Thursday, 5 December 2013

தாவீதின் வீட்டில் பிரச்சினை

தாவீதின் வீட்டில் பிரச்சினை

எருசலேமில் தாவீது தன் ஆட்சியைத் தொடங்கியதிலிருந்து யெகோவா அவருக்குப் பல வெற்றிகளைக் கொடுக்கிறார். கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு அளிக்கப் போவதாக யெகோவா முன்பு வாக்குக் கொடுத்திருந்தார். வாக்குக் கொடுத்திருந்த அந்தத் தேசம் முழுவதும் இப்போது யெகோவாவின் உதவியுடன் அவர்கள் கைக்கே வந்துவிடுகிறது.
தாவீது ஒரு நல்ல ராஜாவாக இருக்கிறார். யெகோவாவை அவர் நேசிக்கிறார். அதனால் எருசலேமைக் கைப்பற்றியதும் முதலாவதாக அவர் என்ன செய்கிறார் தெரியுமா? யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வருகிறார். அதை வைப்பதற்கு ஓர் ஆலயத்தைக் கட்டவும் விரும்புகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது, மோசமான ஒரு காரியத்தைச் செய்கிறார். வேறொருவருக்குச் சொந்தமான ஒரு பொருளை எடுத்துக்கொள்வது தவறு என்பது தாவீதுக்கு தெரியும். ஆனால் ஒரு சாயங்கால நேரத்தில், அரண்மனை மாடியில் இருக்கும்போது அவர் கீழே பார்க்கிறார், அப்போது மிக அழகான ஒரு பெண் அவர் கண்ணில் படுகிறாள். அவளுடைய பெயர் பத்சேபாள். அவளுடைய கணவர் பெயர் உரியா, அவர் தாவீதின் போர் வீரர்களில் ஒருவர்.
பத்சேபாள் தனக்கு வேண்டுமென்று தாவீது ரொம்ப ஆசைப்படுகிறார், அதனால் அவளை அரண்மனைக்குக் கொண்டுவரச் செய்கிறார். அவளுடைய கணவரோ போர் களத்தில் இருக்கிறார். தாவீது பாத்சேபாளிடம் காதல் செய்கிறார். பிற்பாடு அவள் கர்ப்பமாகி விடுகிறாள். இதை அறிந்த தாவீதுக்கு ஒரே மனக்குழப்பம். தன்னுடைய தளபதியான யோவாபுக்குச் செய்தி அனுப்பி, உரியாவை போர் களத்தில் முன்னணியில் நிறுத்தும்படி உத்தரவிடுகிறார், போரில் அவர் கொல்லப்பட வேண்டும் என்பதுதான் தாவீதின் திட்டம். அதன்படியே போரில் உரியா கொல்லப்படுகிறார், பிறகு பத்சேபாளை தாவீது கல்யாணம் செய்துகொள்கிறார்.
தாவீது இப்படிச் செய்ததால் யெகோவாவுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது. அதனால் அவர் செய்த பாவங்களை உணர்த்துவதற்காக தம்முடைய ஊழியக்காரன் நாத்தானை யெகோவா அனுப்புகிறார். இந்தப் படத்தில் தாவீதிடம் நாத்தான் பேசிக் கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். தான் செய்த தவறுக்காக தாவீது மிகவும் வருத்தப்படுவதால் யெகோவா அவருக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. என்றாலும், ‘இந்தக் கெட்ட காரியங்களை நீ செய்திருப்பதால் உன்னுடைய வீட்டில் உனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டாகும்’ என்று தாவீதிடம் யெகோவா சொல்கிறார். அவர் சொன்னபடியே பிற்பாடு தாவீதுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன.
முதலாவதாக பத்சேபாளின் மகன் செத்துப் போகிறான். பின்பு தாவீதின் முதல் மகன் அம்னோன் தன் சகோதரி தாமாரை தன்னுடன் தனியாக இருக்கச் செய்து பலவந்தமாக அவளிடம் காதல் செய்கிறான். இதைக் கேள்விப்பட்ட தாவீதின் மற்றொரு மகன் அப்சலோமுக்கு கோபம் வந்ததால், அம்னோனை கொன்று போடுகிறான். பிற்பாடு, அப்சலோம் நிறைய ஜனங்களுடைய ஆதரவைப் பெற்று தன்னை ராஜாவாக்கிக் கொள்கிறான். கடைசியில், அப்சலோமுக்கு எதிராகப் போரில் தாவீது வெற்றியடைகிறார், அப்சலோம் கொல்லப்படுகிறான். இப்படியாக, தாவீதுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன. 
நாத்தான் தாவீதுக்கு ஆலோசனை வழங்குகிறார்
நாத்தான் தாவீதுக்கு ஆலோசனை வழங்குகிறார்

இதற்கிடையே, பத்சேபாளுக்கு சாலொமோன் என்ற ஒரு மகன் பிறக்கிறான். தாவீது வயதாகி நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, அவருடைய இன்னொரு மகன் அதோனியா தன்னை ராஜாவாக்கிக்கொள்ள முயலுகிறான். ஆனால், சாலொமோன்தான் ராஜாவாக இருப்பான் என்று எல்லோருக்கும் காட்டுவதற்காக அவன் தலையில் எண்ணெய்யை ஊற்றும்படி ஆசாரியன் சாதோக்கிடம் தாவீது கட்டளையிடுகிறார். இதன் பின்பு தன் 70 வயதில் தாவீது இறந்து விடுகிறார். 40 ஆண்டுகளுக்கு அவர் அரசாண்டார். இப்போது சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருக்கிறார்.
2 சாமுவேல் 11:1-27; 12:1-18; 1 இராஜாக்கள் 1:1-48.


கேள்விகள்

  • யெகோவாவின் உதவியோடு, கடைசியில் கானான் தேசம் என்ன ஆகிறது?
  • ஒரு சாயங்கால நேரத்தில் அரண்மனை மாடியில் தாவீது இருக்கும்போது என்ன நடக்கிறது?
  • தாவீதின் மீது யெகோவா ஏன் பயங்கரமாகக் கோபப்படுகிறார்?
  • படத்தில் பார்க்கிறபடி, தாவீது செய்த பாவங்களை உணர்த்துவதற்காக யாரை யெகோவா அனுப்புகிறார், தாவீதுக்கு என்ன நடக்கும் என அந்த நபர் சொல்கிறார்?
  • தாவீதுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டாகின்றன?
  • தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலில் யார் ராஜாவாக ஆகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • இரண்டு சாமுவேல் 11:1-27-ஐ வாசி. (அ) யெகோவாவின் சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பது எப்படி நமக்கு ஒரு பாதுகாப்பாய் அமைகிறது?
    (ஆ) பாவம் செய்ய தாவீது எப்படித் தூண்டப்பட்டார், இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு இது என்ன எச்சரிப்பைத் தருகிறது? (2 சா. 11:2; மத். 5:27-29; 1 கொ. 10:12; யாக். 1:14, 15)
  • இரண்டு சாமுவேல் 12:1-18-ஐ வாசி. (அ) தாவீதுக்கு நாத்தான் ஆலோசனை கொடுத்த விதத்திலிருந்து மூப்பர்களும் பெற்றோர்களும் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (2 சா. 12:1-4; நீதி. 12:18; மத். 13:34)
    (ஆ) தாவீதுக்கு யெகோவா ஏன் இரக்கம் காட்டினார்? (2 சா. 12:13; சங். 32:5; 2 கொ. 7:9, 10)

No comments:

Post a Comment