ஞானமுள்ள சாலொமோன் ராஜா
சாலொமோன் ராஜா ஆட்சிக்கு வரும்போது அவருக்கு
இருபது வயதுகூட ஆகவில்லை. அவர் யெகோவாவை நேசிக்கிறார். தன் அப்பா தாவீது
கொடுத்த நல்ல அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கிறார். சாலொமோன் இப்படி
நடப்பதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். அதனால் ஒருநாள் ராத்திரி
அவருடைய கனவில்: ‘சாலொமோனே, உனக்கு என்ன வேண்டுமென்று கேள், அதை நான்
கொடுக்கிறேன்’ என்று சொல்கிறார்.
அதற்கு சாலொமோன்: ‘என் தேவனாகிய
யெகோவாவே, நான் மிகவும் இளைஞனாக இருக்கிறேன், எப்படி ஆட்சி செய்வதென்றே
எனக்குத் தெரியவில்லை. அதனால் உம்முடைய ஜனத்தைச் சரியான முறையில் ஆட்சி
செய்வதற்கு வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும்’ என்று கேட்கிறார்.
ஞானம் வேண்டுமென்று சாலொமோன் கேட்டபோது யெகோவா சந்தோஷப்படுகிறார். எனவே
அவர்: ‘நெடுநாள் வாழ வேண்டுமென்றோ செல்வம் வேண்டுமென்றோ நீ கேட்கவில்லை,
அதற்கு பதிலாக ஞானம் வேண்டுமென்று கேட்டாய், அதனால் இதுவரை யாருமே
பெற்றிராத அதிக ஞானத்தை நான் உனக்குக் கொடுப்பேன். நீ கேட்காததைக்கூட, ஆம்,
செல்வங்களையும் மகிமையையும்கூட நான் உனக்குக் கொடுப்பேன்’ என்று
சொல்கிறார்.
கொஞ்ச காலத்திற்குப் பின், இரண்டு பெண்கள் ஒரு பெரிய
பிரச்சினையைத் தீர்க்க சாலொமோனிடம் வருகிறார்கள். அவர்களில் ஒருத்தி
சொல்கிறாள்: ‘இவளும் நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம், எனக்கு ஒரு மகன்
பிறந்தான், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான்.
ஆனால் ஒரு ராத்திரி அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. அதனால், நான் தூங்கிக்
கொண்டிருந்த சமயத்தில் செத்த குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டு
என்னுடைய குழந்தையை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான்
தூங்கியெழுந்தபோது என் பக்கத்தில் செத்த குழந்தையைப் பார்த்தேன்,
பார்த்ததுமே அது என் குழந்தை அல்ல என்பது எனக்குத் தெரிந்தது’ என்கிறாள்.
உடனே இன்னொருத்தி: ‘இல்லை! இல்லை! உயிரோடுள்ள குழந்தை என்னுடையது, செத்த
குழந்தைதான் அவளுடையது!’ என்று சொல்கிறாள். ஆனால் அந்த முதல் பெண்: ‘இல்லவே
இல்லை! செத்த குழந்தை உன்னுடையது, உயிரோடுள்ள குழந்தை என்னுடையது!’ என்று
சொல்கிறாள். இப்படியே அந்த இரு பெண்களும் சண்டைப்போட்டுக் கொள்கிறார்கள்.
சாலொமோன் என்ன செய்யப் போகிறார்?
ஒரு வாளை எடுத்துவரச்
சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும்: ‘உயிரோடுள்ள குழந்தையை இரண்டாக வெட்டி
ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு’ என்று சொல்கிறார்.
உடனடியாக அந்த உண்மையான தாய்: ‘ஐயோ, வேண்டாம்! தயவுசெய்து குழந்தையைக்
கொல்ல வேண்டாம். அவளுக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி அழுகிறாள்.
ஆனால் இன்னொருத்தி: ‘எங்கள் இரண்டு பேருக்குமே அந்தக் குழந்தையைக் கொடுக்க
வேண்டாம்; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள்’ என்று சொல்கிறாள்.
![]() |
சாலொமோன் ராஜா ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறார். |
அவர்கள் பேசி முடித்ததும் சாலொமோன் பேசுகிறார்: ‘குழந்தையைக் கொல்லாதே.
அந்த முதல் பெண்ணிடம் கொடுத்துவிடு. அவள்தான் அந்தக் குழந்தையின் உண்மையான
தாய்’ என்று சொல்கிறார். உண்மையான தாய் குழந்தையின் மீது உயிரையே
வைத்திருக்கிறாள், அதனால் குழந்தையைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக
மற்றவளிடமே கொடுத்துவிடும்படி சொல்கிறாள்; இதை வைத்துத்தான் சாலொமோன்
உண்மையான தாய் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார். சாலொமோன் இந்தப்
பிரச்சினையைத் தீர்த்து வைத்த விதத்தைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படுகிறபோது
தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஞானமுள்ள ராஜா இருப்பதை எண்ணி
சந்தோஷப்படுகிறார்கள்.
சாலொமோன் ஆட்சி செய்கிறபோது, கோதுமையையும்
வாற்கோதுமையையும், திராட்சப் பழங்களையும், அத்திப் பழங்களையும், மற்ற
உணவுப் பொருட்களையும் கடவுள் ஏராளமாக விளையச் செய்கிறார்; இப்படியாக
ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். ஜனங்களுக்கு உடுத்திக்கொள்ள நல்ல நல்ல
துணிமணிகள் இருக்கின்றன, நல்ல நல்ல வீடுகள் இருக்கின்றன. தேவைக்கு
அதிகமாகவே எல்லோருக்கும் எல்லா நல்ல வசதிகளும் இருக்கின்றன.
1 இராஜாக்கள் 3:3-28; 4:29-34.
கேள்விகள்
- சாலொமோனிடம் யெகோவா என்ன கேட்டார், அதற்கு அவர் என்ன பதிலளித்தார்?
- சாலொமோன் தம்மிடம் கேட்ட காரியத்தைக் குறித்து யெகோவா சந்தோஷப்பட்டதால், எதையெல்லாம் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கிறார்?
- என்ன பெரிய பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு இரண்டு பெண்கள் சாலொமோனிடம் வருகிறார்கள்?
- படத்தில் பார்க்கிறபடி, இந்தப் பிரச்சினையை சாலொமோன் எப்படித் தீர்க்கிறார்?
- சாலொமோனின் ஆட்சி காலம் எப்படியிருக்கிறது, ஏன்?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று இராஜாக்கள் 3:3-28-ஐ வாசி.
(அ) இன்று கடவுளுடைய அமைப்பில் பொறுப்பிலுள்ள ஆண்கள், 1 இராஜாக்கள் 3:7-ல்
சாலொமோன் இதயப்பூர்வமாக சொன்ன வார்த்தைகளிலிருந்து என்ன பாடத்தைக்
கற்றுக்கொள்ளலாம்? (சங். 119:105; நீதி. 3:5, 6)
(ஆ) சரியான காரியங்களுக்காக ஜெபம் செய்வதற்கு சாலொமோனின் விண்ணப்பம் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது? (1 இரா. 3:9, 11; நீதி. 30:8, 9; 1 யோ. 5:14)
(இ) இரண்டு பெண்களுக்கு இடையே இருந்த பிரச்சினையை சாலொமோன் தீர்த்து வைத்தது, பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியைக் குறித்து நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது? (1 இரா. 3:28; ஏசா. 9:6, 7; 11:2-4)
- ஒன்று இராஜாக்கள் 4:29-34-ஐ வாசி. (அ) கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைத் தரும்படி சாலொமோன் கேட்டதால் யெகோவா அவருக்கு என்னவெல்லாம் கொடுத்தார்? (1 இரா. 4:29)
(ஆ) ஜனங்கள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்டறிய வெகு தூரம் பயணித்து வந்தார்கள் என்றால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதைக் குறித்து நமக்கு என்ன மனநிலை இருக்க வேண்டும்? (1 இரா. 4:29, 34; யோவா. 17:3; 2 தீ. 3:16)
No comments:
Post a Comment