Monday, 9 December 2013

இயேசு ராஜாவாக வருகிறார்

இயேசு ராஜாவாக வருகிறார்

குருடரான அந்த இரண்டு பிச்சைக்காரர்களைச் சுகப்படுத்தி கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம்: ‘நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று சொல்கிறார்.
அந்தக் கழுதைக்குட்டி கொண்டு வரப்பட்டபோது, இயேசு அதன் மேல் உட்காருகிறார். பிறகு, கொஞ்ச தூரத்தில் இருக்கிற எருசலேமுக்குச் சவாரி செய்கிறார். அந்த நகரத்துக்கு அருகில் வந்தபோது ஒரு பெரிய கூட்டமே அவரைப் பார்க்க வந்துவிடுகிறது. அப்போது ஜனங்கள் தங்களுடைய மேலங்கிகளை எடுத்து அவர் வருகிற வழியில் விரிக்கிறார்கள். மற்றவர்கள் ஓலைகளை வெட்டி அங்கே போடுகிறார்கள், அப்படிப் போட்டுவிட்டு: ‘யெகோவாவின் பெயரில் வருகிற இந்த ராஜாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக!’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 
மக்கள் இயேசுவை வரவேற்கிறார்கள்

அந்தக் காலத்தில், இஸ்ரவேலின் புதிய ராஜாக்கள் தங்களை ஜனங்களிடம் காண்பிப்பதற்காக கழுதைக்குட்டியின் மேல் எருசலேமுக்குள் சவாரி செய்வார்கள். இதைத்தான் இயேசு செய்து கொண்டிருக்கிறார். இயேசு தங்களுடைய ராஜாவாயிருக்க விரும்புவதை இந்த ஜனங்கள் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அவரை விரும்பவில்லை. நமக்கு எப்படித் தெரியும்? ஆலயத்தில் நடந்த சம்பவத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஆலயத்தில் குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துகிறார். இதைப் பார்த்த சிறு பிள்ளைகள் இயேசுவைப் புகழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் அந்த ஆசாரியர்களுக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது, அவர்கள் இயேசுவிடம்: ‘இந்தப் பிள்ளைகள் சொல்வதெல்லாம் உம் காதில் விழுகிறதா?’ என்று கேட்கிறார்கள்.
‘ஆம், என் காதில் விழுகிறது, “சிறு பிள்ளைகளுடைய வாயிலிருந்து கடவுள் துதி உண்டாகச் செய்வார்” என்று பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் ஒருநாளும் வாசிக்கவில்லையா?’ என்று இயேசு பதிலுக்கு கேட்கிறார். அதனால் அந்தப் பிள்ளைகள் விடாமல் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவைத் துதிக்கிறார்கள்.
இந்தப் பிள்ளைகளைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் இல்லையா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி சில ஆட்கள் நம்மைத் தடுக்கலாம். ஆனாலும், இயேசு செய்யப் போகிற அதிசயமான காரியங்களைப் பற்றி நாம் தொடர்ந்து ஜனங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
இயேசு பூமியில் இருந்தபோதே ராஜாவாக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டாரா? இல்லை. அப்படியானால், அவர் ஆட்சி செய்யப் போகிற அந்தக் காலம் எப்போது வரும்? இயேசுவின் சீஷர்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அடுத்து இதைப் பற்றி நாம் வாசிக்கலாம்.
மத்தேயு 21:1-17; யோவான் 12:12-16.


கேள்விகள்

  • எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகையில் சீஷர்களை என்ன செய்யச் சொல்கிறார்?
  • இந்தப் படத்தில் பார்க்கிறபடி, நகரத்துக்கு அருகில் இயேசு வருகிறபோது என்ன நடக்கிறது?
  • குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துவதைப் பார்க்கிற சிறு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?
  • எரிச்சலடைந்த ஆசாரியர்களிடம் இயேசு என்ன சொல்கிறார்?
  • இயேசுவைத் துதித்த சிறு பிள்ளைகளைப் போல நாம் எப்படி இருக்க முடியும்?
  • சீஷர்கள் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • மத்தேயு 21:1-17-ஐ வாசி. (அ) ரோம ஆட்சிக் காலத்தில் படைத் தலைவர்கள் வெற்றி பவனி வந்ததைப் போல் அல்லாமல் ஒரு ராஜாவாக இயேசு எப்படி எருசலேமுக்கு வந்தார்? (மத். 21:4, 5; சக. 9:9; பிலி. 2:5-8; கொலோ. 2:15)
    (ஆ) ஆலயத்திற்குள் நுழைந்த இயேசுவைப் பார்த்து 118-ம் சங்கீதத்தின் வார்த்தைகளைச் சொன்ன சின்ன பையன்களிடமிருந்து இளைஞர்கள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (மத். 21:9, 15; சங். 118:25, 26; 2 தீ. 3:15; 2 பே. 3:18)
  • யோவான் 12:12-16-ஐ வாசி. இயேசுவைப் பற்றி ஆர்ப்பரித்த ஜனங்கள் குருத்தோலைகளைப் பிடித்திருந்தது எதை அடையாளப்படுத்துகிறது? (யோவா. 12:13; பிலி. 2:10; வெளி. 7:9, 10)

No comments:

Post a Comment