ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்
இயேசு இங்கே பயங்கர கோபத்துடன் இருப்பது போல
தெரிகிறது இல்லையா? அவர் ஏன் கோபமாய் இருக்கிறார்? ஏனென்றால் எருசலேம்
ஆலயத்திலுள்ள இந்த ஆட்கள் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். கடவுளை
வணங்குவதற்கு இங்கே வருபவர்களிடமிருந்து ஏராளமான பணத்தைச் சம்பாதிக்க
முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள இளம் காளைகளையும் செம்மறியாடுகளையும் புறாக்களையும்
பார்க்கிறாயா? இந்த ஆட்கள் இவற்றை ஆலயத்திற்குள்ளேயே விற்றுக்
கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா? கடவுளுக்குப் பலி
செலுத்த இஸ்ரவேலருக்கு மிருகங்களும் பறவைகளும் தேவை என்பதால் அவற்றை
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஓர் இஸ்ரவேலன் தவறு செய்தால்
கடவுளுக்கு அவன் ஒரு பலி செலுத்த வேண்டுமென்று கடவுளுடைய சட்டம் சொன்னது.
இஸ்ரவேலர் பலிகளைச் செலுத்த வேண்டிய மற்ற சமயங்களும் இருந்தன. ஆனால்
அப்படிக் கடவுளுக்குப் பலி செலுத்த பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் எங்கே
போவது?
இஸ்ரவேலர் சிலர், பறவைகளையும் மிருகங்களையும் சொந்தமாக
வைத்திருந்தார்கள். எனவே இவற்றை அவர்களால் செலுத்த முடிந்தது. ஆனால் மற்ற
இஸ்ரவேலருக்கு சொந்தமாக எந்த மிருகமோ பறவையோ இருக்கவில்லை. அதோடு, பலருடைய
வீடு எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்ததால் மிருகங்களை அவர்களால்
சுமந்துகொண்டு வர முடியவில்லை. அதனால் இங்கே வந்த பிறகு தேவையான மிருகங்களை
அல்லது பறவைகளை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் ஆலயத்திலுள்ள இந்த ஆட்கள்
அவற்றை அநியாய விலைக்கு விற்று, ஜனங்களை ஏமாற்றி வருகிறார்கள். அதுவும்,
இங்கே கடவுளுடைய ஆலயத்திற்குள்ளேயே அவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்!
இதுவே இயேசுவுக்குக் கோபமுண்டாக்குகிறது. ஆகையால் அவர் அந்த ஆட்களின்
மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டு அவர்களுடைய காசுகளைச் சிதறிப் போடுகிறார்.
அதோடு, கயிறுகளை ஒரு சாட்டையைப் போல செய்து எல்லா மிருகங்களையும்
ஆலயத்திலிருந்து துரத்தியடிக்கிறார். புறா விற்கிற ஆட்களிடம்: ‘இவற்றை
இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையின் வீட்டை பணம்
சம்பாதிக்கிற இடமாக மாற்றாதீர்கள்’ என்று கட்டளையிடுகிறார்.
இயேசுவைப் பின்பற்றுகிறவர்களில் சிலர் இங்கே எருசலேம் ஆலயத்தில் அவருடன்
இருக்கிறார்கள். இயேசு இப்படியெல்லாம் செய்வதைப் பார்த்து அவர்கள்
ஆச்சரியப்படுகிறார்கள். ‘கடவுளுடைய வீட்டின் பேரிலான அன்பு நெருப்பு போல்
அவருக்குள் பற்றி எரியும்’ என்று கடவுளுடைய குமாரனைப் பற்றி பைபிளில்
சொல்லப்பட்டிருப்பது அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறது.
இயேசு இங்கே
எருசலேமில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வந்த சமயத்தில் பல அற்புதங்களைச்
செய்கிறார். பிறகு, யூதேயாவை விட்டு கலிலேயாவுக்குக் கிளம்புகிறார். ஆனால்
போகும்போது, சமாரியா மாகாணத்தின் வழியாகச் செல்கிறார். அங்கே என்ன
நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.
யோவான் 2:13-25; 4:3, 4.
![]() |
இயேசு காசு மேஜைகளைக் கவிழ்த்துப்போடுகிறார் |
கேள்விகள்
- ஆடு, மாடுகளையும் பறவைகளையும் ஏன் ஆலயத்தில் விற்கிறார்கள்?
- எது இயேசுவுக்குக் கோபமூட்டுகிறது?
- இந்தப் படத்தில் பார்க்கிறபடி, இயேசு என்ன செய்கிறார், புறா விற்கிற ஆட்களிடம் அவர் என்ன கட்டளையிடுகிறார்?
- இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள், அவர் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறபோது எது அவர்களுடைய ஞாபகத்திற்கு வருகிறது?
- இயேசு எந்த மாகாணத்தின் வழியாகக் கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்கிறார்?
கூடுதல் கேள்வி
- யோவான் 2:13-25-ஐ வாசி.
ஆலயத்திலிருந்த காசுக்காரர்கள் மீது இயேசு கோபப்பட்டதை வைத்துப்
பார்க்கும்போது, ராஜ்ய மன்றத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது
குறித்து நமக்கு என்ன சரியான எண்ணம் இருக்க வேண்டும்? (யோவா. 2:15, 16;
1 கொ. 10:24, 31-33)
No comments:
Post a Comment