ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்
இங்கே முழங்கால் படியிட்டிருப்பவர் ஸ்தேவான்.
இயேசுவின் உண்மையுள்ள ஒரு சீஷர். ஆனால் அவருக்கு இப்போது என்ன
நடந்துகொண்டிருக்கிறது பார்! இந்த ஆட்கள் பெரிய பெரிய கற்களை அவர் மேல்
எறிகிறார்கள். இப்படியொரு பயங்கரமான காரியத்தை ஏன் செய்கிறார்கள்?
அந்தளவுக்கு அவர்கள் ஏன் ஸ்தேவானை வெறுக்கிறார்கள்? நாம் பார்க்கலாம்.
![]() |
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார் |
பல அற்புதங்களைச் செய்ய ஸ்தேவானுக்கு கடவுள் உதவி செய்திருக்கிறார்.
அதை இந்த ஆட்களால் பொறுக்க முடியவில்லை. ஜனங்களுக்கு ஸ்தேவான் சத்தியத்தைச்
சொல்லித் தருவதால் வேண்டுமென்றே அவரைச் சண்டைக்கு இழுக்கிறார்கள். ஆனால்
ஸ்தேவானுக்கு கடவுள் நிறைய அறிவைக் கொடுக்கிறார். அந்த ஆட்கள் பொய்யான
விஷயங்களைக் கற்பிக்கிறார்கள் என்பதை ஜனங்களுக்கு அவர் எடுத்துச்
சொல்கிறார். அதனால் அந்த ஆட்கள் இன்னுமதிக எரிச்சல் அடைகிறார்கள். எனவே,
அவரைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். அதோடு சில ஆட்களை வைத்து அவர் மீது
பொய்க் குற்றச்சாட்டுகளையும் சுமத்துகிறார்கள்.
பிரதான ஆசாரியன்
ஸ்தேவானைப் பார்த்து: ‘இதெல்லாம் உண்மையா?’ என்று கேட்கிறார். அதற்கு
ஸ்தேவான் பைபிளிலிருந்து நல்ல ஒரு பேச்சைக் கொடுக்கிறார். பேச்சின்
முடிவில், எப்படி ரொம்ப காலத்திற்கு முன் கெட்ட ஆட்கள் யெகோவாவின்
தீர்க்கதரிசிகளை வெறுத்தார்கள் என்று சொல்கிறார். அப்படிச் சொல்லிவிட்டு:
‘நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள். கடவுளின் ஊழியரான இயேசுவைக்
கொலை செய்தீர்கள், கடவுளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனீர்கள்’
என்று சொல்கிறார்.
இதைக் கேட்டதும் அந்தத் மதத் தலைவர்களுக்கு
வந்ததே கோபம்! நரநரவென்று தங்கள் பற்களைக் கடிக்கிறார்கள். அப்போது
ஸ்தேவான் அண்ணாந்து பார்த்து: ‘இதோ! பரலோகத்தில் கடவுளுடைய வலது
பாரிசத்தில் இயேசு நிற்கிறதை நான் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார். உடனே,
அந்த ஆட்கள் தங்கள் காதுகளைப் பொத்திக்கொள்கிறார்கள், பிறகு பாய்ந்து
சென்று ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போகிறார்கள்.
அங்கே அவர்கள் தங்களுடைய மேலங்கிகளைக் கழற்றி, சவுல் என்ற வாலிபனிடம்
கொடுத்து கவனிக்கச் சொல்கிறார்கள். இங்கே சவுலை நீ பார்க்கிறாயா? பிறகு
இந்த ஆட்களில் சிலர் ஸ்தேவான் மேல் கல்லெறியத் தொடங்குகிறார்கள். இவர்களில்
சிலர் மதத் தலைவர்களின் பேச்சைக் கேட்டுத்தான் இப்படிச் செய்கிறார்கள்
என்பது ஸ்தேவானுக்குத் தெரியும். அதனால் அவர் முழங்கால் படியிட்டு:
‘யெகோவாவே, இந்தக் கெட்ட காரியத்திற்காக இவர்களைத் தண்டியாதேயும்’ என்று
கடவுளிடம் ஜெபிக்கிறார். பிறகு செத்துப்போய் விடுகிறார்.
யாராவது
உனக்கு ஒரு கெடுதல் செய்தால், பதிலுக்குப் பதில் நீ அவர்களுக்குக் கெடுதல்
செய்ய நினைக்கிறாயா, அவர்களுக்குக் கெடுதல் செய்யும்படி கடவுளை
வேண்டிக்கொள்கிறாயா? ஸ்தேவான் அப்படிச் செய்யவில்லை, இயேசுவும் அப்படிச்
செய்யவில்லை. தங்களை வெறுத்தவர்களைக்கூட அவர்கள் நேசித்தார்கள். அவர்களைப்
போலவே நடக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அப்போஸ்தலர் 6:8-15; 7:1-60.
கேள்விகள்
- ஸ்தேவான் யார், என்ன செய்வதற்குக் கடவுள் அவருக்கு உதவி செய்திருக்கிறார்?
- ஸ்தேவான் எதை எடுத்துச் சொல்வதால் மதத் தலைவர்கள் பயங்கரமாகக் கோபப்படுகிறார்கள்?
- அந்த ஆட்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போய் என்ன செய்கிறார்கள்?
- இந்தப் படத்தில், மேலங்கிகளைக் கவனித்துக்கொண்டு நிற்கிற அந்த வாலிபன் யார்?
- ஸ்தேவான் மரிப்பதற்கு முன்பு, யெகோவாவிடம் என்ன சொல்லி ஜெபம் செய்கிறார்?
- நமக்கு எதிராக யாரேனும் தீங்கு செய்தால் ஸ்தேவானைப் போல் நாம் என்ன செய்ய வேண்டும்?
கூடுதல் கேள்விகள்
- அப்போஸ்தலர் 6:8-15-ஐ வாசி.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை நிறுத்துவதற்காக மதத் தலைவர்கள்
என்னென்ன சூழ்ச்சி வேலைகளைச் செய்திருக்கிறார்கள்? (அப். 6:9, 11, 13)
- அப்போஸ்தலர் 7:1-60-ஐ வாசி.
(அ) நியாயசங்கத்திற்கு முன்பாக நற்செய்தியை ஆதரித்து ஸ்தேவான் திறம்பட
பேசுவதற்கு எது உதவியது, இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன
கற்றுக்கொள்ளலாம்? (அப். 7:51-53; ரோ. 15:4; 2 தீ. 3:14-17; 1 பே. 3:15)
(ஆ) நம் வேலையை எதிர்ப்பவர்களிடமாக நாம் எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (அப். 7:58-60; மத். 5:44; லூக் 23:33, 34)
No comments:
Post a Comment