சிறைச்சாலைக் கதவைத் திறந்துவிட்டுக்
கொண்டிருக்கிற அந்தத் தேவதூதனைப் பார். அவர் விடுவித்துக் கொண்டிருக்கிற
அந்த ஆட்கள் இயேசுவின் அப்போஸ்தலர்கள். அவர்கள் ஏன் சிறையில்
போடப்பட்டிருந்தார்கள்? நாம் பார்க்கலாம்.
இயேசுவின் சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு கொஞ்ச நாட்கள்தான்
ஆகியிருக்கிறது. அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது: மத்தியான வேளையில்
பேதுருவும் யோவானும் எருசலேம் ஆலயத்துக்குப் போகிறார்கள். அங்கு வாசலருகே
பிறவி நொண்டி ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆட்கள் தினந்தோறும் அவனைத்
தூக்கி வருவார்கள். ஆலயத்துக்குப் போவோர் வருவோரிடமிருந்து அவன் பிச்சை
கேட்பான். இன்று பேதுருவும் யோவானும் ஆலயத்திற்கு வருவதைப் பார்க்கிறான்,
அப்போது அவர்களிடம் பிச்சை கேட்கிறான். இந்த அப்போஸ்தலர்கள் அவனுக்கு என்ன
கொடுக்கப் போகிறார்கள்?
ஒரு தேவதூதர் அப்போஸ்தலர்களை விடுவிக்கிறார்
அவர்கள் அங்கே நின்று அந்தப்
பிச்சைக்காரனைப் பார்க்கிறார்கள். அப்போது பேதுரு அவனிடம்: ‘இப்போது
என்னிடம் பணங்காசு இல்லை, ஆனால் இருப்பதை உனக்குக் கொடுக்கிறேன். இயேசுவின்
பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!’ என்று சொல்லி அவனுடைய வலது கையைப்
பிடித்துத் தூக்கி விடுகிறார். உடனே அவன் குதித்தெழுந்து, அங்குமிங்கும்
நடக்கத் தொடங்குகிறான். ஜனங்களால் நம்பவே முடியவில்லை, இந்த அற்புதத்தைக்
கண்டு அவர்கள் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார்கள்.
அப்போது பேதுரு:
‘இயேசுவை உயிர்த்தெழுப்பிய கடவுளுடைய அதே சக்தியால்தான் நாங்கள் இந்த
அற்புதத்தைச் செய்தோம்’ என்று சொல்கிறார். அவரும் யோவானும் இப்படிப் பேசிக்
கொண்டிருக்கும்போது சில மதத் தலைவர்கள் அங்கு வருகிறார்கள். இயேசு
உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றி பேதுருவும் யோவானும் ஜனங்களிடம் சொல்லிக்
கொண்டிருப்பதைக் கேட்டு அவர்களுக்குப் பயங்கர கோபம் வருகிறது. அதனால்
அவர்களைப் பிடித்து சிறையில் போட்டு விடுகிறார்கள்.
அடுத்த நாள்
அந்த மதத் தலைவர்கள் ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். அங்கு
பேதுருவும் யோவானும் கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் சுகப்படுத்திய
அந்தப் பிச்சைக்காரனும் அங்கு இருக்கிறான். அப்போது அந்த மதத் தலைவர்கள்:
‘எந்தச் சக்தியால் நீங்கள் இந்த அற்புதத்தைச் செய்தீர்கள்?’ என்று
கேட்கிறார்கள்.
‘இயேசுவை உயிர்த்தெழுப்பிய கடவுளின் சக்தியால்தான்
சுகப்படுத்தினோம்’ என்று பேதுரு பதிலளிக்கிறார். அந்த மதத் தலைவர்களுக்கு
இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை, ஏனென்றால் இந்த அற்புதம் உண்மையில்
நடந்தது என்பதை அவர்களால் மறுக்கவே முடியாது. அதனால் அவர்கள் என்ன
செய்கிறார்கள் தெரியுமா? இயேசுவைப் பற்றி இனி பேசவே கூடாதென்று
அப்போஸ்தலர்களை எச்சரித்து அவர்களை விட்டுவிடுகிறார்கள்.
அதற்குப்
பின் வந்த நாட்களிலெல்லாம் இயேசுவைப் பற்றி அப்போஸ்தலர்கள் தொடர்ந்து
பிரசங்கித்து வருகிறார்கள், அதோடு நோயுற்றவர்களைச் சுகப்படுத்தியும்
வருகிறார்கள். இவர்கள் செய்த அற்புதங்களைப் பற்றிய செய்தி எல்லா
இடங்களுக்கும் பரவுகிறது. அதனால், எருசலேமை சுற்றியுள்ள
பட்டணங்களிலிருந்துகூட நோயுற்றவர்களை ஜனங்கள் அவர்களிடம் கொண்டு
வருகிறார்கள். இதைப் பார்த்த அந்த மதத் தலைவர்களுக்கு அப்போஸ்தலர்கள் மீது
பொறாமை பொறாமையாக வருகிறது, அதனால் அவர்களைப் பிடித்து சிறையிலே போட்டு
விடுகிறார்கள். ஆனால் ரொம்ப நாட்களுக்கு அவர்கள் அங்கேயே இருப்பதில்லை.
நீ இங்கே பார்க்கிறபடி, ஒருநாள் இராத்திரி தேவதூதன் சிறைச்சாலைக் கதவைத்
திறந்து விட்டு, ‘நீங்கள் ஆலயத்துக்குப் போய், ஜனங்களிடம் தொடர்ந்து
பிரசங்கம் பண்ணுங்கள்’ என்று சொல்கிறார். மறுநாள் காலை, அந்த மதத்
தலைவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டு வரும்படி ஆட்களைச் சிறைச்சாலைக்கு
அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அவர்கள் ஆலயத்தில்
பிரசங்கித்துக் கொண்டிருப்பது பிற்பாடு அவர்களுக்குத் தெரிய வருகிறது; உடனே
அங்குப் போய் அவர்களை நியாயசங்கத்திற்கு இழுத்து வருகிறார்கள்.
அங்கிருந்த மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்து: ‘இயேசுவைப் பற்றி
இனி பிரசங்கிக்கவே கூடாதென்று நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தோம்,
ஆனால் நீங்கள் எருசலேம் முழுக்க உங்கள் போதகத்தைப் பரப்பியிருக்கிறீர்கள்’
என்று குற்றம்சாட்டுகிறார்கள். அதற்கு அப்போஸ்தலர்கள்: ‘மனிதருக்குக்
கீழ்ப்படிவதைவிட, நாங்கள் கடவுளுக்கே கீழ்ப்படிவோம்’ என்று
பதிலளிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து வெளியேறி “நற்செய்தியை” தொடர்ந்து
பிரசங்கித்து வருகிறார்கள். நாம் பின்பற்ற வேண்டிய சிறந்த ஒரு முன்மாதிரி
அல்லவா?
அப்போஸ்தலர் 3-5 அதிகாரங்கள்.
கேள்விகள்
ஒரு மத்தியான வேளையில் பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குப் போகும்போது என்ன நடக்கிறது?
நொண்டியாயிருந்த ஒருவனிடம் பேதுரு என்ன சொல்கிறார், பணத்தைவிட மதிப்புள்ள எதை அவனுக்கு பேதுரு கொடுக்கிறார்?
மதத் தலைவர்கள் ஏன் கோபமடைகிறார்கள், பேதுருவையும் யோவானையும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
மதத் தலைவர்களிடம் பேதுரு என்ன சொல்கிறார், அப்போஸ்தலர்களுக்கு என்ன எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது?
மதத் தலைவர்கள் ஏன் பொறாமைப்படுகிறார்கள், அப்போஸ்தலர்களை இரண்டாவது முறை சிறையில் போடும்போது என்ன நடக்கிறது?
அப்போஸ்தலர்களை நியாயசங்கத்துக்கு இழுத்துக் கொண்டுவரும்போது அவர்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
அப்போஸ்தலர் 3:1-10-ஐ வாசி.
அற்புதங்களைச் செய்வதற்கான வல்லமை நமக்குக் கொடுக்கப்படாவிட்டாலும், ராஜ்ய
செய்தியின் மதிப்பைப் புரிந்துகொள்ள அப்போஸ்தலர் 3:6-ல் உள்ள பேதுருவின்
வார்த்தைகள் நமக்கு எப்படி உதவுகின்றன?
அப்போஸ்தலர் 4:1-31-ஐ வாசி.
ஊழியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கையில், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ
சகோதரர்களை நாம் எவ்விதத்தில் பின்பற்ற வேண்டும்? (அப். 4:29, 31; எபே.
6:18-20; 1 தெ. 2:2)
அப்போஸ்தலர் 5:17-42-ஐ வாசி. கடந்த
காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, யெகோவாவின் சாட்சிகளல்லாத சிலர்
பிரசங்க வேலை சம்பந்தமாக எப்படி நியாயத்தன்மை காண்பித்திருக்கிறார்கள்?
(அப். 5:34-39)
No comments:
Post a Comment