எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்
யெகோவாவிடம் இந்த நபர் எதற்காக ஜெபித்துக்
கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? யெகோவாவின் பலிபீடத்திற்கு முன்
இந்தக் கடிதங்களை இவர் ஏன் வைத்திருக்கிறார்? இவருடைய பெயர் எசேக்கியா.
இவர் இஸ்ரவேலின் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தின் ராஜா. இவர் பயங்கரமான
பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ஏன்?
![]() |
எசேக்கியா ராஜா ஜெபம் செய்கிறார் |
ஏனென்றால் அசீரியப் படைகள் 10 கோத்திர வடக்கு ராஜ்யத்தை ஏற்கெனவே
அழித்து விட்டன. ஜனங்கள் மிக மோசமானவர்களாக இருந்ததால் யெகோவா அதை
அனுமதித்தார். இப்போது அசீரியப் படைகள் இந்த இரண்டு கோத்திர ராஜ்யத்துடன்
போர் செய்ய வந்திருக்கின்றன.
அசீரிய ராஜா இப்போதுதான் எசேக்கியா
ராஜாவுக்குக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதங்களையே
கடவுளுக்கு முன்பாக அவர் வைத்திருக்கிறார். அந்தக் கடிதங்களில் யெகோவாவைப்
பற்றி கேலியாக எழுதப்பட்டிருக்கிறது, எசேக்கியா சரணடையும்படியும்
சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவர் யெகோவாவை நோக்கி: ‘யெகோவா தேவனே,
அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், அப்போது நீர் ஒருவரே கடவுள்
என்று எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்’ என்று ஜெபிக்கிறார்.
எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளிப்பாரா?
எசேக்கியா ஒரு
நல்ல ராஜா. இஸ்ரவேலின் 10 கோத்திர ராஜ்யத்தின் கெட்ட ராஜாக்களைப் போன்றவர்
அல்ல. தன்னுடைய கெட்ட அப்பாவான ஆகாஸ் ராஜாவைப் போன்றவரும் அல்ல. யெகோவாவின்
சட்டங்கள் எல்லாவற்றிற்கும் எசேக்கியா கவனமாக கீழ்ப்படிந்திருக்கிறார்.
அதனால், எசேக்கியா ஜெபித்து முடித்ததும் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா
ஒரு செய்தியை அவருக்கு அனுப்புகிறார், அதாவது: ‘அசீரிய ராஜா எருசலேமுக்குள்
வர மாட்டான். அவனுடைய படைவீரர்களில் ஒருவனும் எருசலேமின் அருகில்கூட வர
மாட்டார்கள். நகரத்தின் மீது ஒரு அம்பையும் எய்ய மாட்டார்கள்!’
இங்குள்ள படத்தைப் பார். செத்துப் போயிருக்கும் இந்தப் படைவீரர்கள் யார்
என்று உனக்குத் தெரியுமா? இவர்கள் அசீரியர்கள். யெகோவா ஒரு தேவதூதனை
அனுப்பினார், அந்தத் தேவதூதன் ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய
படைவீரர்களைக் கொன்று போட்டார். அதனால் அசீரிய ராஜா போர் செய்யாமல் தன்
தேசத்துக்கே திரும்பிப் போய் விட்டான்.
![]() |
இறந்துபோன அசீரிய படைவீரர்கள் |
இப்படியாக, இரண்டு கோத்திர ராஜ்யம் பாதுகாக்கப்பட்டது, சிறிது
காலத்திற்கு ஜனங்கள் சமாதானமாக வாழ்ந்தார்கள், ஆனால் எசேக்கியா இறந்த
பின்பு அவருடைய மகன் மனாசே ராஜாவாக ஆகிறார். மனாசேயும் அவருடைய மகன்
ஆமோனும் மிக மோசமான ராஜாக்கள். அதனால் மறுபடியும் தேசத்தில் பயங்கர
குற்றச்செயல்களும் வன்முறையும் அதிகரிக்கிறது. ஆமோன் ராஜாவை சொந்த
வேலைக்காரர்களே கொலை செய்துவிடுகிறார்கள், பிறகு அவருடைய மகன் யோசியா
இரண்டு கோத்திர ராஜ்யத்தின் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார்.
2 இராஜாக்கள் 18:1-36; 19:1-37; 21:1-25.
கேள்விகள்
- படத்திலுள்ள நபர் யார், இவர் ஏன் பயங்கரமான பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்?
- யாருடைய கடிதங்களை கடவுளுக்கு முன்பாக எசேக்கியா வைத்திருக்கிறார், கடவுளிடம் அவர் என்ன ஜெபிக்கிறார்?
- எசேக்கியா எப்படிப்பட்ட ராஜா, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் என்ன செய்தியை யெகோவா அனுப்புகிறார்?
- அசீரியர்களை யெகோவாவின் தூதன் என்ன செய்கிறார்? படத்தைப் பார்த்துச் சொல்.
- இரண்டு கோத்திர ராஜ்யத்திலுள்ள ஜனங்கள் சிறிது காலத்திற்கு சமாதானமாக வாழ்ந்தாலும், எசேக்கியா இறந்த பிறகு என்ன நடக்கிறது?
கூடுதல் கேள்விகள்
- இரண்டு இராஜாக்கள் 18:1-36-ஐ வாசி.
(அ) அசீரியரின் சார்பாக பேச வந்த ரப்சாக்கே எவ்வாறு இஸ்ரவேலரின்
விசுவாசத்தைக் குலைத்துப்போட முயன்றான்? (2 இரா. 18:19, 21; யாத். 5:2;
சங். 64:3, 4)
(ஆ) விரோதிகளிடம் நடந்துகொள்ளும் விதத்தில், யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு எசேக்கியாவின் உதாரணத்தை மனதில் வைக்கிறார்கள்? (2 இரா. 18:36; சங். 39:1; நீதி. 26:4; 2 தீ. 2:24)
- இரண்டு இராஜாக்கள் 19:1-37-ஐ வாசி.
(அ) கஷ்ட காலத்தில் இன்று யெகோவாவின் ஜனங்கள் எப்படி எசேக்கியாவைப்
பின்பற்றுகிறார்கள்? (2 இரா. 19:1, 2; நீதி. 3:5, 6; எபி. 10:24, 25; யாக்.
5:14, 15)
(ஆ) என்ன மூன்று விதங்களில் சனகெரிப் ராஜா தோல்வியைத் தழுவினான், அவன் யாருக்குத் தீர்க்கதரிசன படமாக இருக்கிறான்? (2 இரா. 19:32, 35, 37; வெளி. 20:2, 3)
- இரண்டு இராஜாக்கள் 21:1-6, 16-ஐ வாசி. எருசலேமை ஆண்ட மிகவும் கெட்ட ராஜாக்களில் மனாசேயும் ஒருவர் என்று ஏன் சொல்லலாம்? (2 நா. 33:4-6, 9)
No comments:
Post a Comment