Monday, 9 December 2013

ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்

ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்

இந்த அழகிய பெண்ணின் பெயர் மரியாள். இவள் நாசரேத் பட்டணத்தில் வாழ்கிற ஓர் இஸ்ரவேல் பெண். இவள் ரொம்ப நல்ல பெண் என்று கடவுளுக்குத் தெரியும். அதனால்தான் அவர் தம்முடைய தூதன் காபிரியேலை அவளிடம் அனுப்பியிருக்கிறார். மரியாளிடம் என்ன சொல்வதற்கு காபிரியேலை அனுப்பினார் என்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.
கிருபை பெற்றவளே, நல்வாழ்த்துக்கள், யெகோவா உன்னுடன் இருக்கிறார்’ என்று காபிரியேல் அவளிடம் சொல்கிறார். இவரை மரியாள் முன்னொருபோதும் பார்த்ததில்லை. அதுவும், எந்த அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்கிறார் என்று புரியாததால் அவள் பயப்படுகிறாள். உடனடியாக அவர் மரியாளின் பயத்தைப் போக்குகிறார்.
‘மரியாளே, பயப்படாதே, யெகோவாவிடம் நீ கிருபை பெற்றிருக்கிறாய். அதனால்தான் அவர் உனக்கு ஒரு அதிசயமான காரியத்தைச் செய்யப் போகிறார். சீக்கிரத்தில் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்’ என்கிறார்.
மேலும்: ‘அவர் பெரியவராய் இருப்பார், மகா உன்னத கடவுளின் குமாரன் என்று அழைக்கப்படுவார். யெகோவா அவரை தாவீதைப் போல் ராஜாவாக்குவார். ஆனால் அவர் என்றென்றும் அரசாளுவார், அவருடைய ராஜ்யம் ஒருபோதும் முடிவடையாது!’ என்று விளக்குகிறார்.
‘இதெல்லாம் எப்படி நடக்கும்? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே. ஒரு ஆணுடன் நான் வாழாததால் எனக்கு எப்படி ஒரு குழந்தை பிறக்கும்?’ என்று மரியாள் கேட்கிறாள்.
அதற்கு அவர்: ‘கடவுளுடைய வல்லமை உன்மேல் வரும், எனவே பிறக்கப்போகும் அந்தக் குழந்தை கடவுளுடைய குமாரன் என்று அழைக்கப்படும்’ என பதிலளிக்கிறார். பிறகு, ‘உன் சொந்தக்காரப் பெண் எலிசபெத்தை உனக்கு ஞாபகமிருக்கிறதா? கிழவியான அவளுக்கு எப்படிப் பிள்ளை பிறக்கப் போகிறது என மக்கள் அவளைப் பார்த்து சொன்னார்கள். ஆனால் சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான். எனவே, கடவுளால் செய்ய முடியாதது எதுவும் இல்லை’ என்று சொல்கிறார்.
அவர் பேசி முடித்ததும், ‘நான் யெகோவாவின் அடிமை! நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்’ என மரியாள் கூறுகிறாள். அப்போது தேவதூதன் அங்கிருந்து போய் விடுகிறார்.
எலிசபெத்தைப் பார்க்க மரியாள் அவசர அவசரமாக போகிறாள். மரியாளின் குரலைக் கேட்கிறபோது எலிசபெத்தின் வயிற்றில் இருக்கிற குழந்தை சந்தோஷத்தில் துள்ளுகிறது. எலிசபெத் கடவுளுடைய ஆவியால் நிரப்பப்பட்டவளாய் மரியாளிடம்: ‘மற்ற எல்லா பெண்களையும்விட நீ விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்’ என்று சொல்கிறாள். எலிசபெத்துடன் மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் தங்கியிருந்துவிட்டு, பிறகு நாசரேத்திலுள்ள தன் வீட்டுக்கே திரும்பிப் போகிறாள். 
மரியாள்

யோசேப்பு என்பவரை மரியாள் கல்யாணம் செய்துகொள்ள இருக்கிறாள். ஆனால் மரியாளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறதென்று யோசேப்புக்குத் தெரிந்தவுடனே அவளைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாதென்று நினைக்கிறார். அப்போது தேவதூதன் அவரிடம்: ‘மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ள பயப்படாதே. ஏனென்றால் கடவுள்தான் அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்திருக்கிறார்’ என்று சொல்கிறார். அதனால் மரியாளும் யோசேப்பும் கல்யாணம் செய்துகொண்டு, இயேசு பிறப்பதற்காக காத்திருக்கிறார்கள்.
லூக்கா 1:26-56; மத்தேயு 1:18-25.


கேள்விகள்

  • இந்தப் படத்திலுள்ள பெண் யார்?
  • காபிரியேல் தூதன் மரியாளிடம் என்ன சொல்கிறார்?
  • மரியாள் ஓர் ஆணுடன் வாழாவிட்டாலும், அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பதை காபிரியேல் தூதன் அவளிடம் எப்படிச் சொல்கிறார்?
  • தன் சொந்தக்காரியான எலிசபெத்தை மரியாள் போய்ப் பார்க்கும்போது அங்கு என்ன நடக்கிறது?
  • மரியாளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறதென்று யோசேப்புக்குத் தெரிந்ததும் அவர் என்ன நினைக்கிறார், ஆனால் அவர் ஏன் தன் மனதை மாற்றிக்கொள்கிறார்?

கூடுதல் கேள்விகள்

  • லூக்கா 1:26-56-ஐ வாசி. (அ) பரலோகத்திலிருந்த கடவுளுடைய குமாரனுடைய உயிர், மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டபோது அவளுடைய கருமுட்டையில் அபூரணத்தன்மை இருந்ததா என்பதைப் பற்றி லூக்கா 1:35 என்ன காட்டுகிறது? (ஆகா. 2:11-13; யோவா. 6:69; எபி. 7:26; 10:5)
    (ஆ) பிறப்பதற்கு முன்பே இயேசு எவ்வாறு கனப்படுத்தப்பட்டார்? (லூக். 1:41-43)
    (இ) இன்று விசேஷ ஊழிய சிலாக்கியங்களைப் பெறுகிற கிறிஸ்தவர்களுக்கு மரியாள் என்ன சிறந்த மாதிரியை வைக்கிறாள்? (லூக். 1:38, 46-49; 17:10; நீதி. 11:2)
  • மத்தேயு 1:18-25-ஐ வாசி. இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற பெயர் வைக்கப்படாவிட்டாலும், மனிதனாக அவர் வகித்த பாகம் அதன் அர்த்தத்தை எப்படி நிறைவேற்றியது? (மத். 1:22, 23; யோவா. 14:8-10; எபி. 1:1-3)

No comments:

Post a Comment