Monday, 9 December 2013

தமஸ்குவுக்குப் போகும் வழியில்

தமஸ்குவுக்குப் போகும் வழியில்

தரையில் விழுந்து கிடப்பது யார் என்று உனக்குத் தெரிகிறதா? அவர் சவுல். ஸ்தேவான் மீது கல்லெறிந்த ஆட்களின் மேலங்கியைக் காவல் காத்தவர் இவரே என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பிரகாசமான ஒளியைப் பார்! இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஸ்தேவான் கொல்லப்பட்ட பின்பு, இயேசுவின் சீஷர்களைத் துன்பப்படுத்துவதற்காக அவர்கள் எல்லோரையும் சவுல் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவர்களைத் தரதரவென்று வெளியே இழுத்துப் போய் சிறையில் அடைக்கிறார். சீஷர்களில் பலர் வேறு பட்டணங்களுக்குத் தப்பியோடி அங்கே “நற்செய்தியை” அறிவிக்கத் தொடங்குகிறார்கள். அதனால் இயேசுவின் சீஷர்களைக் கண்டுபிடிக்க சவுல் வேறு பட்டணங்களுக்கும் போகிறார். இப்போது அவர் தமஸ்குவுக்குப் போய் கொண்டிருக்கிறார். ஆனால், வழியில் ஆச்சரியமான ஒன்று நடக்கிறது:
திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி சவுலைச் சுற்றிப் பிரகாசிக்கிறது. இங்கே நாம் பார்க்கிறபடி, உடனே அவர் தரையில் விழுந்து விடுகிறார். அப்போது ஒரு குரல்: ‘சவுலே, சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று கேட்கிறது. சவுலுடன் இருக்கிற ஆட்கள் அந்த ஒளியைப் பார்க்கிறார்கள், அந்தக் குரலையும் கேட்கிறார்கள், ஆனால் சொல்லப்படுவது எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. 

கர்த்தரே, நீர் யார்?’ என்று சவுல் கேட்கிறார்.
‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே’ என்று பதில் வருகிறது. இயேசு ஏன் இப்படிச் சொல்கிறார் தெரியுமா? அவருடைய சீஷர்களை சவுல் துன்பப்படுத்தும்போது தம்மையே துன்பப்படுத்துவது போல் அவர் உணருகிறார்.
அதற்கு சவுல்: ‘கர்த்தரே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்.
எழுந்து தமஸ்குவுக்குப் போ, அங்கே நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குச் சொல்லப்படும்’ என்று இயேசு சொல்கிறார். சவுல் எழுந்து தன் கண்களைத் திறந்தபோது அவரால் எதையுமே பார்க்க முடியவில்லை. அவர் குருடாகி விட்டார்! அதனால் அவருடன் இருக்கிற ஆட்கள் அவர் கையைப் பிடித்துக்கொண்டு தமஸ்குவுக்கு அழைத்துப் போகிறார்கள்.
இப்போது இயேசு தமஸ்குவிலுள்ள ஒரு சீஷரிடம்: ‘அனனியாவே எழுந்திரு. நேர்த் தெருவு எனப்படும் தெருவுக்குப் போ. யூதாவின் வீட்டில் சவுல் என்பவனைப் பார்க்க வேண்டுமென்று சொல். அவனை என்னுடைய விசேஷ ஊழியனாக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார்.
இயேசு சொன்னபடியே அனனியா செல்கிறார். சவுலைச் சந்தித்தபோது, அவர் மேல் தன் கைகளை வைத்து: ‘உனக்கு மறுபடியும் கண்பார்வை கிடைப்பதற்காகவும், பரிசுத்த ஆவியால் நீ நிரப்பப்படுவதற்காகவும் கர்த்தர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்கிறார். உடனே சவுலின் கண்களிலிருந்து செதில்கள் போன்றவை கீழே விழுகின்றன, விழுந்ததுமே அவருக்குப் பார்வை வந்துவிடுகிறது.
பலதரப்பட்ட தேசத்தாரிடம் போய் பிரசங்கிப்பதற்காக சவுலை கடவுள் மிகப் பெரியளவில் பயன்படுத்துகிறார். சவுல் பிற்பாடு அப்போஸ்தலனாகிய பவுல் என்று அறியப்படுகிறார். இவரைப் பற்றி இன்னும் பல காரியங்களை நாம் படிக்க இருக்கிறோம். ஆனால் அதற்கு முன், பேதுருவை கடவுள் என்ன செய்யச் சொல்லி அனுப்புகிறார் என்பதைப் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 8:1-4; 9:1-20; 22:6-16; 26:8-20.


கேள்விகள்

  • ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு சவுல் என்ன செய்கிறார்?
  • தமஸ்குவுக்குப் போகும் வழியில் சவுலுக்கு என்ன ஆச்சரியமான காரியம் நடக்கிறது?
  • சவுலை இயேசு என்ன செய்யச் சொல்கிறார்?
  • அனனியாவிடம் இயேசு என்ன சொல்கிறார், சவுலுக்கு எப்படி மறுபடியும் பார்வை கிடைக்கிறது?
  • சவுல் பிற்பாடு என்ன பெயரில் அறியப்படுகிறார், அவரைக் கடவுள் எப்படிப் பயன்படுத்துகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 8:1-4-ஐ வாசி. புதிதாக உருவான கிறிஸ்தவ சபையை அடுத்தடுத்து துன்புறுத்தல்கள் தாக்கியது கிறிஸ்தவம் பரவுவதற்கு எப்படி உதவியது, நம்முடைய காலத்திலும் இது போன்ற என்ன காரியம் நடந்திருக்கிறது? (அப். 8:4; ஏசா. 54:17)
  • அப்போஸ்தலர் 9:1-20-ஐ வாசி. சவுல் செய்ய வேண்டியிருந்த என்ன மூன்று வேலைகளை இயேசு வெளிப்படுத்தினார்? (அப். 9:15; 13:5; 26:1; 27:24; ரோ. 11:13)
  • அப்போஸ்தலர் 22:6-16-ஐ வாசி. நாம் எப்படி அனனியாவைப் போல் இருக்கலாம், அது ஏன் முக்கியம்? (அப். 22:12; 1 தீ. 3:7; 1 பே. 1:14-16; 2:12)
  • அப்போஸ்தலர் 26:8-20-ஐ வாசி. சவுல் ஒரு கிறிஸ்தவராக மாறியது, அவிசுவாசியான கணவனையோ மனைவியையோ உடையவர்களுக்கு எப்படி உற்சாகமளிக்கிறது? (அப். 26:11; 1 தீ. 1:14-16; 2 தீ. 4:2; 1 பே. 3:1-3)

No comments:

Post a Comment