இயேசு உயிரோடிருக்கிறார்
இந்தப் பெண்ணும் இந்த இரண்டு ஆண்களும் யார்
என்று உனக்குத் தெரிகிறதா? இந்தப் பெண் மகதலேனா மரியாள், இயேசுவுக்குத்
தெரிந்த பெண். வெள்ளை உடையில் இருக்கிற இந்த ஆண்கள் தேவதூதர்கள். மரியாள்
பார்த்துக் கொண்டிருக்கிற அந்தச் சிறிய அறை இயேசுவின் உடல் வைக்கப்பட்ட
இடம். அதற்கு கல்லறை என்று பெயர். ஆனால் இயேசுவின் உடல் இப்போது அங்கு
இல்லை! யார் அதை எடுத்தது? நாம் பார்க்கலாம்.
![]() |
தேவதூதர்கள் மகதலேனா மரியாளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் |
இயேசு மரித்த பின்னர் ஆசாரியர்கள் பிலாத்துவிடம்: ‘மரித்து மூன்று
நாட்களுக்குப் பிறகு இவன் உயிரோடு வரப்போவதாக சொல்லியிருந்தான். அதனால்
அந்தக் கல்லறைக்குக் காவல் வையும். அப்போதுதான் அவனுடைய சீஷர்கள் வந்து
உடலைத் திருடிக்கொண்டு போய் அவன் உயிர்த்தெழுப்பப்பட்டு விட்டதாக சொல்ல
முடியாது’ என்கிறார்கள். எனவே, பிலாத்து அந்தக் கல்லறையைக் காவல் காக்க
காவலர்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆசாரியர்களிடம் சொல்கிறான்.
ஆனால், இயேசு மரித்த மூன்றாம் நாளன்று, அதிகாலையிலேயே யெகோவாவின் தூதன்
திடீரென்று தோன்றுகிறார். கல்லறையிலிருந்த அந்தக் கல்லைப் புரட்டிப்
போடுகிறார். பயத்தில் அந்தக் காவலர்களால் அசையக்கூட முடியவில்லை. கடைசியாக,
கல்லறைக்குள் பார்க்கும்போது இயேசுவின் உடல் அங்கு இல்லை! காவலர்களில்
சிலர் நகரத்திற்குப் போய் நடந்ததையெல்லாம் ஆசாரியர்களிடம் சொல்கிறார்கள்.
அந்தக் கெட்ட ஆசாரியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்கள் அந்தக்
காவலர்களுக்குப் பணம் கொடுத்து, ‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது
இயேசுவின் சீஷர்கள் இரவில் வந்து உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்’
என்று பொய் சொல்லச் சொல்கிறார்கள்.
இதற்கிடையில், இயேசுவுக்குத்
தெரிந்த பெண்களில் சிலர் கல்லறையைப் பார்க்க வருகிறார்கள். அது காலியாக
இருப்பது அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆச்சரியம்! திடீரென்று பிரகாசமான
உடையில் இரண்டு தூதர்கள் தோன்றி, ‘இயேசுவை நீங்கள் ஏன் இங்கு வந்து
தேடுகிறீர்கள்? அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு விட்டார். சீக்கிரமாய்ப் போய்
அவருடைய சீஷருக்கு இதைச் சொல்லுங்கள்’ என்கிறார்கள். அந்தப் பெண்கள் ஒரே
ஓட்டமாக ஓடுகிறார்கள்! ஆனால் வழியில் ஒருவர் அவர்களை நிறுத்துகிறார். அவர்
யார் தெரியுமா? இயேசுவே! ‘போய் என் சீஷருக்குச் சொல்லுங்கள்’ என்று அவர்
கூறுகிறார்.
இயேசு உயிரோடிருக்கிறார் என்றும் தாங்கள் அவரைக்
கண்டதாகவும் இந்தப் பெண்கள் சீஷருக்குச் சொல்கிறபோது சீஷர்களால் அதை நம்பவே
முடியவில்லை. பேதுருவும் யோவானும் நேரில் போய்ப் பார்ப்பதற்காக கல்லறைக்கு
ஓடுகிறார்கள், ஆனால் கல்லறை காலியாக இருக்கிறது! பேதுருவும் யோவானும்
அங்கிருந்து போன பின், மகதலேனா மரியாள் அங்கேயே இருந்து உள்ளே எட்டிப்
பார்க்கிறாள். அப்போதுதான் அந்த இரண்டு தூதர்களைப் பார்க்கிறாள்.
இயேசுவின் உடலுக்கு என்ன ஆனது தெரியுமா? கடவுள் அதை மறைந்து போகும்படி
செய்துவிட்டார். இயேசுவை அதே மாம்ச உடலில் கடவுள் உயிர்த்தெழுப்பவில்லை.
பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு புதிய ஆவி உடலை
அவருக்குக் கொடுத்தார். ஆனால், இயேசு தாம் உயிரோடு இருப்பதை தம்முடைய
சீஷர்களுக்குக் காட்டுவதற்காக பார்க்க முடிகிற உடலை ஏற்றுக்கொள்கிறார்,
இதைப் பற்றி நாம் பிறகு படிக்கப் போகிறோம்.
மத்தேயு 27:62-66; 28:1-15; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12.
கேள்விகள்
- இந்தப் படத்திலுள்ள பெண்ணும் இரண்டு ஆண்களும் யார், அவர்கள் நிற்கும் இடம் எது?
- இயேசுவின் கல்லறையைக் காவல் காக்க காவலர்களை அனுப்பி வைக்குமாறு அந்த ஆசாரியர்களிடம் பிலாத்து ஏன் சொல்கிறான்?
- இயேசு மரித்த மூன்றாம் நாளன்று, அதிகாலையில் ஒரு தேவதூதன் என்ன செய்கிறார், ஆனால், ஆசாரியர்கள் என்ன செய்கிறார்கள்?
- இயேசுவின் கல்லறையைப் பார்க்க வந்த சில பெண்கள் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள்?
- பேதுருவும் யோவானும் ஏன் இயேசுவின் கல்லறைக்கு ஓடுகிறார்கள், அங்கே அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்?
- இயேசுவின் உடலுக்கு என்ன ஆனது, தாம் உயிரோடு இருப்பதைச் சீஷர்களுக்குக் காட்டுவதற்காக அவர் என்ன செய்கிறார்?
கூடுதல் கேள்விகள்
- மத்தேயு 27:62-66; 28:1-15-ஐ வாசி.
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட சமயத்தின்போது ஆசாரியர்களும் பரிசேயர்களும்
மூப்பர்களும் எப்படிப் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தார்கள்? (மத்.
12:24, 31, 32; 28:11-15)
- லூக்கா 24:1-12-ஐ வாசி.
பெண்களை நம்பகமான சாட்சிகளாக யெகோவா கருதுகிறார் என்பதை இயேசுவின்
உயிர்த்தெழுதல் பதிவு எப்படிக் காட்டுகிறது? (லூக். 24:4, 9, 10; மத்.
28:1-7)
- யோவான் 20:1-12-ஐ வாசி. ஒரு பைபிள்
தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால்
பொறுமையாக இருப்பது அவசியம் என்பதை யோவான் 20:8, 9 வசனங்கள் எப்படிக்
காட்டுகின்றன? (நீதி. 4:18; மத். 17:22, 23; லூக். 24:5-8; யோவா. 16:12)
No comments:
Post a Comment