தாவீதும் கோலியாத்தும்
பெலிஸ்தர் மறுபடியும் இஸ்ரவேலரோடு போர் செய்ய
வருகிறார்கள். தாவீதின் அண்ணன்மாரில் மூன்று பேர் இப்போது சவுலின் படையில்
இருக்கிறார்கள். எனவே ஒருநாள் தாவீதிடம் ஈசாய்: ‘கொஞ்சம் தானியத்தையும்
ரொட்டிகளையும் உன் அண்ணன்மாருக்குக் கொண்டு போய் கொடுத்துவிட்டு, அவர்கள்
எப்படி இருக்கிறார்களென்று விசாரித்து வா’ என்று சொல்கிறார்.
![]() |
கோலியாத் |
படை முகாமிட்டிருந்த இடத்திற்கு தாவீது வந்து சேருகிறான். தன்னுடைய
அண்ணன்மாரைப் பார்க்க போர்க் களத்திற்கு ஓடுகிறான். பெலிஸ்த இராட்சதன்
கோலியாத் இஸ்ரவேலரைக் கேலி செய்ய அங்கு வருகிறான். காலையிலும் மாலையிலும்
40 நாட்களாக இப்படியே அவன் கேலி செய்து வந்திருக்கிறான். ‘என்னோடு மோத
உங்களில் ஒருவனை என் முன் நிறுத்துங்கள். அவன் என்னை வென்று கொன்று
போட்டால், நாங்கள் உங்களுக்கு அடிமைகள். ஆனால் நான் அவனை வென்று கொன்று
போட்டால், நீங்கள் எல்லோரும் எங்களுக்கு அடிமைகள். என்னோடு நேருக்கு நேர்
மோத எவனையாவது இங்கே அனுப்புங்கள் பார்க்கலாம்’ என்று கத்துகிறான்.
இதைக் கேட்ட தாவீது, ‘இந்தப் பெலிஸ்தனைக் கொன்றுபோட்டு, இப்படிப்பட்ட
அவமானத்திலிருந்து இஸ்ரவேலைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்?’
என்று சில போர் வீரர்களிடம் கேட்கிறான்.
‘அப்படி செய்கிறவனுக்கு
சவுல் ஏராளமான செல்வங்களைக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, தன் சொந்த மகளையே
அவனுக்கு மனைவியாகக் கொடுப்பார்’ என ஒரு போர் வீரன் சொல்கிறான்.
என்றாலும், கோலியாத்தைப் பார்த்து இஸ்ரவேலர் எல்லோரும் பயப்படுகிறார்கள்.
ஏன் தெரியுமா? அவன் அவ்வளவு உயரமாகவும் தடியாகவும் இருக்கிறான். அவன் உயரம்
9 அடிக்கு (ஏறக்குறைய 3 மீட்டருக்கு) மேல். அவனுடைய கேடகத்தைச்
சுமப்பதற்கென்றே இன்னொரு போர் வீரனும் இருக்கிறான்.
கோலியாத்துடன்
சண்டையிட தாவீது விரும்புகிறான் என்று போர் வீரர்கள் சிலர் சவுலிடம்
சொல்கிறார்கள். அதனால் தாவீதிடம் சவுல்: ‘இந்த பெலிஸ்தனோடு மோத உன்னால்
முடியாது. நீ சின்ன பையன், அவனோ காலம் பூராவும் ஒரு போர் வீரனாகவே
இருந்திருக்கிறான்’ என்கிறார். அதற்கு தாவீது: ‘என் அப்பாவுடைய
செம்மறியாடுகளைக் கொண்டுபோன ஒரு கரடியையும் ஒரு சிங்கத்தையும் நான் கொன்று
போட்டிருக்கிறேனே, இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம். யெகோவா எனக்கு உதவி
செய்வார்’ என்று சொல்கிறான். ஆகவே சவுல்: ‘சரி, போ, யெகோவா உன்னோடு
இருப்பாராக’ என்று சொல்லி அனுப்புகிறார்.
தாவீது ஒரு ஓடைக்குச்
சென்று ஐந்து கூழாங்கற்களைப் பொறுக்கி, தன் பைக்குள் போட்டுக் கொள்கிறான்.
பின்பு, கவணை எடுத்துக்கொண்டு அந்த இராட்சதனை நேருக்கு நேர் சந்திப்பதற்காக
போகிறான். அவனைப் பார்த்த கோலியாத்துக்கு நம்பவே முடியவில்லை. இந்தச்
சின்ன பையனை அனுப்பியிருக்கிறார்களே, இவனைக் கொல்வது எவ்வளவு சுலபம் என்று
நினைத்துக் கொள்கிறான்.
![]() |
தாவீது கல்லை எறிகிறார் |
எனவே தாவீதைப் பார்த்து, ‘வா, என் கிட்டே வா, உன்னைப் பறவைகளுக்கும்
மிருகங்களுக்கும் சாப்பிட வீசிவிடுகிறேன்’ என்று சொல்கிறான். அதற்கு
தாவீது: ‘நீ என்னிடம் பட்டயத்துடனும், ஈட்டியுடனும், கேடகத்துடனும்
வருகிறாய், ஆனால் நான் யெகோவாவின் பெயருடன் உன்னிடம் வருகிறேன். இன்று
யெகோவா உன்னை என் கையில் ஒப்படைத்துவிடுவார், நான் உன்னைச் சாகடிக்கப்
போகிறேன்’ என்று சொல்கிறான்.
இப்படிச் சொல்லிக் கொண்டே கோலியாத்தை
நோக்கி ஓடுகிறான். தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணில் வைத்து,
முழு பலத்துடன் அதைச் சுழற்றி வீசுகிறான். அந்தக் கல் நேராகப் போய்
கோலியாத்தின் தலையைத் தாக்குகிறது, தாக்கியவுடனே அவன் செத்து கீழே
விழுகிறான்! தங்களுடைய மாவீரன் விழுந்து விட்டதைப் பெலிஸ்தர் கண்டபோது,
அவர்கள் எல்லோரும் தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறார்கள். இஸ்ரவேலர் அவர்களைத்
துரத்தியடித்து போரில் வெற்றியடைகிறார்கள்.
1 சாமுவேல் 17:1-54.
கேள்விகள்
- இஸ்ரவேல் படையினரிடம் கோலியாத் என்ன சவால் விடுகிறான்?
- கோலியாத் எவ்வளவு பெரிய உருவமுடையவன், கோலியாத்தைக் கொல்பவனுக்கு என்ன கொடுப்பதாக சவுல் ராஜா வாக்குக் கொடுக்கிறார்?
- ‘நீ சின்னப் பையனாக இருப்பதால் கோலியாத்துடன் போர் செய்ய முடியாது’ என தாவீதிடம் சவுல் கூறியபோது அவன் என்ன சொல்கிறான்?
- கோலியாத்துக்குப் பதிலளிக்கையில், யெகோவா மீது நம்பிக்கை இருப்பதை தாவீது எப்படித் தெரிவிக்கிறான்?
- படத்தில் பார்க்கிறபடி, எதை வைத்து கோலியாத்தை தாவீது கொல்கிறான், அதன் பிறகு பெலிஸ்தருக்கு என்ன நடக்கிறது?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று சாமுவேல் 17:1-54-ஐ வாசி. (அ) தாவீதின் தைரியத்திற்குக் காரணம் என்ன, அவருடைய தைரியத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (1 சா. 17:37, 45; எபே. 6:10, 11)
(ஆ) விளையாட்டுகளிலோ பொழுதுபோக்குகளிலோ ஈடுபடுகையில், கோலியாத் காட்டியதைப் போன்ற போட்டி மனப்பான்மையைக் கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? (1 சா. 17:8; கலா. 5:26; 1 தீ. 4:8)
(இ) கடவுளுடைய துணை தனக்கிருக்கிறது என தாவீது விசுவாசித்ததை அவருடைய வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன? (1 சா. 17:45-47; 2 நா. 20:15)
(ஈ) இது இரண்டு படைகளுக்கு இடையில் நடந்த ஒரு போர் என்பதைவிட பொய்க் கடவுட்களுக்கும் மெய்க் கடவுளான யெகோவாவுக்கும் இடையில் நடந்த போர் என இப்பதிவு எப்படிக் காட்டுகிறது? (1 சா. 17:43, 46, 47)
(உ) யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் தாவீதின் முன்மாதிரியை அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? (1 சா. 17:37; எரே. 1:17-19; வெளி. 12:17)
No comments:
Post a Comment