சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார்
யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காக
அவரிடமிருந்து பெற்றிருந்த திட்டங்களை தாவீது தான் மரிப்பதற்கு முன்
சாலொமோனிடம் கொடுத்திருந்தார். தன் ஆட்சியின் நான்காவது வருஷத்தில்,
சாலொமோன் அந்த ஆலயத்தைக் கட்டத் தொடங்குகிறார். பத்தாயிரக்கணக்கான ஆட்கள்
அதற்காக வேலை செய்கிறார்கள், எக்கச்சக்கமான பணமும் செலவாகிறது. ஏனென்றால்
அதைக் கட்டுவதற்கு ஏராளமான பொன்னும் வெள்ளியும் பயன்படுத்தப்படுகிறது.
கடைசியில், ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்ததைப் போலவே இந்த ஆலயத்திலும் இரண்டு முக்கிய
அறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த அறைகள் இரண்டு மடங்கு பெரியவை. இந்த
ஆலயத்தின் உள்ளறைக்குள் உடன்படிக்கைப் பெட்டியை வைக்க சாலொமோன்
உத்தரவிடுகிறார், ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த மற்றப் பொருட்கள் இரண்டாவது
அறையில் வைக்கப்படுகின்றன.
ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறபோது ஒரு
பெரிய விழாவே நடைபெறுகிறது. இந்தப் படத்தில் நீ பார்க்கிறபடி, ஆலயத்திற்கு
முன் சாலொமோன் முழங்காற்படியிட்டு ஜெபிக்கிறார். ‘தேவனே, நீர் தங்குவதற்கு
பரலோகம் முழுவதும்கூட போதாதே, அப்படியானால் நீர் தங்குவதற்கு இந்த ஆலயம்
எப்படி போதுமானதாக இருக்கும். என்றாலும், என் தேவனே, உம்முடைய ஜனங்கள் இந்த
இடத்தை நோக்கி ஜெபிக்கும்போது தயவுசெய்து அவர்களுக்குச் செவிகொடும்’ என்று
யெகோவாவிடம் கேட்கிறார்.
![]() |
சாலொமோன் ராஜா ஜெபம் செய்கிறார் |
சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததும் வானத்திலிருந்து நெருப்பு வருகிறது.
மிருக பலிகளை அது எரித்துப் போடுகிறது. யெகோவாவிடமிருந்து வருகிற
பிரகாசமான ஒளி ஆலயத்தை நிரப்புகிறது. இதெல்லாம் எதைக் காட்டுகிறது? யெகோவா
செவிகொடுக்கிறார் என்பதைக் காட்டுகிறது, அதோடு, ஆலயம் கட்டப்பட்டுள்ள
விதத்தைக் குறித்தும் சாலொமோனின் ஜெபத்தைக் குறித்தும் அவர்
சந்தோஷப்படுகிறார் என்பதையும் காட்டுகிறது. இப்போது ஜனங்கள் ஆசரிப்புக்
கூடாரத்திற்குச் செல்வதற்கு பதிலாக, இந்த ஆலயத்திற்கு வந்து வணங்க
ஆரம்பிக்கிறார்கள்.
நீண்ட காலத்திற்கு சாலொமோன் ஞானமான முறையில்
அரசாளுகிறார், ஜனங்களும் சந்தோஷமாய் இருக்கிறார்கள். ஆனால், மற்ற நாட்டு
பெண்களை, அதுவும் யெகோவாவை வணங்காத பல பெண்களை அவர் கல்யாணம் செய்து
கொள்கிறார். இவர்களில் ஒருத்தி விக்கிரகத்திற்கு முன் நின்று வணங்குவதை
இந்தப் படத்தில் உன்னால் பார்க்க முடிகிறதா? கடைசியாக சாலொமோனும் தன்
மனைவிகளின் பேச்சைக் கேட்டு மற்ற கடவுட்களை வணங்க ஆரம்பித்துவிடுகிறார்.
அதன் பிறகு அவர் எப்படி மாறிவிடுகிறார் தெரியுமா? ஜனங்களை அன்பாக நடத்துவதை
நிறுத்திவிடுகிறார். கொடுமைக்காரனாக ஆகிறார். அதனால், அந்த ஜனங்களுக்கு
சந்தோஷமே போய்விடுகிறது.
![]() |
சாலொமோன் ராஜா ஒரு சிலையை வணங்குகிறார் |
சாலொமோன் இப்படியெல்லாம் நடப்பதைப் பார்த்து யெகோவா கோபப்படுகிறார்.
அதனால் அவரிடம்: ‘ராஜ்யத்தை உன்னிடமிருந்து எடுத்து வேறொருவனுக்குக்
கொடுக்கப் போகிறேன். இதை உன் வாழ்நாளில் செய்யமாட்டேன், உன் மகனின் ஆட்சிக்
காலத்தில் செய்யப் போகிறேன். என்றாலும், ராஜ்யத்திலுள்ள எல்லா ஜனங்களையும்
உன் மகனிடமிருந்து பிரிக்க மாட்டேன்’ என்று சொல்கிறார். இது எப்படி
நடக்கிறதென்று பார்க்கலாம்.
1 நாளாகமம் 28:9-21; 29:1-9; 1 இராஜாக்கள் 5:1-18; 2 நாளாகமம் 6:12-42; 7:1-5; 1 இராஜாக்கள் 11:9-13.
கேள்விகள்
- யெகோவாவின் ஆலயத்தை சாலொமோன் கட்டி முடிக்க எவ்வளவு காலம் எடுக்கிறது, அதற்கு ஏன் எக்கச்சக்கமான பணம் செலவாகிறது?
- ஆலயத்தில் எத்தனை முக்கிய அறைகள் இருக்கின்றன, உள்ளறைக்குள் என்ன வைக்கப்படுகிறது?
- ஆலயம் கட்டி முடிக்கப்படுகிறபோது ஜெபத்தில் சாலொமோன் என்ன சொல்கிறார்?
- சாலொமோனின் ஜெபத்தைக் குறித்து தாம் சந்தோஷப்படுவதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்?
- சாலொமோனின் மனைவிகள் அவரை என்ன செய்யும்படி தூண்டுகிறார்கள், இதனால் சாலொமோனுக்கு என்ன நடக்கிறது?
- சாலொமோன் மீது யெகோவா ஏன் கோபப்படுகிறார், அவரிடம் யெகோவா என்ன சொல்கிறார்?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று நாளாகமம் 28:9, 10-ஐ வாசி.
1 நாளாகமம் 28:9, 10-ல் உள்ள தாவீதின் வார்த்தைகளைக் கவனிக்கையில், நம்
அன்றாட வாழ்க்கையில் நாம் என்ன செய்ய முயல வேண்டும்? (சங். 19:14; பிலி.
4:8, 9)
- இரண்டு நாளாகமம் 6:12-21, 32-42-ஐ வாசி. (அ)
மனிதரால் கட்டப்படுகிற எந்தவொரு கட்டிடமும் மகா உன்னத கடவுள் வாசம்
பண்ணுவதற்குப் போதுமானதல்ல என்பதை சாலொமோன் எப்படிச் சொல்கிறார்? (2 நா.
6:18; அப். 17:24, 25)
(ஆ) 2 நாளாகமம் 6:32, 33-ல் உள்ள சாலொமோனின் வார்த்தைகள் யெகோவாவைப் பற்றி என்ன சொல்கின்றன? (அப். 10:34, 35; கலா. 2:6)
- இரண்டு நாளாகமம் 7:1-5-ஐ வாசி.
யெகோவாவின் மகிமையைக் கண்ட இஸ்ரவேலர் யெகோவாவைத் துதிக்க தூண்டப்பட்டது
போல, யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய ஜனங்கள் மீது இருப்பதைக் குறித்து
தியானிப்பது என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்? (2 நா. 7:3; சங்.
22:22; 34:1; 96:2)
- ஒன்று இராஜாக்கள் 11:9-13-ஐ வாசி.
கடைசிவரை உண்மையோடு நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சாலொமோனின் வாழ்க்கை
எப்படிக் காட்டுகிறது? (1 இரா. 11:4, 9; மத். 10:22; வெளி. 2:10)
No comments:
Post a Comment