எருசலேமில் காத்திருக்கும்போது
இங்கே இருக்கிற ஆட்கள் இயேசுவின் சீஷர்கள்.
அவர் சொன்னதற்குக் கீழ்ப்பட்டு எருசலேமிலேயே தங்கியிருக்கிறார்கள். அதுவும்
எல்லோரும் ஒன்றாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு பெரிய சத்தம்
அந்த வீடு முழுவதும் கேட்கிறது. வேகமாய் வீசும் பலத்த காற்றின் சத்தத்தைப்
போல் அது இருக்கிறது. அப்போது நாக்கு போன்ற நெருப்பு இந்தச் சீஷர்கள்
ஒவ்வொருவரின் தலை மீதும் தெரிகிறது. அதை உன்னால் பார்க்க முடிகிறதா? இந்தச்
சம்பவத்தை என்னவென்று சொல்லலாம்?
![]() |
பரிசுத்த ஆவி முதல் நூற்றாண்டு சீஷர்கள் மீது ஊற்றப்பட்டது |
இது ஓர் அற்புதம்! இயேசு பரலோகத்தில் திரும்பவும் தம்முடைய தகப்பனுடன்
இருக்கிறார். அங்கிருந்து கடவுளுடைய பரிசுத்த ஆவியை சீஷர்கள் மீது
ஊற்றுகிறார். இந்த ஆவி அவர்களை என்ன செய்ய வைக்கிறது தெரியுமா? வெவ்வேறு
பாஷைகளில் பேச வைக்கிறது.
பலத்த காற்று அடிப்பது போன்ற அந்தச்
சத்தத்தைக் கேட்டு, அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க எருசலேமிலுள்ள
நிறைய ஆட்கள் கூடிவருகிறார்கள். பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக இந்த ஆட்களில்
சிலர் மற்ற நாடுகளிலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில்
எப்பேர்ப்பட்ட ஆச்சரியம்! கடவுள் செய்திருக்கிற அதிசயமான காரியங்களைப்
பற்றி தங்களுடைய பாஷையிலேயே இயேசுவின் சீஷர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள்.
‘இந்த ஆட்கள் எல்லோரும் கலிலேயர் தானே, அப்படியானால் நம்முடைய தாய்
பாஷையிலே பேச இவர்களால் எப்படி முடிகிறது?’ என்று ஒருவருக்கொருவர்
ஆச்சரியப்பட்டு கேட்டுக் கொள்கிறார்கள்.
அதற்கு விளக்கமளிக்க
பேதுரு இப்போது எழுந்து நிற்கிறார். பிறகு உரக்கப் பேச ஆரம்பிக்கிறார்.
இயேசு எப்படிக் கொல்லப்பட்டார் என்றும், அவரை யெகோவா எப்படி
உயிர்த்தெழுப்பினார் என்றும் அங்குக் கூடிவந்திருப்போரிடம் விளக்குகிறார்.
‘இயேசு இப்போது பரலோகத்தில் கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்,
வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியை ஊற்றியிருப்பது அவரே. அதனால்தான் இந்த
அற்புதங்களை உங்களால் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது’ என்று சொல்கிறார்.
பேதுரு இதைப் பற்றியெல்லாம் பேசியதும், ஜனங்களில் பலர் இயேசுவுக்குச்
செய்த கொடுமைகளை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்கள். ‘இப்போது நாங்கள்
என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்கள். ‘உங்கள் வாழ்க்கையை மாற்றி
நீங்கள் முழுக்காட்டுதல் எடுக்க வேண்டும்’ என்று பேதுரு சொல்கிறார். அதனால்
ஏறக்குறைய 3,000 பேர் அன்றைக்கே முழுக்காட்டப்பட்டு இயேசுவின்
சீஷர்களாகிறார்கள்.
அப்போஸ்தலர் 2:1-47.
கேள்விகள்
- இந்தப் படம் காட்டுகிறபடி, எருசலேமில் காத்துக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்களுக்கு என்ன நடக்கிறது?
- பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்தவர்கள் ஏன் ஆச்சரியம் அடைகிறார்கள்?
- கூடிவந்த ஜனங்களுக்கு பேதுரு எதைப் பற்றி விளக்குகிறார்?
- பேதுரு சொன்னதைக் கேட்ட பிறகு ஜனங்கள் எவ்வாறு உணருகிறார்கள், அவர்களை பேதுரு என்ன செய்யச் சொல்கிறார்?
- பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எத்தனை பேர் முழுக்காட்டப்படுகிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
- அப்போஸ்தலர் 2:1-47-ஐ வாசி.
(அ) இயேசுவின் மரணத்திற்கு யூத தேசத்தார் அனைவருமே காரணம் என்பதை
அப்போஸ்தலர் 2:23, 36-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் எப்படிக்
காட்டுகின்றன? (1 தெ. 2:14, 15)
(ஆ) வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதற்கு பேதுரு எப்படி ஒரு சிறந்த மாதிரி வைத்தார்? (அப். 2:16, 17, 29, 31, 36, 39; கொலோ. 4:6)
(இ) இயேசு வாக்குக் கொடுத்திருந்த ‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களில்’ முதலாவது திறவுகோலை பேதுரு எப்படிப் பயன்படுத்தினார்? (அப். 2:14, 22-24, 37, 38; மத். 16:19)
No comments:
Post a Comment