தாவீது ராஜாவாகிறார்
தாவீதைப் பிடிக்க சவுல் மறுபடியும் முயற்சி
செய்கிறார். மிகச் சிறந்த போர் வீரர்களில் 3,000 பேரை அழைத்துக்கொண்டு
தாவீதைத் தேடிச் செல்கிறார். தாவீதுக்கு இது தெரிய வந்தபோது, சவுலும்
அவருடைய ஆட்களும் இரவு எங்கு முகாமிட்டிருக்கிறார்கள் என்பதைக்
கண்டுபிடிக்க வேவுகாரரை அனுப்புகிறார். பின்பு தன்னுடைய ஆட்களில் இருவரைப்
பார்த்து: ‘உங்களில் யார் என்னுடன் சவுலின் முகாமிற்கு வருவீர்கள்?’ என்று
கேட்கிறார்.
![]() |
தாவீது சவுல் ராஜாவை நோக்கிக் கூப்பிடுகிறார் |
‘நான் வருகிறேன்’ என்று அபிசாய் பதிலளிக்கிறான். தாவீதின் அக்கா
செருயாவின் மகன்தான் அபிசாய். சவுலும் அவருடைய ஆட்களும் தூங்கிக்
கொண்டிருக்கையில், தாவீதும் அபிசாயும் சத்தமில்லாமல் மெதுவாக சவுலின்
முகாமிற்குள் நுழைகிறார்கள். சவுலின் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும்
அவருடைய தண்ணீர் குவளையையும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் எல்லோரும்
நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் யாருமே அவர்களைப் பார்க்கவில்லை,
அவர்களுடைய சத்தத்தையும் கேட்கவில்லை.
தாவீதையும் அபிசாயையும்
இப்போது பார். சவுலின் முகாமிலிருந்து அவர்கள் தப்பிச் சென்று, ஒரு
குன்றின் உச்சியில் பத்திரமாய் இருக்கிறார்கள். கீழே நிற்கிற இஸ்ரவேலின்
படைத்தளபதியிடம் தாவீது உரக்க பேசுகிறார்: ‘அப்னேரே, நீர் ஏன் உம்முடைய
எஜமானரான ராஜாவைப் பாதுகாக்காமல் இருக்கிறீர்? அவருடைய ஈட்டியும் தண்ணீர்
குவளையும் எங்கே இருக்கிறதென்று பாரும்!’ என்கிறார்.
சவுல்
விழித்துக்கொள்கிறார். தாவீதின் குரலைக் கண்டுகொண்டு: ‘தாவீதே, அது நீ
தானா?’ என்று கேட்கிறார். இந்தப் படத்தில் சவுலும் அப்னேரும் கீழே நிற்பதை
உன்னால் பார்க்க முடிகிறதா?
‘ஆம், என் ராஜாவாகிய ஆண்டவரே’ என்று
தாவீது சவுலுக்குப் பதிலளித்துவிட்டு, ‘நீர் ஏன் என்னைப் பிடிக்க முயற்சி
செய்கிறீர்? நான் உமக்கு என்ன பாவம் செய்தேன்?’ என்று கேட்கிறார். பிறகு,
‘ராஜாவே, உம்முடைய ஈட்டி இங்கே இருக்கிறது. உம்முடைய ஆட்களில் ஒருவன் வந்து
அதை எடுத்துக்கொண்டு போகட்டும்’ என்கிறார்.
அதற்கு சவுல்: ‘நான் தவறு செய்துவிட்டேன், முட்டாள்தனமாய்
நடந்துவிட்டேன்’ என்று ஒப்புக்கொள்கிறார். அதன் பின்பு தாவீது தன் வழியே
சென்றுவிடுகிறார், சவுல் வீட்டுக்குத் திரும்புகிறார். தாவீதோ,
‘என்றைக்காவது ஒரு நாள் சவுல் என்னைக் கொன்று போட்டு விடுவார். அதனால்
பெலிஸ்தரின் தேசத்திற்கு நான் தப்பிப்போக வேண்டும்’ என்று தனக்குத் தானே
சொல்லிக் கொள்கிறார். அதன்படியே அங்கு போகிறார். அங்கு போனதும் அவர்கள்
பக்கம் தான் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார். அந்த பெலிஸ்தரும் ஏமாந்துபோய்
அதை நம்பிவிடுகிறார்கள்.
சிறிது காலத்திற்குப் பின் பெலிஸ்தர்
இஸ்ரவேலுக்கு விரோதமாகப் போர் செய்ய செல்கிறார்கள். அந்தப் போரில், சவுலும்
யோனத்தானும் கொல்லப்படுகிறார்கள். இதனால் தாவீது அதிக சோகமாகி விடுகிறார்.
சோகத்தில், அழகிய பாடல் ஒன்றை எழுதுகிறார், அதில்: ‘உனக்காக
வருந்துகிறேன், என் சகோதரன் யோனத்தானே. நீ எனக்கு எவ்வளவு அன்பானவன்!’
என்று பாடுகிறார்.
![]() |
சவுல் ராஜாவும் அப்னேரும் |
பிற்பாடு, தாவீது இஸ்ரவேலுக்குத் திரும்பி
வந்து எப்ரோன் பட்டணத்திற்குச் செல்கிறார். சவுலின் மகன் இஸ்போசேத்தை
ராஜாவாக்க சில ஆட்கள் விரும்புகிறார்கள்; ஆனால் தாவீதை ராஜாவாக்க
மற்றவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே அவர்களுக்கு இடையே ஒரு போர் நடக்கிறது.
கடைசியாக தாவீதின் ஆட்கள் வெற்றி பெறுகிறார்கள். தாவீது ராஜாவாகிறார்,
அப்போது அவருக்கு 30 வயது. ஏழரை ஆண்டுகள் எப்ரோனில் ஆளுகிறார். அங்கே
அவருக்கு மகன்கள் பிறக்கிறார்கள், அவர்களில் சிலர் அம்னோன், அப்சலோம்,
அதோனியா என்போர் ஆவர்.
சில காலம் கழித்து, தாவீதும் அவருடைய
ஆட்களும் எருசலேம் என்ற ஓர் அழகிய நகரத்தைக் கைப்பற்றுகிறார்கள். இந்தப்
போரை தாவீதின் அக்கா செருயாவின் மற்றொரு மகன் யோவாப் தலைமைதாங்கி
நடத்தியதால் தாவீது அவரைப் படைத்தளபதியாக்கி கெளரவிக்கிறார். இப்போது
தாவீது எருசலேம் நகரத்தில் ஆளத் தொடங்குகிறார்.
1 சாமுவேல் 26:1-25; 27:1-7; 31:1-6; 2 சாமுவேல் 1:26; 3:1-21; 5:1-10; 1 நாளாகமம் 11:1-9.
கேள்விகள்
- சவுல் தன் முகாமில் தூங்கிக் கொண்டிருந்தபோது தாவீதும் அபிசாயும் என்ன செய்தார்கள்?
- சவுலிடம் தாவீது என்ன கேள்விகளைக் கேட்கிறார்?
- சவுலை விட்டு வந்த பிறகு தாவீது எங்கே போகிறார்?
- தாவீது மிகவும் சோகமடைந்து ஓர் அழகிய பாடலை எழுதுவதற்குக் காரணம் என்ன?
- தாவீதை எப்ரோனில் ராஜாவாக்கும்போது அவருக்கு எத்தனை வயது, அவருடைய மகன்களில் சிலருடைய பெயர் என்ன?
- பிற்பாடு ராஜாவாக தாவீது எங்கே ஆட்சி செய்கிறார்?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று சாமுவேல் 26:1-25-ஐ வாசி.
(அ) 1 சாமுவேல் 26:11-ல் குறிப்பிடப்பட்டுள்ள தாவீதின் வார்த்தைகள்
தேவராஜ்ய ஏற்பாட்டைக் குறித்த என்ன மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன?
(சங். 37:7; ரோ. 13:2)
(ஆ) அன்போடு தயவு காட்ட நாம் ஊக்கமாக முயற்சியெடுக்கையில் அதற்கு யாரேனும் நன்றிகெட்டத்தனமாய் நடந்தால், 1 சாமுவேல் 26:23-ல் உள்ள தாவீதின் வார்த்தைகள் சரியான மனப்பான்மையோடு இருக்க நமக்கு எப்படி உதவும்? (1 இரா. 8:32; சங். 18:20)
- இரண்டு சாமுவேல் 1:26-ஐ வாசி. தாவீது மற்றும் யோனத்தானைப் போல இன்று கிறிஸ்தவர்கள் எப்படி ‘ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பைக்’ காட்டலாம்? (1 பே. 4:8, NW; கொலோ. 3:14; 1 யோ. 4:12)
- இரண்டு சாமுவேல் 5:1-10-ஐ வாசி. (அ) தாவீது எத்தனை வருடங்கள் ராஜாவாக அரசாண்டார், இந்தக் காலப்பகுதி எப்படிப் பிரிக்கப்படுகிறது? (2 சா. 5:4, 5)
(ஆ) தாவீதின் உயர்வுக்குக் காரணம் என்ன, இன்று நமக்கு இது எப்படி ஒரு நினைப்பூட்டுதலாக இருக்கிறது? (1 சா. 16:13; 1 கொ. 1:31; பிலி. 4:13)
No comments:
Post a Comment