ள கடவுளுடைய ஊழியனே! நீ சேவிக்கிற கடவுள் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினாரா?’ என்று உரத்த குரலில் கேட்கிறார். 
சிங்கங்களின் குகையில் தானியேல்
சிங்கங்களின் குகையில் தானியேல்

அதற்கு தானியேல்: ‘ஆம், சிங்கங்கள் எனக்கு எந்தத் தீங்கும் செய்யாதபடி கடவுள் தம்முடைய தேவதூதனை அனுப்பி அவற்றின் வாயைக் கட்டிப்போட்டார்’ என்கிறார்.
ராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனடியாக தானியேலை சிங்கக் குகையிலிருந்து வெளியே தூக்கி விடும்படி கட்டளையிடுகிறார். பிறகு, தானியேலை ஒழித்துக்கட்ட முயன்ற அந்தக் கெட்ட ஆட்களைச் சிங்கங்களுக்கு இரையாக எறியச் சொல்கிறார். அந்த ஆட்கள் குகைக்குள் முழுவதுமாக விழக்கூட இல்லை, அதற்குள் அந்தச் சிங்கங்கள் பாய்ந்து வந்து அவர்களைக் கடித்துக் குதறி அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கி விடுகின்றன.
பிறகு, தரியு ராஜா தன் ராஜ்யத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் இவ்வாறு எழுதுகிறார்: ‘தானியேலின் கடவுளுக்கு எல்லோரும் மரியாதை செலுத்த வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர் பெரிய பெரிய அற்புதங்களைச் செய்கிறவர். சிங்கங்களின் வாயிலிருந்து தானியேலைக் காப்பாற்றியிருக்கிறார்.’
தானியேல் 6:1-28.


கேள்விகள்

  • தரியு என்பவர் யார், தானியேலை அவர் எப்படிக் கருதுகிறார்?
  • பொறாமை பிடித்த சில ஆட்கள் தரியுவை என்ன செய்யச் சொல்கிறார்கள்?
  • இந்தப் புதிய சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டாலும் தானியேல் என்ன செய்கிறார்?
  • தூக்கமே வராதளவுக்கு தரியு ஏன் ரொம்பவும் மனசங்கடப்படுகிறார், மறுநாள் காலை அவர் என்ன செய்கிறார்?
  • தரியு கேட்ட கேள்விக்கு தானியேல் என்ன பதிலளிக்கிறார்?
  • தானியேலை ஒழித்துக்கட்ட முயன்ற அந்தக் கெட்ட ஆட்களுக்கு என்ன நடக்கிறது, தன் ராஜ்யத்திலுள்ள எல்லோருக்கும் தரியு என்ன எழுதுகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • தானியேல் 6:1-28-ஐ வாசி. (அ) தானியேலுக்கு விரோதமாக செய்யப்பட்ட சதித்திட்டம், நம்முடைய காலத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை நிறுத்துவதற்கு விரோதிகள் செய்துள்ள காரியங்களை நமக்கு எப்படி நினைப்பூட்டுகின்றன? (தானி. 6:7; சங். 94:20; ஏசா. 10:1; ரோ. 8:31)
    (ஆ) “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” கீழ்ப்பட்டிருப்பதில் இன்று கடவுளுடைய ஊழியர்கள் எவ்வாறு தானியேலின் மாதிரியைப் பின்பற்றலாம்? (தானி. 6:5, 10; ரோ. 13:1; அப். 5:29)
    (இ) யெகோவாவை “இடைவிடாமல்” சேவிப்பதில் தானியேலின் மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (தானி. 6:16, 20; பிலி. 3:16; வெளி. 7:15)

No comments:

Post a Comment