ஆரோனுடைய கோல் பூ பூக்கிறது
இந்தக் கோலிலிருந்து, அதாவது
குச்சியிலிருந்து பூக்களும் வாதுமைப் பழங்களும் தோன்றியிருப்பதைப் பார்.
இது ஆரோனின் கோல். ஒரே இரவில் இந்தப் பூக்களும் பழங்களும்
தோன்றியிருக்கின்றன! ஏன் என்று நாம் பார்க்கலாம்.
![]() |
பூத்திருக்கும் கோலை மோசே ஆரோனிடம் கொடுக்கிறார் |
இஸ்ரவேலர் கொஞ்ச காலமாகவே வனாந்தரத்தில் அலைந்து திரிந்து
கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு மோசே தலைவராக இருக்க வேண்டியதில்லை
என்றும், ஆரோன் பிரதான ஆசாரியனாக இருக்க வேண்டியதில்லை என்றும் சிலர்
நினைக்கிறார்கள். இவர்களில் ஒருவன் கோராகு. அவன் மட்டுமல்ல, தாத்தான்
என்பவனும் அபிராம் என்பவனும் 250 தலைவர்களும்கூட இவ்வாறே நினைக்கிறார்கள்.
இவர்கள் மோசேயிடம் வந்து: ‘எங்கள் எல்லோருக்கும் மேலாக ஏன் நீரே உம்மை
உயர்த்திக்கொள்கிறீர்?’ என்று கேட்கிறார்கள்.
அதற்கு மோசே:
‘நாளைக் காலை தூப கலசங்களை எடுத்து அதில் தூபவர்க்கத்தைப் போடுங்கள்.
பின்பு யெகோவாவின் ஆசரிப்பு கூடாரத்திற்கு வாருங்கள். யெகோவா யாரைத்
தேர்ந்தெடுப்பார் என்று அப்போது பார்ப்போம்’ என்று கோராகுவிடமும் அவனைச்
சேர்ந்தவர்களிடமும் சொல்கிறார்.
அடுத்த நாள் கோராகும் அவனைச்
சேர்ந்த 250 பேரும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு வருகிறார்கள். இந்த ஆட்களை
ஆதரிப்பதற்கு இன்னும் நிறைய பேர் வருகிறார்கள். யெகோவா மிகவும்
கோபமடைகிறார். மோசே ஜனங்களைப் பார்த்து: ‘இந்தக் கெட்ட ஆட்கள்
தங்கியிருக்கிற கூடாரங்களை விட்டு தூர விலகுங்கள். அவர்களுக்குச் சொந்தமான
எந்தப் பொருளையும் தொடாதேயுங்கள்’ என்று சொல்கிறார். ஜனங்கள் மோசேக்கு
செவிகொடுத்து, கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களை விட்டுத்
தூரமாக விலகிப் போகிறார்கள்.
அப்பொழுது மோசே: ‘யெகோவா யாரைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிவீர்கள். இந்த
நிலம் பிளந்து இங்குள்ள கெட்ட ஆட்களை விழுங்கிப்போடும்’ என்று சொல்கிறார்.
மோசே பேசி முடித்ததும் நிலம் பிளக்கிறது. கோராகுவின் கூடாரமும் மற்ற
பொருட்களும் பூமிக்குள் புதைந்து விடுகின்றன; தாத்தானும் அபிராமும்
அவர்களோடு இருந்தவர்களும் அப்படியே புதைந்து விடுகிறார்கள். நிலம் அவர்களை
மூடிவிடுகிறது. நிலத்திற்குள் விழுகிறவர்களின் கூக்குரலை கேட்கிறபோது
ஜனங்கள்: ‘ஓடுங்கள்! ஓடுங்கள்! பூமி நம்மையும்கூட விழுங்கிப்
போட்டுவிடும்!’ என்று அலறியவாறு ஓட்டம் பிடிக்கிறார்கள்.
கோராகும்
அவனைச் சேர்ந்த 250 பேரும் இன்னும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு அருகில்
இருக்கிறார்கள். எனவே யெகோவா நெருப்பை அனுப்புகிறார், அவர்கள் எல்லோரும்
எரிந்து சாம்பலாகிறார்கள். அப்பொழுது யெகோவா ஆரோனின் மகன் எலெயாசாரிடம்:
‘செத்துப்போன ஆட்களின் தூப கலசங்களை எடுத்து, அவற்றைப் பலிபீடத்தைச் சுற்றி
ஒரு மெல்லிய தகடாக பொருத்து’ என்று சொல்கிறார். ஆரோனையும் அவருடைய
மகன்களையும் தவிர வேறு யாருமே யெகோவாவுக்கு ஆசாரியர்களாய் சேவை
செய்யக்கூடாது என்று இஸ்ரவேலரை எச்சரிப்பதற்கு இந்தத் தகடு
பொருத்தப்படுகிறது.
என்றாலும், ஆரோனையும் அவருடைய மகன்களையுமே
தாம் ஆசாரியர்களாக தேர்ந்தெடுத்திருப்பதை தெள்ளத் தெளிவாக்க யெகோவா
விரும்புகிறார். ஆகையால் அவர் மோசேயிடம்: ‘இஸ்ரவேலின் ஒவ்வொரு
கோத்திரத்திலுள்ள ஒரு தலைவனும் தன் தன் கோலைக் கொண்டு வரச் சொல். லேவி
கோத்திரத்திற்காக ஆரோன் ஒரு கோலைக் கொண்டு வரட்டும். பின்பு இந்தக் கோல்கள்
ஒவ்வொன்றையும் ஆசரிப்பு கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால்
வை. ஆசாரியனாக நான் தேர்ந்தெடுக்கிறவனின் கோல் மட்டும் பூ பூக்கும்’ என்று
சொல்கிறார்.
மறுநாள் காலை மோசே பார்க்கும்போது ஆரோனின் கோலில்
இந்தப் பூக்களும் பழுத்த வாதுமைப் பழங்களும் இருக்கின்றன! ஆரோனின் கோல் பூ
பூக்கும்படி யெகோவா ஏன் செய்தார் என்று இப்போது உனக்குப் புரிகிறதா?
எண்ணாகமம் 16:1-49; 17:1-11; 26:10.
கேள்விகள்
- மோசே மற்றும் ஆரோனின் அதிகாரத்திற்கு விரோதமாக யார் கலகம் செய்கிறார்கள், அவர்கள் மோசேயிடம் என்ன சொல்கிறார்கள்?
- கோராகிடமும் அவனைப் பின்பற்றுகிற 250 பேரிடமும் மோசே என்ன சொல்கிறார்?
- ஜனங்களிடம் மோசே என்ன சொல்கிறார், அவர் பேசி முடித்ததும் என்ன நடக்கிறது?
- கோராகுவுக்கும் அவனைப் பின்பற்றுகிற 250 பேருக்கும் என்ன நடக்கிறது?
- ஆரோனின் மகன் எலெயாசார், செத்துப்போனவர்களின் தூப கலசங்களை எடுத்து என்ன செய்கிறார், ஏன்?
- ஆரோனின் கோல் பூ பூக்கும்படி யெகோவா ஏன் செய்தார்? (படத்தைப் பார்.)
கூடுதல் கேள்விகள்
- எண்ணாகமம் 16:1-49-ஐ வாசி.
(அ) கோராகுவும் அவனைப் பின்பற்றியவர்களும் என்ன செய்தார்கள், இது ஏன்
யெகோவாவுக்கு எதிரான கலகமாக இருந்தது? (எண். 16:9, 10, 18; லேவி. 10:1, 2;
நீதி. 11:2)
(ஆ) கோராகுவும் ‘சபைக்குத் தலைவர்களாகிய இருநூற்று ஐம்பது பேரும்’ என்ன தவறான மனப்பான்மையை வளர்த்திருந்தார்கள்? (எண். 16:1-3; நீதி. 15:33; ஏசா. 49:7)
- எண்ணாகமம் 17:1-11; 26:10-ஐ வாசி.
(அ) ஆரோனின் கோல் பூ பூத்தது எதை அடையாளம் காட்டியது, அதை ஏன்
உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கும்படி யெகோவா சொன்னார்? (எண். 17:5, 8,
10; எபி. 9:4)
(ஆ) ஆரோனுடைய கோல் அடையாளம் காட்டியது நமக்கு என்ன முக்கிய பாடத்தைக் கற்பிக்கிறது? (எண். 17:10; அப். 20:28; பிலி. 2:14; எபி. 13:17)
No comments:
Post a Comment