Thursday, 5 December 2013

தைரியமுள்ள இரண்டு பெண்கள்

தைரியமுள்ள இரண்டு பெண்கள்

பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது இஸ்ரவேலர் யெகோவாவை நோக்கிக் கெஞ்சுகிறார்கள். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய தைரியமுள்ள தலைவர்களை யெகோவா நியமிக்கிறார். இவர்களை நியாயாதிபதிகள் என்று பைபிள் அழைக்கிறது. யோசுவாவே முதல் நியாயாதிபதி, அவருக்குப் பிறகும் பல நியாயாதிபதிகள் இருந்தார்கள், அவர்களில் சிலருடைய பெயர் ஒத்னியேல், ஏகூத், மற்றும் சம்கார். ஆனால் ஆண்கள் மட்டுமல்ல, தெபொராள், யாகேல் என்ற பெண்களும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார்கள். 
தெபொராள் பாராக்கிடம் பேசுகிறாள்
தெபொராள் பாராக்கிடம் பேசுகிறாள்

தெபொராள் ஒரு தீர்க்கதரிசினி. எதிர்காலத்தைப் பற்றி யெகோவா அவளுக்குச் சொல்கிறார். அதை அவள் ஜனங்களுக்குச் சொல்கிறாள். தெபொராள் ஒரு நியாயாதிபதியாகவும் இருக்கிறாள். அவள் மலை தேசத்தில் ஒரு பேரீச்ச மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். ஜனங்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி கேட்டு அவளிடம் வருகிறார்கள்.
இச்சமயத்தில் யாபீன் என்பவன் கானானில் ராஜாவாக இருக்கிறான். அவனுக்கு 900 யுத்த இரதங்கள் இருக்கின்றன. அவனுடைய படை மிகவும் பலமுள்ளதாய் இருக்கிறது, அதனால் இஸ்ரவேலரில் பலர் யாபீனின் வேலைக்காரர்களாக இருக்க வேண்டியுள்ளது. யாபீனின் படைத்தலைவனுடைய பெயர் சிசெரா.
ஒருநாள் தெபொராள் நியாயாதிபதி பாராக்கை வரவழைத்து, யெகோவா இவ்வாறு கூறியதாக சொல்கிறாள்: “10,000 ஆட்களை அழைத்து அவர்களைத் தாபோர் மலைக்கு கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் சிசெராவை உன்னிடம் கொண்டு வருவேன். அவன் மீதும் அவனுடைய படை மீதும் நான் உனக்கு வெற்றி தருவேன்.”
தெபொராளிடம் பாராக்: ‘நீங்களும் என்னோடுகூட வந்தால் நான் போவேன்’ என்று சொல்கிறார். எனவே தெபொராள் அவருடன் போகிறாள். ஆனால், ‘போரில் வெற்றி பெற்ற பெருமை உனக்குக் கிடைக்காது, ஏனென்றால் சிசெராவை ஒரு பெண்ணின் கையில் யெகோவா ஒப்புக்கொடுப்பார்’ என்று அவள் பாராக்கிடம் சொல்கிறாள். அவள் சொன்னபடியே நடக்கிறது.
சிசெராவின் போர் வீரர்களை நேருக்கு நேர் சந்திக்க தாபோர் மலையிலிருந்து பாராக் இறங்குகிறார். திடீரென வெள்ளம் புரண்டோடும்படி யெகோவா செய்கிறார். சிசெராவின் போர் வீரர்கள் பலர் வெள்ளத்தில் மூழ்கிவிடுகிறார்கள். சிசெராவோ தன் இரதத்திலிருந்து இறங்கி ஓடிப்போகிறான். 
பாராக், யாகேல், சிசெரா
பாராக், யாகேல், சிசெரா

சிறிது நேரத்திற்குப் பின், யாகேலின் கூடாரத்துக்கு சிசெரா வருகிறான். அவனை உள்ளே வரவழைத்து, அவனுக்குக் குடிக்கப் பால் கொடுக்கிறாள். பால் குடித்ததால் அவனுக்குத் தூக்கம் வருகிறது. சீக்கிரத்தில் ஆழ்ந்து தூங்கி விடுகிறான். அப்பொழுது யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, இந்தக் கெட்ட ஆளின் தலையில் அடித்து விடுகிறாள். பிற்பாடு, பாராக் வந்தபோது சிசெராவின் பிணத்தைக் காட்டுகிறாள்! ஆக, தெபொராள் சொன்னபடியே நடந்தது.
பிற்பாடு யாபீன் ராஜாவும் கொல்லப்படுகிறான். இஸ்ரவேலர் மீண்டும் சிறிது காலத்திற்குச் சமாதானமாக வாழ்கிறார்கள்.
நியாயாதிபதிகள் 2:14-22; 4:1-24; 5:1-31.


கேள்விகள்

  • நியாயாதிபதிகள் யார், சிலருடைய பெயர்களைச் சொல்.
  • தெபொராளுக்கு என்ன விசேஷித்த சிலாக்கியம் இருக்கிறது, அவள் வேறெதுவும் செய்ய வேண்டியிருக்கிறது?
  • யாபீனும் அவனுடைய படைத்தலைவனான சிசெராவும் இஸ்ரவேலரைப் பயமுறுத்தியபோது, யெகோவாவின் என்ன செய்தியை பாராக்கிடம் தெபொராள் சொல்கிறாள், வெற்றி பெற்ற பெருமை யாருக்குக் கிடைக்கும் என அவள் சொல்கிறாள்?
  • தான் ஒரு தைரியமுள்ள பெண் என்பதை யாகேல் எப்படிக் காட்டுகிறாள்?
  • யாபீன் ராஜா கொல்லப்பட்ட பிறகு என்ன நடக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • நியாயாதிபதிகள் 2:14-22-ஐ வாசி. யெகோவாவின் கோபத்தை இஸ்ரவேலர் எப்படித் தங்கள் மீது வருவித்து கொண்டார்கள், இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 2:20; நீதி. 3:1, 2; எசே. 18:21-23)
  • நியாயாதிபதிகள் 4:1-24-ஐ வாசி. தெபொராள் மற்றும் யாகேலிடமிருந்து இன்று கிறிஸ்தவப் பெண்கள் விசுவாசத்திற்கும் தைரியத்திற்குமான என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (நியா. 4:4, 8, 9, 14, 21, 22; நீதி. 31:30; 1 கொ. 16:13)
  • நியாயாதிபதிகள் 5:1-31-ஐ வாசி. பாராக்கும் தெபொராளும் பாடிய வெற்றிப் பாடல், வரப்போகிற அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி செய்யப்படும் ஜெபமாக எப்படிப் பயன்படுத்தப்படலாம்? (நியா. 5:3, 31; 1 நா. 16:8-10; வெளி. 7:9, 10; 16:16; 19:19-21)

No comments:

Post a Comment