Wednesday, 4 December 2013

10 வாதைகள்


  • 10 வாதைள்

    இந்தப் படங்களைப் பார். இவை ஒவ்வொன்றும் எகிப்தில் யெகோவா உண்டாக்கிய ஒவ்வொரு வாதையைக் காட்டுகிறது. நைல் நதியை ஆரோன் தன் கோலால் அடிப்பதை முதல் படத்தில் நீ காணலாம். அவன் அப்படி அடித்தபோது நதியின் தண்ணீர் இரத்தமாக மாறியது. மீன்களெல்லாம் செத்துப்போயின, நதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. 
    எகிப்தியர்கள்மீது வந்த வாதைகள்
    எகிப்தியர்கள்மீது வந்த வாதைகள்


    அடுத்து, நைல் நதியிலிருந்து தவளைகள் வரும்படி யெகோவா செய்தார்; அவை எல்லா இடங்களுக்கும் வந்தன—அடுப்புகளிலும், சமையல் பாத்திரங்களிலும், படுக்கைகளிலும் வந்து ஏறின. இந்தத் தவளைகள் செத்தபோது எகிப்தியர் இவற்றைக் குவியல் குவியல்களாக அள்ளிப் போட்டார்கள், இவற்றால் தேசமே நாறியது.
    பின்பு ஆரோன் தன் கோலால் தரையை அடித்தான், அப்போது தூசியெல்லாம் கொசுக்களைப் போன்ற ஒருவித பூச்சிகளாய் மாறியது. இந்தப் பூச்சிகள் எகிப்து தேசத்தின் மீது உண்டான மூன்றாம் வாதை.
    அதன்பின் வந்த வாதைகள் எகிப்தியருக்கு மாத்திரமே தீங்கு செய்தன, இஸ்ரவேலருக்குத் தீங்கு செய்யவில்லை. நான்காவது வாதை பெரிய ஈக்கள், இவை எல்லா எகிப்தியரின் வீடுகளுக்குள்ளும் படைபடையாக வந்து மொய்த்தன. ஐந்தாவது வாதை மிருகங்களின் மீது வந்தது, இதனால் எகிப்தியரின் நிறைய ஆடுமாடுகளெல்லாம் செத்துப்போயின.
    அடுத்து, மோசேயும் ஆரோனும் கொஞ்சம் சாம்பலை எடுத்து அதைக் காற்றில் தூவினார்கள். இதனால் மனிதர் மீதும் மிருகங்கள் மீதும் பயங்கரமான கொப்புளங்கள் உண்டாயின. இது ஆறாவது வாதை.
    அதன் பின்பு மோசே தன் கையை வானத்துக்கு நேராக நீட்டினார், அப்போது யெகோவா இடி முழக்கமும் கல் மழையும் உண்டாகும்படி செய்தார். இதற்கு முன் எகிப்தில் அப்படியொரு மோசமான கல் மழை ஏற்பட்டதே இல்லை.
    எட்டாவது வாதை பெரும் கூட்டம் கூட்டமான வெட்டுக்கிளிகள். அதற்கு முன் ஒருபோதும் அந்தளவு வெட்டிக்கிளிகள் இருந்ததில்லை, அதற்குப் பின்னும் இருக்கவில்லை. கல் மழை அழிக்காமல் விட்டுவைத்த எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகள் தின்றுத் தீர்த்தன.
    ஒன்பதாவது வாதை காரிருள். மூன்று நாட்களுக்கு தேசம் முழுக்க கும்மிருட்டாக இருந்தது, ஆனால் இஸ்ரவேலர் வசித்த இடத்தில் மட்டும் வெளிச்சம் இருந்தது.
    கடைசியாக, ஓர் இளம் வெள்ளாட்டுக் கடாவின் அல்லது ஓர் இளம் செம்மறியாட்டின் இரத்தத்தைத் தங்கள் வாசல் நிலைக்கால்களில் தெளிக்கும்படி கடவுள் தம்முடைய ஜனங்களிடம் சொன்னார். பின்பு கடவுளுடைய தூதன் எகிப்து தேசத்தில் கடந்து சென்றார். அப்படிக் கடந்து சென்றபோது எந்த வீட்டு நிலைக்காலில் இரத்தம் காணப்பட்டதோ அந்த வீட்டிலிருந்த எவரையும் அவர் கொல்லவில்லை. ஆனால் இரத்தமில்லாதிருந்த எல்லா வீடுகளிலும் இருந்த தலைப் பிள்ளையையும், மிருகங்களில் முதற்பேறானவற்றையும் கொன்றார். இதுவே 10-வது வாதை.
    இந்தக் கடைசி வாதைக்குப் பின், பார்வோன் இஸ்ரவேலரைப் போகும்படி சொன்னான். கடவுளுடைய ஜனங்கள் எல்லோரும் போவதற்குத் தயாராக இருந்தார்கள், அதே இரவில் அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
    யாத்திராகமம் அதிகாரங்கள் 7-12.




    கேள்விகள்

    • எகிப்தில் யெகோவா உண்டாக்கிய முதல் மூன்று வாதைகள் என்னென்ன என்று இந்தப் படங்களைப் பார்த்து சொல்.
    • முதல் மூன்று வாதைகளுக்கும் மற்ற வாதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
    • நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வாதைகள் என்னென்ன?
    • ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது வாதைகளைப் பற்றி விவரமாகச் சொல்.
    • பத்தாவது வாதைக்கு முன் என்ன செய்யும்படி இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னார்?
    • பத்தாவது வாதை என்ன, அதற்குப் பின் என்ன நடந்தது?

    கூடுதல் கேள்விகள்

    • யாத்திராகமம் 7:19-8:23-ஐ வாசி. (அ) யெகோவா உண்டாக்கிய முதல் இரண்டு வாதைகளை எகிப்தியரின் மந்திரவாதிகளும் உண்டாக்கிய போதிலும் மூன்றாவது வாதைக்குப் பிறகு அவர்கள் எதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று? (யாத். 8:18, 19; மத். 12:24-28)
      (ஆ) தமது ஜனங்களை யெகோவாவால் பாதுகாக்க முடியும் என்பதை நான்காவது வாதை எப்படி நிரூபித்தது, இதை அறிந்திருப்பது ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ கடவுளுடைய மக்களை எப்படி உணரச் செய்யும்? (யாத். 8:22, 23; வெளி. 7:13, 14; 2 நா. 16:9)
    • யாத்திராகமம் 8:24; 9:3, 6, 10, 11, 14, 16, 23-25; 10:13-15, 21-23-ஐ வாசி. (அ) இந்தப் பத்து வாதைகள் மூலம் எந்த இரண்டு வர்க்கத்தினர் அம்பலப்படுத்தப்பட்டனர், இன்றுள்ள இந்த வர்க்கத்தினரைப் பற்றிய நம் எண்ணத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? (யாத். 8:10, 18, 19; 9:14)
      (ஆ) சாத்தானை ஏன் இன்றுவரை யெகோவா அனுமதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள யாத்திராகமம் 9:16 நமக்கு எவ்வாறு உதவுகிறது? (ரோ. 9:21, 22)
    • யாத்திராகமம் 12:21-32-ஐ வாசி. பஸ்கா எவ்வாறு அநேகருக்கு இரட்சிப்பை அளித்தது, அந்தப் பஸ்கா யாரைக் குறித்தது? (யாத். 12:21-23; யோவா. 1:29; ரோ. 5:18, 19, 21; 1 கொ. 5:7)

No comments:

Post a Comment