Monday, 9 December 2013

கடவுளுடைய உதவியில் நம்பிக்கை வைத்தல்

கடவுளுடைய உதவியில் நம்பிக்கை வைத்தல்

ஆயிரக்கணக்கானோர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு நீண்ட தூரப் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வந்து சேரும்போது, எருசலேம் பாழாய்க் கிடக்கிறது. யாருமே அங்கு இல்லை. அதனால் அவர்கள் எல்லாவற்றையும் திரும்ப கட்ட வேண்டியிருக்கிறது.
அவர்கள் முதன்முதலாக கட்டுகிறவற்றில் ஒன்று பலிபீடம். யெகோவாவுக்கு மிருக பலிகளை, அதாவது காணிக்கைகளைச் செலுத்தும் இடம்தான் பலிபீடம். சில மாதங்களுக்குப் பிறகு இஸ்ரவேலர் ஆலயத்தைக் கட்டத் தொடங்குகிறார்கள். ஆனால் பக்கத்து நாடுகளிலுள்ள எதிரிகளுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் கட்டிட வேலையை நிறுத்துவதற்கு அவர்களைப் பயமுறுத்திப் பார்க்கிறார்கள். கடைசியாக, பெர்சியாவின் புதிய ராஜாவைத் தூண்டி விட்டு கட்டிட வேலையை நிறுத்துவதற்கு ஒரு சட்டத்தைப் போடும்படி செய்கிறார்கள்.
பல ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து இப்போது 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. மறுபடியும் ஆலயத்தைக் கட்ட ஆரம்பிக்கும்படி தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா என்பவர்கள் மூலம் யெகோவா சொல்கிறார். இந்த ஜனங்கள் கடவுளுடைய உதவியில் நம்பிக்கை வைக்கிறார்கள், அதோடு அந்தத் தீர்க்கதரிசிகளுக்குக் கீழ்ப்படியவும் செய்கிறார்கள். கட்டக் கூடாது என்று சட்டம் சொல்கிறபோதிலும், அவர்கள் திரும்பக் கட்டத் தொடங்குகிறார்கள்.
அப்போது தத்னாய் என்ற பெர்சிய அதிகாரி அங்கு வந்து, ஆலயத்தைக் கட்ட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதென்று கேள்வி கேட்கிறான். அதற்கு இஸ்ரவேலர், தாங்கள் பாபிலோனில் இருந்தபோது ‘எருசலேமுக்குப் புறப்பட்டுப் போய், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுங்கள்’ என்று கோரேசு ராஜாதான் தங்களுக்குக் கட்டளையிட்டதாக அவனிடம் சொல்கிறார்கள்.
கோரேசு இறந்துவிட்டதால், அவர் உண்மையிலேயே அப்படிச் சொன்னாரா என்று அறிந்துகொள்ள தத்னாய் பாபிலோனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறான். பெர்சியாவின் புதிய ராஜாவிடமிருந்து பதிலும் சீக்கிரத்தில் கிடைக்கிறது. கோரேசு உண்மையில் அப்படித்தான் சொன்னார் என்று அதில் எழுதியிருந்தது. அதுமட்டுமல்ல, ‘இஸ்ரவேலர் தங்கள் கடவுளுடைய ஆலயத்தைக் கட்டட்டும். அவர்களுக்கு உதவி செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்’ என்றும் அதில் எழுதியிருந்தது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குள் ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது, இஸ்ரவேலர் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்.
இன்னும் பல ஆண்டுகள் கடந்து செல்கின்றன. இப்போது ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு ஏறக்குறைய 48 ஆண்டுகள் கடந்துவிட்டன. எருசலேமிலுள்ள மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள், நகரமும் கடவுளுடைய ஆலயமும் பார்ப்பதற்கு அழகாக இல்லை. பாபிலோனில் இருக்கும் இஸ்ரவேலரான எஸ்றா என்பவர் கடவுளுடைய ஆலயத்தைச் சரி செய்ய வேண்டியிருப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறார். கேள்விப்பட்டதும் என்ன செய்கிறார் தெரியுமா?
பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவைப் பார்க்கப் போகிறார், இந்த ராஜா நல்லவராக இருக்கிறார், எருசலேமுக்கு எடுத்துப் போக எஸ்றாவுக்கு நிறைய பரிசுப் பொருட்களைக் கொடுத்து அனுப்புகிறார், இந்தப் பரிசுகளையெல்லாம் எருசலேமுக்குக் கொண்டு போக தனக்கு உதவி செய்யுமாறு பாபிலோனில் இருக்கிற இஸ்ரவேலரிடம் எஸ்றா கேட்கிறார். ஏறக்குறைய 6,000 ஆட்கள் அவருக்கு உதவ முன்வருகிறார்கள். எடுத்துச் செல்ல ஏராளமான வெள்ளியும் பொன்னும் விலையுயர்ந்த மற்ற பொருட்களும் அவர்களிடம் இருக்கின்றன.
போகும் வழியில் கெட்ட ஆட்கள் இருப்பதால் அந்த வெள்ளியையும் பொன்னையும் பிடுங்கிக்கொண்டு அவர்களைக் கொன்றுவிடுவார்களோ என எஸ்றா கவலைப்படுகிறார். அதனால், நீ இந்தப் படத்தில் பார்க்கிறபடி, ஜனங்களை ஒன்றாகக் கூடிவரச் செய்கிறார். எருசலேமுக்குத் திரும்பிப்போகும் அந்த நீண்ட தூரப் பயணத்தில் தங்களைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்கிறார்.
எஸ்றாவும் மக்களும் ஜெபம் செய்துகொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் யெகோவா பாதுகாக்கிறார். நான்கு மாதங்கள் பயணம் செய்து, பத்திரமாய் எருசலேமுக்கு வந்து சேருகிறார்கள். தம் மீது நம்பிக்கை வைத்து உதவி கேட்கிறவர்களை யெகோவா பாதுகாப்பார் என்று இது காட்டுகிறது அல்லவா?
எஸ்றா அதிகாரங்கள் 2-8.


கேள்விகள்

  • பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு எத்தனை பேர் நீண்ட தூரப் பயணம் செய்கிறார்கள், அவர்கள் அங்குப் போய்ச் சேரும்போது அந்த இடம் எப்படிக் கிடக்கிறது?
  • அங்குப் போய்ச் சேர்ந்த பிறகு இஸ்ரவேலர் எதைக் கட்ட ஆரம்பிக்கிறார்கள், ஆனால் எதிரிகள் என்ன செய்கிறார்கள்?
  • ஆகாய், சகரியா என்பவர்கள் யார், ஜனங்களுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
  • பாபிலோனுக்கு தத்னாய் ஏன் கடிதம் எழுதி அனுப்புகிறான், அவன் என்ன பதிலைப் பெறுகிறான்?
  • கடவுளுடைய ஆலயத்தைச் சரி செய்ய வேண்டியிருப்பதைப் பற்றி கேள்விப்பட்டதும் எஸ்றா என்ன செய்கிறார்?
  • படத்தில் பார்க்கிறபடி, எஸ்றா எதற்காக ஜெபம் செய்கிறார், அவருடைய ஜெபம் எப்படிப் பதிலளிக்கப்படுகிறது, இது நமக்கு எதைக் கற்பிக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • எஸ்றா 3:1-13-ஐ வாசி. ஏதோவொரு இடத்தில் கடவுளுடைய மக்கள் கூடிவருவதற்குச் சபையே இல்லையென்றால் நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்? (எஸ்றா 3:3, 6; அப். 17:16, 17; எபி. 13:15)
  • எஸ்ரா 4:1-7-ஐ வாசி. அவிசுவாசிகளோடு தொடர்பு வைப்பது சம்பந்தமாக யெகோவாவின் ஜனங்களுக்கு செருபாபேல் என்ன முன்மாதிரி வைத்தார்? (யாத். 34:12; 1 கொ. 15:33; 2 கொ. 6:14-17)
  • எஸ்றா 5:1-5, 17; 6:1-22-ஐ வாசி. (அ) ஆலயம் கட்டும் வேலையை விரோதிகளால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? (எஸ்றா 5:5; ஏசா. 54:17)
    (ஆ) விரோதிகள் எதிர்க்கையில் யெகோவாவின் வழிநடத்துதலை நாடுவதற்கு யூதருடைய மூப்பர்கள் செய்த காரியம் கிறிஸ்தவ மூப்பர்களுக்கு எப்படி உற்சாகமளிக்கிறது? (எஸ்றா 6:14, சங். 32:8; ரோ. 8:31; யாக். 1:5)
  • எஸ்றா 8:21-23, 28-36-ஐ வாசி. ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன், எஸ்றாவின் என்ன மாதிரியைப் பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும்? (எஸ்றா 8:23; சங். 127:1, 2; நீதி. 10:22; யாக். 4:13-15)

No comments:

Post a Comment