கிணற்றின் அருகே ஒரு பெண்ணுடன்
சமாரியாவிலுள்ள ஒரு கிணற்றின் அருகே சற்று
ஓய்வெடுக்க இயேசு உட்கார்ந்திருக்கிறார். அவருடைய சீஷர்கள் சாப்பாடு வாங்க
பட்டணத்திற்குப் போயிருக்கிறார்கள். அப்போது ஒரு பெண் தண்ணீர் எடுக்க
வந்திருக்கிறாள். இயேசு அவளைப் பார்த்து: ‘குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடு’
என்று கேட்கிறார்.

அவர் அப்படிக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம்! ஏன் என்று
உனக்குத் தெரியுமா? ஏனென்றால் இயேசு ஒரு யூதர், அவளோ ஒரு சமாரியப் பெண்.
யூதர்களுக்கு சமாரியரைக் கண்டாலே பிடிக்காது. சமாரியரிடம் அவர்கள் பேசக்கூட
மாட்டார்கள்! ஆனால் இயேசு எல்லா இனத்தைச் சேர்ந்த ஆட்களையும்
நேசிக்கிறார். எனவே, ‘உன்னிடம் தண்ணீர் கேட்கிறவர் யாரென்று உனக்குத்
தெரிந்தால், நீயே அவரிடம் கேட்பாய், அவர் உனக்கு ஜீவ தண்ணீரைக் கொடுப்பார்’
என்று அவளிடம் சொல்கிறார்.
அதற்கு அந்தப் பெண்: ‘ஐயா, கிணறு
இவ்வளவு ஆழமாக இருக்கிறது, உம்மிடம் ஒரு வாளிகூட இல்லை,
அப்படியிருக்கும்போது இந்த ஜீவத் தண்ணீரை எப்படி எடுத்துக் கொடுப்பீர்?’
என்று கேட்கிறாள்.
‘இந்தக் கிணற்றுத் தண்ணீரை குடித்தால் உனக்கு
மறுபடியும் தாகமெடுக்கும். ஆனால் நான் கொடுக்கப் போகும் தண்ணீரைக்
குடித்தால் என்றென்றும் உயிர் வாழலாம்’ என்று இயேசு விளக்குகிறார்.
‘அப்படியானால், அந்தத் தண்ணீரை எனக்குக் கொடுங்கள்! பிறகு எனக்குத் தாகமே
எடுக்காது. இனிமேலும் இங்கே வந்து தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியமும்
இருக்காது’ என்கிறாள்.
இயேசு உண்மையான தண்ணீரைப் பற்றிப் பேசிக்
கொண்டிருக்கிறார் என்று அந்தப் பெண் நினைக்கிறாள். ஆனால் அவர் கடவுளையும்
அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய சத்தியத்தைக் குறித்துப் பேசிக்
கொண்டிருக்கிறார். இந்தச் சத்தியம்தான் ஜீவத் தண்ணீரைப் போல் இருக்கிறது.
இது ஒருவருக்கு நித்திய ஜீவனையே கொடுக்கும்.
இயேசு இப்போது அந்தப் பெண்ணிடம்: ‘போய் உன் கணவனை அழைத்துக் கொண்டு வா’ என்று சொல்கிறார்.
எனக்குக் கணவன் இல்லை’ என்று அவள் பதிலளிக்கிறாள்.
‘சரியாக சொன்னாய், உனக்கு ஒரு கணவன் இல்லை, ஐந்து கணவர்கள்
இருந்திருக்கிறார்கள். இப்போது யாருடன் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவன்
உன்னுடைய கணவன் அல்ல’ என்று இயேசு சொல்கிறார்.
அந்தப் பெண்
அப்படியே வியந்து போகிறாள், ஏனென்றால் அவர் சொன்னதெல்லாம் உண்மை.
இயேசுவுக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியும்? அவர் கடவுளால்
அனுப்பப்பட்டவர், வாக்குப்பண்ணப்பட்டவர். அதனால் அந்த விஷயத்தை கடவுளே
அவருக்குச் சொல்கிறார். இயேசு இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய
சீஷர்கள் வருகிறார்கள். அவர் ஒரு சமாரிய பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதைப்
பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
![]() |
ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார் |
இந்த எல்லா விஷயங்களிலிருந்தும்
நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசு எல்லா இனத்தாரிடமும் அன்பாக
இருக்கிறார் என்று கற்றுக்கொள்கிறோம். நாமும்கூட இயேசுவைப் போலவே இருக்க
வேண்டும். சில ஆட்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவர்கள்
கெட்டவர்கள் என்று நாம் நினைத்து விடக்கூடாது. நித்திய ஜீவனுக்கு
வழிநடத்துகிற சத்தியத்தை எல்லா ஆட்களும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இயேசு
விரும்புகிறார். நாமும்கூட அனைத்து மக்களுக்கும் சத்தியத்தைக்
கற்றுக்கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
யோவான் 4:5-43; 17:3.
கேள்விகள்
- சமாரியாவில் ஒரு கிணற்றருகே இயேசு ஏன் நின்றுவிடுகிறார், அங்கே ஒரு பெண்ணிடம் என்ன சொல்கிறார்?
- அந்தப் பெண் ஏன் ஆச்சரியப்படுகிறாள், அவளிடம் இயேசு என்ன சொல்கிறார், ஏன்?
- இயேசு எந்தத் தண்ணீரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக அந்தப் பெண் நினைக்கிறாள், ஆனால் உண்மையில் எந்தத் தண்ணீரைப் பற்றி இயேசு பேசுகிறார்?
- தன்னைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்டு அவள் ஏன் வியந்து போகிறாள், இயேசுவுக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியும்?
- கிணற்றருகே வந்த அந்தப் பெண்ணின் விஷயத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
கூடுதல் கேள்விகள்
- யோவான் 4:5-43-ஐ வாசி.
(அ) இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, வித்தியாசப்பட்ட இன அல்லது சமுதாய
பின்னணியைச் சேர்ந்தவர்களிடத்தில் நாம் என்ன மனப்பான்மை காட்ட வேண்டும்?
(யோவா. 4:9; 1 கொ. 9:22; 1 தீ. 2:3, 4; தீத். 2:11)
(ஆ) இயேசுவின் சீஷராக ஆகுபவருக்கு என்ன ஆன்மீக நன்மைகள் கிடைக்கின்றன? (யோவா. 4:14; ஏசா. 58:11; 2 கொ. 4:16)
(இ) கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்வதற்கு மனமுள்ளவளாய் இருந்த சமாரியப் பெண்ணைப் போல நாமும் எப்படி நம்முடைய போற்றுதலைக் காட்டலாம்? (யோவா. 4:7, 28; மத். 6:33; லூக். 10:40-42)
No comments:
Post a Comment