ஒலிவ மலையின் மேல்
ஒலிவ மலையின் மேல் இருப்பது இயேசு. அவரோடு
இருக்கிற அந்த நான்கு பேர் அவருடைய அப்போஸ்தலர்கள். அந்திரேயாவும்
பேதுருவும் அண்ணன் தம்பி; அதேபோல் யாக்கோபும், யோவானும் அண்ணன் தம்பி.
அங்கே தூரத்தில் நீ பார்ப்பது எருசலேமில் இருக்கிற கடவுளுடைய ஆலயம்.
எருசலேமுக்கு கழுதைக்குட்டியின் மேல் இயேசு சவாரி செய்து வந்து இரண்டு
நாட்கள் ஆகிவிட்டன. இது செவ்வாய்க்கிழமை. காலை நேரத்தில் இயேசு ஆலயத்தில்
இருந்தார். அங்கே ஆசாரியர்கள் இயேசுவைப் பிடித்து அவரைக் கொல்ல
முயன்றார்கள். ஆனால், இயேசுவை ஜனங்கள் விரும்புவதால் அப்படிச் செய்ய
அவர்கள் பயந்தார்கள்.
![]() |
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் |
இயேசு அந்த மதத் தலைவர்களைப் பார்த்து: ‘பாம்புகளே, விரியன் பாம்புக்
குட்டிகளே!’ என்று அழைத்தார். பிறகு, அவர்கள் செய்திருந்த எல்லாக் கெட்ட
காரியங்களுக்காகவும் கடவுள் அவர்களைத் தண்டிக்கப் போகிறார் என்று கூறினார்.
அதன் பின் ஒலிவ மலைக்கு வந்தார், அப்போது இந்த நான்கு அப்போஸ்தலர்களும்
அவரிடம் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவிடம் என்ன
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
எதிர்காலத்தைப் பற்றிய விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பூமியிலுள்ள எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் இயேசு முடிவுகட்டப் போகிறார்
என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அது எப்போதுநடக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ராஜாவாக ஆட்சி செய்ய இயேசு எப்போது திரும்ப வருவார்?
தாம் வரும்போது, பூமியிலுள்ள தமது சீஷர்களால் தம்மைப் பார்க்க முடியாது
என்பதை இயேசு அறிந்திருக்கிறார். ஏன் பார்க்க முடியாது? ஏனென்றால் அவர்
பரலோகத்தில் இருப்பார், அதனால் அவரை அவர்களால் பார்க்க முடியாது. எனவே,
தாம் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்ய வரும்போது பூமியில் நடக்கும் சில
காரியங்களைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் சொல்கிறார். அந்தக் காரியங்களில் சில
யாவை?
பெரிய பெரிய போர்கள் நடக்கும், ஏராளமானோர் நோயிலும்
பஞ்சத்திலும் கஷ்டப்படுவார்கள், கொலையும் கொள்ளையும் நடக்கும், பயங்கர
பூமியதிர்ச்சிகள் உண்டாகும் என்றெல்லாம் இயேசு சொல்கிறார். அதோடு,
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தி பூமியெங்கும் பிரசங்கிக்கப்படும்
என்றும் அவர் சொல்கிறார். இவையெல்லாம் நம்முடைய காலத்தில் நடப்பதை நாம்
பார்க்கிறோமா? ஆம், பார்க்கிறோம்! அதனால் இயேசு இப்போது பரலோகத்தில் ஆட்சி
செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். சீக்கிரத்தில்
பூமியிலுள்ள எல்லாத் தீமைகளுக்கும் அவர் முடிவுகட்டப் போகிறார்.
மத்தேயு 21:46; 23:1-39; 24:1-14; மாற்கு 13:3-10.
கேள்விகள்
- இந்தப் படத்தில் இயேசு எங்கே இருக்கிறார், அவரோடு யாரெல்லாம் இருக்கிறார்கள்?
- ஆலயத்தில் இயேசுவை ஆசாரியர்கள் என்ன செய்ய முயன்றார்கள், அவர்களைப் பார்த்து இயேசு என்ன சொன்னார்?
- இயேசுவிடம் அப்போஸ்தலர்கள் என்ன கேட்கிறார்கள்?
- பரலோகத்தில் ராஜாவாக தாம் ஆட்சி செய்யும்போது பூமியில் நடக்கப்போகும் சில காரியங்களைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் இயேசு ஏன் சொல்கிறார்?
- பூமியிலுள்ள எல்லாத் தீமைக்கும் தாம் முடிவுகட்டுவதற்கு முன் என்ன வேலை நடக்கும் என இயேசு சொல்கிறார்?
கூடுதல் கேள்விகள்
- மத்தேயு 23:1-39-ஐ வாசி.
(அ) பட்டப் பெயர்களைப் பயன்படுத்துவது சரியானதே என பைபிள் குறிப்பிடுகிற
போதிலும், கிறிஸ்தவ சபையில் முகஸ்துதிக்காகப் பட்டப் பெயர்களைப்
பயன்படுத்துவது சம்பந்தமாக மத்தேயு 23:8-11-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள்
எதைக் காட்டுகின்றன? (மத். 23:8-11; அப். 26:25; ரோ. 13:7; 1 பே. 2:13, 14)
(ஆ) ஜனங்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதைத் தடுப்பதற்குப் பரிசேயர்கள் என்ன செய்தார்கள், இன்றும்கூட மதத் தலைவர்கள் இதேப் போன்ற தந்திரங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? (மத். 23:13; லூக். 11:52; யோவா. 9:22; 12:42; 1 தெ. 2:16)
- மத்தேயு 24:1-14-ஐ வாசி. (அ) சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை மத்தேயு 24:13 எப்படி வலியுறுத்துகிறது?
(ஆ) மத்தேயு 24:13-ல் குறிப்பிட்டுள்ள “முடிவு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (மத். 16:27; ரோ. 14:10-12; 2 கொ. 5:10)
- மாற்கு 13:3-10-ஐ வாசி.
நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் அவசரத்தன்மையை மாற்கு 13:10-ல் உள்ள எந்த
வார்த்தை சுட்டிக்காட்டுகிறது, இயேசுவின் வார்த்தைகள் நம்மை என்ன செய்யத்
தூண்ட வேண்டும்? (ரோ. 13:11, 12; 1 கொ. 7:29-31; 2 தீ. 4:2)
No comments:
Post a Comment