Monday, 9 December 2013

மொர்தெகாயும் எஸ்தரும்

மொர்தெகாயும் எஸ்தரும்

எஸ்றா எருசலேமுக்குப் போவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்ததென்று நாம் பார்க்கலாம். பெர்சிய ராஜ்யத்தில் வாழ்ந்துவரும் இஸ்ரவேலரில் மொர்தெகாயும் எஸ்தரும் மிக முக்கியமானவர்கள். எஸ்தர் அந்நாட்டு ராணியாக இருக்கிறாள், அவளுடைய பெரியப்பா மகன் மொர்தெகாய், ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய ஸ்தானம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? எஸ்தர் சிறுமியாக இருக்கும்போதே அவளுடைய அப்பா அம்மா இறந்து விட்டார்கள், அதனால் மொர்தெகாய்தான் அவளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். பெர்சிய ராஜா அகாஸ்வேருக்கு சூசான் நகரத்தில் ஓர் அரண்மனை இருக்கிறது. அவனுடைய ஊழியக்காரர்களில் மொர்தெகாயும் ஒருவர். ராஜாவின் மனைவி வஸ்தி, ஒருநாள் தன் கணவனுக்குக் கீழ்ப்படியாமல் போகிறாள். எனவே, ராஜா ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடுத்து அவளை ராணியாக ஆக்குகிறார். அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பெண் யார் தெரியுமா? அவள்தான் அழகிய இளம் எஸ்தர். 
ஆமான் மொர்தெகாயைப் பார்த்து கோபப்படுகிறான்


மக்கள் குனிந்து வணங்கிக் கொண்டிருக்கிற பெருமைபிடித்த இந்த ஆளைப் பார். இவன் பெயர் ஆமான். பெர்சியாவில் இவன் மிக முக்கியமான ஓர் ஆள். அதோ, அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற மொர்தெகாயும்கூட தன்னைக் குனிந்து வணங்க வேண்டுமென்று ஆமான் விரும்புகிறான். ஆனால் மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை. இந்தக் கெட்ட மனிதனைக் குனிந்து வணங்குவது சரியல்ல என்று அவர் நினைக்கிறார். இதனால் ஆமானுக்கு பயங்கர கோபம் வருகிறது. கோபத்தில் அவன் என்ன செய்கிறான் தெரியுமா?
இஸ்ரவேலரைப் பற்றி நிறைய பொய்களை ராஜாவிடம் சொல்கிறான். ‘அவர்கள் உம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாத கெட்ட ஜனங்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என்று சொல்கிறான். தன் மனைவி எஸ்தர் இஸ்ரவேல் நாட்டுப் பெண் என்பது அகாஸ்வேருக்குத் தெரியாது. அதனால் ஆமானுடைய பேச்சைக் கேட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா இஸ்ரவேலரும் கொல்லப்பட வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்.
இந்தச் சட்டத்தைப் பற்றி மொர்தெகாய் கேள்விப்படுகிறபோது மிகவும் வேதனைப்படுகிறார். உடனே எஸ்தருக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார், அதாவது: ‘நீ ராஜாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி நம்மைக் காப்பாற்றுமாறு கெஞ்சிக் கேட்க வேண்டும்’ என்ற செய்தியை அனுப்புகிறார். அழைக்கப்பட்டால் தவிர யாருமே ராஜாவைப் போய்ப் பார்க்க முடியாது, அது பெர்சிய சட்டத்துக்கு விரோதமானது. என்றாலும், ராஜா அழைக்காமலேயே எஸ்தர் அவரைப் பார்க்க உள்ளே செல்கிறாள். ராஜா தன் பொன் கோலை அவளிடம் நீட்டுகிறார். அப்படி நீட்டுவது அவள் கொல்லப்பட மாட்டாள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. அப்போது ராஜாவையும் ஆமானையும் ஒரு பெரிய விருந்துக்கு அவள் அழைக்கிறாள். அந்த விருந்தின்போது ‘உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’ என்று ராஜா எஸ்தரிடம் சொல்கிறார். அதற்கு எஸ்தர், ‘நீரும் ஆமானும் நாளை மறுபடியும் விருந்துக்கு வந்தால்தான் என்ன வேண்டுமென்று சொல்வேன்’ என்கிறாள்.
மறுநாள் விருந்தின்போது ராஜாவிடம்: ‘நானும் என் ஜனங்களும் கொல்லப்படப் போகிறோம்’ என்று அவள் சொல்கிறாள். அதைக் கேட்டதுமே ராஜாவுக்குக் கோபம் வந்துவிடுகிறது. ‘இப்படிப்பட்ட ஒரு காரியம் செய்ய துணிகிறவன் யார்?’ என்று கேட்கிறான்.
‘இதோ, இந்தக் கெட்ட ஆமானே! இவன்தான் அந்தத் துஷ்டன்’ என்று எஸ்தர் சொல்கிறாள். 
எஸ்தர் ராணி ஆமான் மேல் குற்றம்சாட்டுகிறார்

அதைக் கேட்டதும் ராஜாவுக்கு இன்னும் பயங்கர கோபம் வருகிறது. ஆமான் கொல்லப்பட வேண்டுமென்று கட்டளையிடுகிறார். அதன் பிறகு, தனக்கு அடுத்த ஸ்தானத்தில் மொர்தெகாயை வைக்கிறார். அப்போது மொர்தெகாய், இஸ்ரவேலர் கொல்லப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த அந்த நாளில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்படும்படி பார்த்துக்கொள்கிறார், அந்தச் சட்டத்தை வைத்து இஸ்ரவேலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். மொர்தெகாய் இப்போது மிக முக்கிய ஆளாக இருப்பதால், நிறைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு உதவி செய்கிறார்கள், இதனால் எதிரிகளிடமிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.
பைபிள் புத்தகமாகிய எஸ்தர்.


கேள்விகள்

  • மொர்தெகாயும் எஸ்தரும் யார்?
  • ஆகாஸ்வேரு ராஜா ஏன் ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடுக்கிறார், யாரைத் தேர்ந்தெடுக்கிறார்?
  • ஆமான் யார், எதனால் அவனுக்குப் பயங்கர கோபம் வருகிறது?
  • என்ன சட்டம் கொண்டு வரப்படுகிறது, மொர்தெகாயிடமிருந்து செய்தி கிடைத்த பிறகு எஸ்தர் என்ன செய்கிறாள்?
  • ஆமானுக்கு என்ன நடக்கிறது, ஆனால் மொர்தெகாய் எப்படிப்பட்ட ஆளாக ஆகிறார்?
  • விரோதிகளிடமிருந்து இஸ்ரவேலர் எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள்?

கூடுதல் கேள்விகள்

  • எஸ்தர் 2:12-18-ஐ வாசி. ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை’ வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதை எஸ்தர் எப்படிக் காட்டினாள்? (எஸ்தர் 2:15; 1 பே. 3:1-5)
  • எஸ்தர் 4:1-17-ஐ வாசி. மெய் வணக்கத்தின் சார்பாக செயல்படுவதற்கு எஸ்தருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது போல, நம்முடைய பக்தியையும் யெகோவாவுக்குப் பற்றுறுதியையும் காட்டுவதற்கு இன்று நமக்கு என்ன சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது? (எஸ்தர் 4:13, 14; மத். 5:14-16; 24:14)
  • எஸ்தர் 7:1-6-ஐ வாசி. துன்புறுத்தல் வருமென தெரிந்தே இன்று கடவுளுடைய மக்கள் அநேகர் எவ்வாறு எஸ்தரைப் போல செயல்பட்டிருக்கிறார்கள்? (எஸ்தர் 7:4; மத். 10:16-22; 1 பே. 2:12)

No comments:

Post a Comment