ஆலயத்தில் இளம் இயேசு
ஒரு சிறு பையன் பெரியவர்களுடன் பேசிக்
கொண்டிருப்பதைப் பார். அந்தப் பெரியவர்கள் எருசலேமிலுள்ள தேவாலயத்தில்
போதகர்களாக இருக்கிறார்கள். அந்தப் பையன் இயேசுவே. அவர் இப்போது ஓரளவு
வளர்ந்திருக்கிறார். 12 வயது ஆகியிருக்கிறது.
கடவுளைப் பற்றியும்
பைபிளில் உள்ள விஷயங்களைப் பற்றியும் இயேசு நன்றாக தெரிந்து
வைத்திருப்பதைப் பார்த்து அந்தப் போதகர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆனால்
யோசேப்பையும் மரியாளையும் காணோமே? அவர்கள் எங்கே? நாம் பார்க்கலாம்.
பஸ்கா என்ற ஒரு விசேஷ பண்டிகையைக் கொண்டாடுவதற்கு வழக்கமாக ஒவ்வொரு
வருடமும் யோசேப்பு தன் குடும்பத்தை எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு
போகிறார். நாசரேத்திலிருந்து எருசலேம் ரொம்ப தூரத்தில் இருக்கிறது. அந்தக்
காலத்தில் காரும் கிடையாது, ரயிலும் கிடையாது. அதனால் அநேகர் நடந்தேதான்
அங்கு போகிறார்கள், எருசலேமுக்குப் போய்ச் சேர ஏறக்குறைய மூன்று நாட்கள்
ஆகும்.
யோசேப்பின் குடும்பம் இப்போது ஒரு பெரிய குடும்பமாக
இருக்கிறது. இயேசுவுக்கு தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள், அதனால் அவர்களைக்
கவனித்துக்கொள்கிற பொறுப்பும் யோசேப்புக்கு இருக்கிறது. இந்த வருஷம்
பண்டிகையை முடித்துவிட்டு, யோசேப்பும் மரியாளும் பிள்ளைகளோடு
நாசரேத்துக்குத் திரும்பிப் போகிறார்கள். மற்ற பிரயாணிகளுடன் இயேசு
இருக்கிறார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் முழுக்க
பயணப்பட்டு வந்தபின், கொஞ்சம் ஓய்வெடுக்க நிறுத்தியபோதுதான் இயேசு அங்கு
இல்லாததை தெரிந்துகொள்கிறார்கள். ஆம், இயேசுவைக் காணவில்லை! உறவினர்கள்,
நண்பர்கள் ஆகியோருடன் இருக்கிறாரா என தேடிப் பார்க்கிறார்கள். ஆனால்
அவர்களுடனும் இல்லை! அதனால் அவரைத் தேடி திரும்பவும் எருசலேமுக்குப்
போகிறார்கள்.
கடைசியாக இயேசு இங்கே இந்தப் போதகர்களுடன்
இருப்பதைப் பார்க்கிறார்கள். இயேசு இந்தப் போதகர்கள் சொல்வதைக்
கேட்டுக்கொண்டும், நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்.
இயேசுவுக்கு இவ்வளவு அறிவு இருப்பதைப் பார்த்த ஜனங்கள் எல்லோரும்
ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் மரியாள் இயேசுவைப் பார்த்து: ‘மகனே, ஏன்
இப்படிச் செய்தாய்? உன் அப்பாவும் நானும் எவ்வளவு கவலைப்பட்டு உன்னைத்
தேடினோம் தெரியுமா’ என்கிறாள்.
அதற்கு இயேசு: ‘நீங்கள் ஏன்
என்னைத் தேடினீர்கள்? நான் என்னுடைய அப்பாவின் வீட்டில்தான் இருக்க
வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்கிறார்.
![]() |
இளம் இயேசு போதகர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார் |
ஆம், கடவுளைப்
பற்றி கற்றுக்கொள்கிற இடத்தில் இருப்பதைத்தான் இயேசு ரொம்பவும்
விரும்பினார். நமக்கும் அதே விருப்பம் இருக்க வேண்டும் அல்லவா?
நாசரேத்திற்குச் சென்ற பிறகுகூட, வணக்கத்திற்காக அவர் வாரம் தவறாமல்
கூட்டங்களுக்குப் போனார். அதோடு, அங்குச் சொல்லப்படுவதை எப்பொழுதும்
கவனித்துக் கேட்டார். இப்படித்தான் பைபிளிலிருந்து நிறைய விஷயங்களை அவர்
கற்றுக்கொண்டார். நாமும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவரைப் போலவே
இருப்போமாக.
லூக்கா 2:41-52; மத்தேயு 13:53-56.
கேள்விகள்
- படத்திலுள்ள இயேசுவுக்கு எத்தனை வயது, அவர் எங்கே இருக்கிறார்?
- ஒவ்வொரு வருடமும் யோசேப்பு தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு எங்கே போகிறார்?
- வீட்டிற்குக் கிளம்பி வரும் வழியில் ஒரு நாள் முழுக்க பயணப்பட்டு வந்தபின் யோசேப்பும் மரியாளும் ஏன் எருசலேமுக்குத் திரும்புகிறார்கள்?
- யோசேப்பும் மரியாளும் இயேசுவை எங்குக் கண்டுபிடிக்கிறார்கள், அங்குள்ள ஜனங்கள் எல்லோரும் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள்?
- தன் தாயான மரியாளிடம் இயேசு என்ன சொல்கிறார்?
- கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதில் நாம் எப்படி இயேசுவைப் போல் இருக்கலாம்?
கூடுதல் கேள்விகள்
- லூக்கா 2:41-52-ஐ வாசி.
(அ) வருடாந்தர பண்டிகைகளில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமென
நியாயப்பிரமாணம் குறிப்பிட்டிருக்கிற போதிலும் இன்றைய பெற்றோருக்கு
யோசேப்பும் மரியாளும் என்ன சிறந்த மாதிரியை வைக்கிறார்கள்? (லூக். 2:41;
உபா. 16:16; 31:12; நீதி. 22:6)
(ஆ) பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருப்பதில் இன்றுள்ள இளைஞர்களுக்கு இயேசு என்ன சிறந்த மாதிரியை வைக்கிறார்? (லூக். 2:51; உபா. 5:16; நீதி. 23:22; கொலோ. 3:20)
- மத்தேயு 13:53-56-ஐ வாசி.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் சொந்த சகோதரர்கள் நால்வரின்
பெயர்கள் யாவை, அவர்களில் இருவர் பிற்பாடு எப்படிக் கிறிஸ்தவ சபையில் சேவை
செய்தார்கள்? (மத். 13:55; அப். 12:17; 15:6, 13; 21:18; கலா. 1:19; யாக்.
1:1; யூ. 1)
No comments:
Post a Comment