இந்தப் பையனைப் பார். எவ்வளவு கவலையாக
இருக்கிறான், நம்பிக்கையே இல்லாதவனாக தெரிகிறான். இவன்தான் யோசேப்பு.
இவனுடைய அண்ணன்மார் எகிப்துக்குப் போகிற இந்த ஆட்களிடம் இவனை இப்போதுதான்
விற்றிருக்கிறார்கள். யோசேப்பு இனி ஓர் அடிமையாக அங்கு இருப்பான். இவனுடைய
அண்ணன்மார் இந்தக் கெட்ட காரியத்தை ஏன் செய்தார்கள்? யோசேப்பின் மீதிருந்த
பொறாமையால்தான் அப்படிச் செய்தார்கள்.
அவர்களுடைய அப்பா யாக்கோபுக்கு யோசேப்பு என்றால் உயிர். அவனுக்கு
அழகான, நீளமான ஒரு அங்கியைச் செய்து கொடுத்து, அவன் மீது தனி பாசத்தைக்
காட்டி வந்தார். யோசேப்பிடம் மட்டும் அப்பாவுக்கு இந்தளவு பாசம் இருப்பதைக்
கண்ட அந்த 10 அண்ணன்மாரும் அவன் மீது பொறாமைப்பட்டு அவனை வெறுக்க
ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்கள் அவனை வெறுத்ததற்கு இன்னொரு காரணமும்
இருந்தது.
யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். இந்த இரண்டு
கனவுகளிலும் அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாக தலைகுனிந்து வணங்குவது
போல் கண்டான். இந்தக் கனவுகளை யோசேப்பு தன்னுடைய அண்ணன்மாரிடம் சொன்னபோது
அவர்கள் இன்னுமதிகமாக அவனை வெறுக்கத் தொடங்கினார்கள்.
ஒருநாள்
யோசேப்பின் அண்ணன்மார் தங்கள் அப்பாவுடைய ஆடுகளை மேய்த்துக்
கொண்டிருக்கிறபோது, அவர்கள் நல்லபடியாக இருக்கிறார்களா என்று பார்த்து
வரும்படி யோசேப்பிடம் யாக்கோபு சொல்கிறார். யோசேப்பு வருவதைப் பார்த்த
அவனுடைய அண்ணன்மாரில் சிலர்: ‘நாம் அவனை இங்கே கொன்று போட்டு விடலாம்!’
என்று சொல்கிறார்கள். ஆனால் மூத்தவனான ரூபன்: ‘வேண்டாம், நீங்கள் அப்படிச்
செய்யக் கூடாது!’ என்று சொல்கிறான். எனவே, கொல்வதற்குப் பதிலாக அவனைப்
பிடித்து ஒரு வறண்ட குழிக்குள் போட்டு விடுகிறார்கள். இனி அவனை என்ன
செய்வதென்று யோசிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்தச் சமயத்தில் சில
இஸ்மவேலர் வருகிறார்கள். யூதா தன்னுடைய மற்ற சகோதரர்களிடம்: ‘இந்த
இஸ்மவேலருக்கு நாம் அவனை விற்றுப்போடலாம்’ என்று சொல்கிறான். சொன்னபடியே
விற்றுவிடுகிறார்கள். 20 வெள்ளிக் காசுகளுக்கு அவனை விற்றுவிடுகிறார்கள்.
எவ்வளவு அற்பமான, அன்பற்ற செயல் அது!
இனி யோசேப்பைப் பற்றி
அப்பாவிடம் என்ன சொல்லப் போகிறார்கள்? ஒரு வெள்ளாட்டைக் கொல்கிறார்கள்,
அந்த வெள்ளாட்டின் இரத்தத்தில் யோசேப்பின் அழகிய அங்கியை மறுபடியும்
மறுபடியுமாக முக்கி எடுக்கிறார்கள். பின்பு அந்த அங்கியை தங்கள் அப்பாவிடம்
காட்டி: ‘நாங்கள் இதைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பின் அங்கிதானா என்று
கொஞ்சம் பாருங்கள்’ என்று சொல்கிறார்கள்.
அது யோசேப்பின்
அங்கிதான் என்பதை யாக்கோபு அறிந்துகொள்கிறார். ‘ஐயோ, ஒரு காட்டு மிருகம்
யோசேப்பைக் கொன்றுவிட்டதே’ என்று சொல்லி கதறி அழுகிறார். தங்களுடைய அப்பா
இப்படி நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்தது,
அவர்கள் திட்டப்படியே நடந்தது. யாக்கோபு ரொம்பவும் கவலையாக இருக்கிறார்.
பல நாட்களுக்கு அழுதுகொண்டே இருக்கிறார். ஆனால் உண்மையில் யோசேப்பு இறக்கவே
இல்லை. அவன் கொண்டு போகப்பட்ட இடத்தில் என்ன நடக்கிறதென்று நாம்
பார்க்கலாம்.
ஆதியாகமம் 37:1-35.
கேள்விகள்
யோசேப்பின் மீது அவனுடைய அண்ணன்மார் ஏன் பொறாமைப்பட்டார்கள், அதனால் அவர்கள் என்ன செய்தார்கள்?
யோசேப்பின் அண்ணன்மார் அவனை என்ன செய்ய நினைக்கிறார்கள், ஆனால் ரூபன் என்ன சொல்கிறான்?
இஸ்மவேலர் வரும்போது என்ன நடக்கிறது?
யோசேப்பு செத்து போய்விட்டான் என தங்கள் அப்பா நினைத்துக்கொள்வதற்காக அவனுடைய அண்ணன்மார் என்ன செய்கிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
ஆதியாகமம் 37:1-35-ஐ வாசி.
(அ) சபையில் நடக்கும் தவறை அறிவிப்பதில் யோசேப்பின் முன்மாதிரியைக்
கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 37:2; லேவி. 5:1; 1 கொ. 1:11)
(ஆ) யோசேப்புக்கு அவனுடைய அண்ணன்மார் துரோகம் செய்ததற்குக் காரணம் என்ன? (ஆதி. 37:11, 18; நீதி. 27:4; யாக் 3:14-16)
(இ) யாக்கோபு செய்தது போல் துக்கம் கொண்டாடுபவர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்? (ஆதி. 37:35)
No comments:
Post a Comment