Monday, 9 December 2013

கடவுளுடைய ஜனங்கள் பாபிலோனை விட்டு வெளியேறுகின்றனர்

கடவுளுடைய ஜனங்கள் பாபிலோனை விட்டு வெளியேறுகின்றனர்

மேதியரும் பெர்சியரும் பாபிலோனைக் கைப்பற்றி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது என்ன நடக்கிறது பார்! ஆம், இஸ்ரவேலர் பாபிலோனை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு எப்படி விடுதலை கிடைத்தது? அவர்களைப் போகவிட்டது யார்?
பெர்சிய ராஜா கோரேசுதான் அவர்களைப் போகவிட்டார். கோரேசு பிறப்பதற்கு அநேக காலத்திற்கு முன்பே அவரைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசியிடம் யெகோவா இவ்வாறு எழுதச் சொன்னார்: ‘நீ என்ன செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேனோ அதையே நீ செய்வாய். அந்த நகரத்தைக் கைப்பற்ற வாசல்கள் உனக்குத் திறந்து விடப்பட்டிருக்கும்.’ கோரேசின் தலைமையில் பாபிலோன் கைப்பற்றப்பட்டது. திறந்து கிடந்த நகரத்தின் வாசல்கள் வழியாக இரவில் மேதியரும் பெர்சியரும் பாபிலோனுக்குள் நுழைந்தார்கள்.
எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்பக் கட்டுவதற்கு கோரேசு கட்டளை கொடுப்பார் என்றும் முன்கூட்டியே யெகோவாவின் தீர்க்கதரிசியான ஏசாயா சொன்னார். கோரேசு இந்தக் கட்டளையைக் கொடுத்தாரா? ஆம், கொடுத்தார். ‘இப்போது நீங்கள் எருசலேமுக்குப் புறப்பட்டுப் போய், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுங்கள்’ என்று இஸ்ரவேலருக்குச் சொன்னார். இதோ, இந்த இஸ்ரவேலர் அதைத்தான் செய்யப் போகிறார்கள். 
இஸ்ரவேலர்கள் பாபிலோனைவிட்டு வெளியேறுகிறார்கள்

ஆனால் பாபிலோனில் இருக்கிற எல்லா இஸ்ரவேலராலும் எருசலேமுக்குத் திரும்பிப் போக முடியவில்லை, ஏனென்றால் அது ரொம்ப தூரத்தில் இருந்தது. ஏறக்குறைய 500 மைல் (800 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்தது. சிலருக்கு ரொம்ப வயதாகி விட்டது, இன்னும் சிலருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது, அதனால் அவ்வளவு தூரம் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. இன்னும் சிலர் வேறு காரணங்களுக்காக திரும்பப் போகவில்லை. இப்படி அங்கிருந்து போக முடியாதவர்களுக்கு கோரேசு இவ்வாறு சொல்கிறார்: ‘எருசலேமையும் அதன் ஆலயத்தையும் கட்டுவதற்குத் திரும்பிப் போகிற ஆட்களுக்கு வெள்ளியையும் பொன்னையும் மற்ற வெகுமதிகளையும் கொடுங்கள்.’
அதனால், எருசலேமுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிற இந்த இஸ்ரவேலருக்குப் பல வெகுமதிகள் கொடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நேபுகாத்நேச்சார் எருசலேமை அழித்தபோது யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த கிண்ணங்களையும் பாத்திரங்களையுங்கூட கோரேசு அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறார். இதனால் எடுத்துச் செல்ல இந்த ஜனங்களுக்கு ஏராளமான பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன.
ஏறக்குறைய நான்கு மாதங்கள் பயணம் செய்த பின், இஸ்ரவேலர் மிகச் சரியான சமயத்தில் எருசலேமுக்குப் போய்ச் சேருகிறார்கள். ஆம், அந்த நகரம் அழிக்கப்பட்டு, ஜனங்கள் இல்லாமல் வெறிச்சோடிப் போய் சரியாக 70 ஆண்டுகள் ஆகியிருந்தன. இஸ்ரவேலர் இப்போது தங்கள் சொந்த நாட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டார்கள்; என்றாலும் அவர்களுக்குக் கஷ்டமான சில காலங்கள் வரவிருக்கின்றன. அதைத்தான் அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.
ஏசாயா 44:28; 45:1-4; எஸ்றா 1:1-11.


கேள்விகள்

  • படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, இஸ்ரவேலர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
  • ஏசாயாவின் மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தை கோரேசு எப்படி நிறைவேற்றினார்?
  • எருசலேமுக்குத் திரும்பப் போக முடியாத இஸ்ரவேலரிடம் கோரேசு என்ன சொல்கிறார்?
  • எருசலேமுக்குத் திரும்ப எடுத்துச் செல்வதற்காக வேறு எதையும்கூட ஜனங்களிடம் கோரேசு கொடுக்கிறார்?
  • எருசலேமுக்குப் போய்ச் சேர எவ்வளவு காலம் எடுக்கிறது?
  • எருசலேம் ஜனங்களில்லாமல் இப்போது எத்தனை ஆண்டுகள் வெறிச்சோடிக் கிடக்கிறது?

கூடுதல் கேள்விகள்

  • ஏசாயா 44:28; 45:1-4-ஐ வாசி. (அ) கோரேசுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை யெகோவா எப்படி வலியுறுத்தினார்? (ஏசா. 55:10, 11; ரோ. 4:17)
    (ஆ) எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறமை யெகோவா தேவனுக்கு இருப்பதை கோரேசு பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எப்படிக் காட்டுகிறது? (ஏசா. 42:9; 45:21; 46:10, 11; 2 பே. 1:20)
  • எஸ்றா 1:1-11-ஐ வாசி. எருசலேமுக்குத் திரும்பிப் போக முடியாதவர்கள் செய்ததைப் போல, இன்று முழுநேர சேவையில் ஈடுபட முடிந்தவர்களுடைய ‘கைகளை’ நாம் எப்படித் ‘திடப்படுத்தலாம்’? (எஸ்றா 1:4, 6; ரோ. 12:13; கொலோ. 4:12)

No comments:

Post a Comment