கிதியோனும் அவருடைய 300 ஆட்களும்
இங்கே என்ன நடக்கிறதென்று உனக்குத்
தெரிகிறதா? இவர்கள் எல்லோரும் இஸ்ரவேல் வீரர்கள். இவர்கள் குனிந்து கொண்டு
தண்ணீர் குடிக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பது
நியாயாதிபதி கிதியோன். அவர்கள் எப்படித் தண்ணீர் குடிக்கிறார்கள் என்பதை
அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் எப்படித் தண்ணீர்
குடிக்கிறார்கள் என்று கவனமாகப் பார். சிலர் குனிந்தவாறு குடிக்கிறார்கள்.
ஆனால் ஒருவன் மட்டும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதற்காக
தண்ணீரை கைகளில் அள்ளியெடுத்துக் குடிக்கிறான். இது முக்கியம், ஏனென்றால்
தண்ணீர் குடிக்கையில்கூட உஷாராக இருக்கிற ஆட்களை மாத்திரமே
தேர்ந்தெடுக்கும்படி யெகோவா கிதியோனிடம் கூறினார். மற்றவர்களை வீட்டுக்கு
அனுப்பி விடும்படியும் கூறினார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இஸ்ரவேலர் மறுபடியும் ஏகப்பட்ட பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதே அதற்குக் காரணம். மீதியான் தேசத்தார்
அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைக் கொடூரமாக நடத்துகிறார்கள். எனவே,
யெகோவாவை நோக்கி அவர்கள் கதறுகிறார்கள். அவர்களுடைய கதறலைக் கேட்டு யெகோவா
உதவி செய்கிறார்.
ஒரு படையைத் திரட்டும்படி கிதியோனிடம் யெகோவா
சொல்கிறார். அவ்வாறே கிதியோன் 32,000 போர் வீரர்களைத் திரட்டுகிறார். ஆனால்
எதிரிகளின் படையில் 1,35,000 ஆட்கள் இருக்கிறார்கள். என்றபோதிலும், யெகோவா
கிதியோனிடம்: ‘உன்னிடம் அளவுக்கதிகமான ஆட்கள் இருக்கிறார்கள்’ என்று
சொல்கிறார். யெகோவா ஏன் அப்படிச் சொன்னார்?
இஸ்ரவேலர் போரில்
வெற்றியடைந்தால், தங்கள் சொந்த பலத்தினால்தான் வெற்றி கிடைத்ததென்று
ஒருவேளை நினைத்துவிடலாம். அதோடு வெற்றியடைய தங்களுக்கு யெகோவாவின் உதவி
தேவைப்படவில்லை என்றும் நினைத்துவிடலாம். அதனால்தான் கிதியோனிடம் யெகோவா:
‘பயப்படுகிற எல்லா ஆட்களையும் வீட்டுக்குப் போய்விடச் சொல்’ என்று
கூறுகிறார். கிதியோன் அப்படிச் சொன்னவுடன் 22,000 வீரர்கள் வீட்டுக்குச்
சென்று விடுகிறார்கள். இப்போது 1,35,000 போர் வீரருக்கு எதிராகப் போர்
செய்ய 10,000 பேர் மாத்திரமே இருக்கிறார்கள்.
ஆனாலும் கிதியோனிடம் யெகோவா என்ன சொல்கிறார் என்று கேள்! ‘இன்னும்
உன்னிடத்தில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்’ என்று சொல்கிறார். எனவே,
நீரோடையிலிருந்து தண்ணீர் குடிக்குமாறு அந்த ஆட்களுக்குக் கட்டளையிடச்
சொல்கிறார். யாரெல்லாம் குனிந்து தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்களையெல்லாம்
வீட்டுக்கு அனுப்பிவிடச் சொல்கிறார். ‘சுற்றும் முற்றும் கவனித்தவாறே
தண்ணீர் குடிக்கிற 300 ஆட்களை மட்டுமே வைத்து நான் உனக்கு வெற்றி
கொடுப்பேன்’ என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார்.
![]() |
கிதியோன் அவருடைய மனிதர்களைச் சோதிக்கிறார் |
போர் செய்யும்
நேரம் வருகிறது. 300 ஆட்களை மூன்று பகுதிகளாக கிதியோன் நிறுத்துகிறார்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எக்காளத்தையும் ஒவ்வொரு பானையையும்
அதற்குள் தீவட்டியையும் கொடுக்கிறார். ஏறக்குறைய நடுராத்திரியில்
எதிரிகளின் பாளயத்தைச் சுற்றிக் கூடுகிறார்கள். பின்பு, ஒரே சமயத்தில்
அவர்கள் எல்லோரும் எக்காளம் ஊதி, பானைகளை உடைத்து: ‘யெகோவாவின் பட்டயம்
கிதியோனின் பட்டயம்!’ என்று கத்தி ஆரவாரம் செய்கிறார்கள்.
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட எதிரிகள் எல்லோரும் என்ன நடக்கிறதென்று
புரியாமல் குழம்பிப் போகிறார்கள், பயத்தில் தலைதெறிக்க ஓடிவிடுகிறார்கள்.
இப்படியாக இஸ்ரவேலருக்கு அந்த யுத்தத்தில் வெற்றி கிடைக்கிறது.
நியாயாதிபதிகள் 6-8 அதிகாரங்கள்.
கேள்விகள்
- இஸ்ரவேலர் ஏகப்பட்ட பிரச்சினையில் மாட்டிக்கொள்வது எப்படி, ஏன்?
- கிதியோனின் படையில் அளவுக்கதிகமான ஆட்கள் இருப்பதாக யெகோவா ஏன் சொல்கிறார்?
- பயப்படுகிற எல்லா ஆட்களையும் வீட்டுக்குப் போய்விடும்படி கிதியோன் சொன்ன பிறகு மீதி எத்தனை பேர் இருக்கிறார்கள்?
- கிதியோனின் படை ஆட்களை வெறும் 300 பேராக யெகோவா எப்படிக் குறைக்கிறார் என்று படத்தைப் பார்த்துச் சொல்.
- அந்த 300 பேரை கிதியோன் எப்படி ஒழுங்கமைக்கிறார், யுத்தத்தில் இஸ்ரவேலர் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
- நியாயாதிபதிகள் 6:36-40-ஐ வாசி. (அ) யெகோவாவின் சித்தத்தை கிதியோன் எப்படி உறுதிப்படுத்திக்கொண்டார்?
(ஆ) யெகோவாவின் சித்தம் என்னவென்பதை இன்று நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்? (நீதி. 2:3-6; மத். 7:7-11; 2 தீ. 3:16, 17)
- நியாயாதிபதிகள் 7:1-25-ஐ வாசி.
(அ) கவனக்குறைவாக இருந்தவர்களைப் போல் அல்லாமல் உஷாராக இருந்த 300
பேரிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 7:3, 6; ரோ.
13:11, 12; எபே. 5:15-17)
(ஆ) கிதியோன் செய்ததை அப்படியே பின்பற்றிய 300 பேரைப் போல, பெரிய கிதியோனான இயேசு கிறிஸ்துவை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்? (நியா. 7:17; மத். 11:29, 30; 28:19, 20; 1 பே. 2:21)
(இ) யெகோவாவின் அமைப்பில் நமக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியுடன் சேவை செய்வதற்கு நியாயாதிபதிகள் 7:21 நமக்கு எப்படி உதவுகிறது? (1 கொ. 4:2; 12:14-18; யாக். 4:10)
- நியாயாதிபதிகள் 8:1-3-ஐ வாசி.
ஒரு சகோதரருடனோ சகோதரியுடனோ ஏற்பட்ட மனஸ்தாபத்தைத் தீர்க்க வேண்டிய
சமயத்தில், எப்பிராயீமியரின் வாக்குவாதத்தை கிதியோன் சமாளித்த
விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நீதி. 15:1; மத். 5:23, 24;
லூக். 9:48)
No comments:
Post a Comment