இயேசு ஒரு தொழுவத்தில் பிறக்கிறார்
இந்தச் சிறு குழந்தை யார் என்று உனக்குத்
தெரியுமா? இயேசுவே இந்தக் குழந்தை. இப்பொழுதுதான் அவர் தொழுவத்தில்
பிறந்திருக்கிறார். தொழுவம் என்பது மிருகங்கள் வைக்கப்படுகிற இடம். இயேசுவை
மரியாள் முன்னணையில் படுக்க வைக்கிறாள், இது கழுதைகளுக்கும் மற்ற
மிருகங்களுக்கும் உணவு வைக்கிற இடமாகும். ஆனால் மரியாளும் யோசேப்பும் ஏன்
இந்த மிருகங்களுடன் இங்கே இருக்கிறார்கள்? குழந்தை பிறப்பதற்கு ஏற்ற இடமா
இது?
இல்லை, ஒரு குழந்தை பிறப்பதற்கு ஏற்ற இடம் இதுவல்ல.
என்றாலும், அவர்கள் இங்கே இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? ஒவ்வொருவரும்
தங்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்காக தங்களுடைய பிறந்த ஊருக்கு
வரவேண்டும் என்று ரோம ராஜாவான அகுஸ்து ராயன் ஒரு சட்டத்தைக் கொண்டு
வந்தான். யோசேப்பின் பிறந்த ஊர் பெத்லகேம். எனவே பெயரைப் பதிவு செய்ய
அவரும் மரியாளும் இங்கு வந்திருந்தார்கள், வந்து சேர்ந்தபோது தங்குவதற்கு
அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் இந்த மிருகங்களுடன் தங்க
வேண்டியதாயிற்று. தங்கிய அதே நாளில் இயேசுவை மரியாள் பெற்றெடுத்தாள்! இந்த
இடத்தில் பிறந்திருந்தாலும், நீ இங்கே பார்க்கிறபடி, அவர் நன்றாக
இருக்கிறார்.
இயேசுவைக் காண வருகிற மேய்ப்பர்களை உன்னால் பார்க்க முடிகிறதா? இவர்கள்
வயல் வெளிகளில் இரவு நேரத்தில் ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள்,
அப்போது ஒரு பிரகாசமான ஒளி அவர்களைச் சுற்றி ஜொலித்தது. ஆம், அது ஒரு
தேவதூதனே! மேய்ப்பர்கள் மிகவும் பயந்து போனார்கள். ஆனால் அந்தத் தேவதூதன்:
‘பயப்படாதிருங்கள்! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல
வந்திருக்கிறேன். இன்று, பெத்லகேமில் கர்த்தராகிய கிறிஸ்து
பிறந்திருக்கிறார். அவர் ஜனங்களை மீட்பார்! அவரைத் துணிகளில் சுற்றி
முன்னணையில் படுக்க வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்’ என்று சொன்னார்.
அப்போது திடீரென நிறைய தேவதூதர்கள் தோன்றி கடவுளைத் துதிக்கத்
தொடங்கினார்கள். அதனால் இந்த மேய்ப்பர்கள் இயேசு இருக்கும் இடத்தைக்
கண்டுபிடிக்க அவசர அவசரமாக சென்றார்கள், கடைசியில் அவரைக் கண்டுபிடித்து
விட்டார்கள்.
இயேசு ஏன் இவ்வளவு விசேஷித்தவராக இருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? அவர் உண்மையில்
யார் என்று தெரியுமா? இந்தப் புத்தகத்தின் ஆரம்பக் கதையில் கடவுளுடைய
முதல் குமாரனைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது ஞாபகம் இருக்கிறது தானே?
வானங்களையும் பூமியையும் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்குவதில் யெகோவாவுடன்
வேலை செய்த குமாரனே இந்த இயேசு!
ஆம், யெகோவா பரலோகத்திலிருந்த
தம்முடைய குமாரனின் உயிரை மரியாளின் கருப்பைக்குள் வைத்தார். உடனடியாக
அவளுடைய வயிற்றில் ஒரு குழந்தை வளரத் தொடங்கியது, மற்ற குழந்தைகள் தங்கள்
அம்மாக்களின் வயிற்றில் வளருவதைப் போலவே இந்தக் குழந்தையும் மரியாளின்
வயிற்றில் வளர ஆரம்பித்தது. ஆனால் அது கடவுளுடைய மகனாக இருந்தது.
கடைசியில், அந்தக் குழந்தையான இயேசு இங்கே பெத்லகேமிலுள்ள தொழுவத்தில்
பிறந்தார். இயேசு பிறந்து விட்டார் என்ற செய்தியை ஜனங்களுக்குச் சொல்வதில்
அந்தத் தேவதூதர்கள் ஏன் அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் என்று இப்போது உனக்குப்
புரிகிறதா?
லூக்கா 2:1-20.
![]() |
யோசேப்பு, மரியாள் மற்றும் குழந்தை இயேசு |
கேள்விகள்
- படத்திலுள்ள சிறு குழந்தை யார், அந்தக் குழந்தையை மரியாள் எங்கே படுக்க வைக்கிறாள்?
- மிருகங்கள் இருக்கிற தொழுவத்தில் இயேசு ஏன் பிறந்தார்?
- படத்தில் பார்க்கிறபடி, இந்தத் தொழுவத்திற்கு வருகிறவர்கள் யார், அவர்களிடம் தேவதூதன் என்ன சொல்லியிருந்தார்?
- இயேசு ஏன் விசேஷித்தவராக இருக்கிறார்?
- இயேசுவைக் கடவுளுடைய குமாரன் என்று ஏன் அழைக்கலாம்?
கூடுதல் கேள்விகள்
- லூக்கா 2:1-20-ஐ வாசி. (அ) இயேசுவின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் அகுஸ்து ராயன் என்ன பங்கு வகித்தார்? (லூக். 2:1-4; மீ. 5:2)
(ஆ) ஒரு நபர், இங்குச் சொல்லப்பட்டுள்ள “நற்பிரியமுள்ள மனிதரில்” ஒருவராக எப்படி ஆகலாம்? (லூக். 2:14, NW; மத். 16:24; யோவா. 17:3; அப். 3:19; எபி. 11:6)
(இ) இரட்சகரின் பிறப்பைக் குறித்து தாழ்மையுள்ள யூத மேய்ப்பர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களென்றால், இன்று கடவுளுடைய ஊழியர்கள் மகிழ்ச்சியடைவதற்கு என்ன மிகப் பெரிய காரணம் இருக்கிறது? (லூக். 2:10, 11; எபே. 3:8, 9; வெளி. 11:15; 14:6)
No comments:
Post a Comment