Monday, 9 December 2013

இயேசு கற்பிக்கிற விதம்

இயேசு கற்பிக்கிற விதம்

ஒரு நாள் இயேசு ஓர் ஆளிடம், ‘நீ உன் அயலானை நேசிக்க வேண்டும்’ என்று சொல்கிறார். அதற்கு அந்த ஆள்: ‘என்னுடைய அயலான் யார்?’ என்று கேட்கிறான். அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று இயேசுவுக்குத் தெரிகிறது. தன்னுடைய சொந்த இனத்தையும் மதத்தையும் சேர்ந்த ஆட்கள் மாத்திரமே தன்னுடைய அயலார் என்று அந்த ஆள் நினைக்கிறான். எனவே, அவனிடம் இயேசு என்ன சொல்கிறார் என்று நாம் பார்க்கலாம்.
சில சமயங்களில் ஒரு கதையைச் சொல்லி இயேசு கற்பிக்கிறார். இந்த முறையும் அவர் ஒரு கதை சொல்கிறார். ஒரு யூதனையும் ஒரு சமாரியனையும் பற்றிய கதை அது. பெரும்பாலான யூதர்களுக்கு சமாரியரைக் கண்டாலே பிடிக்காது என்பதை நாம் ஏற்கெனவே வாசித்திருக்கிறோம். இப்போது இயேசு சொன்ன கதையைக் கேள்:
ஒருநாள் யூதன் ஒருவன் மலைப்பாதை வழியாகக் கீழே எரிகோவுக்குப் போய்க் கொண்டிருந்தான். திடீரென்று திருடர்கள் வந்து அவனைத் தாக்கினார்கள். அவனுடைய பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, அவனை நன்றாக அடித்துப்போட்டு விடுகிறார்கள். சாகிற நிலையில் அவன் அங்கேயே விழுந்துவிடுகிறான்.
பிறகு, ஒரு யூத ஆசாரியன் அந்தப் பாதை வழியாக வந்தான். அடித்துப் போடப்பட்டிருக்கிற அந்த யூதனைப் பார்த்தான். பார்த்துவிட்டு என்ன செய்தான் தெரியுமா? ஒன்றும் செய்யாமல் அப்படியே போய் விட்டான். அவன் போன பிறகு, பக்திமான் ஒருவன் வந்தான். இவன் ஒரு லேவியன். இவனாவது நின்றானா? இல்லை, இவனும்கூட அடித்துப் போடப்பட்டிருந்த அந்த யூதனுக்கு உதவி செய்யவில்லை. அதோ, தூரத்தில் அந்த ஆசாரியனும் லேவியனும் போய்க் கொண்டிருப்பது தெரிகிறதா?
ஆனால் அடித்துப் போடப்பட்ட அந்த யூதனுடன் இருப்பது யாரென்று பார். இவன் ஒரு சமாரியன். இவன் அந்த யூதனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய காயங்களுக்கு மருந்து போட்டுக் கொடுக்கிறான். அதன் பின்பு, அந்த யூதன் ஓய்வெடுத்து சுகமாவதற்காக தங்குமிடம் ஒன்றில் அவனைக் கொண்டுபோய் விட்டுவிட்டும் போகிறான். 
நல்ல சமாரியன்

இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், தம்மிடம் கேள்வி கேட்ட அந்த ஆளைப் பார்த்து: ‘இந்த மூன்று பேரில், அந்த அடிபட்ட யூதனிடம் அயலானைப் போல் நடந்து கொண்டது யாரென்று நினைக்கிறாய்? அந்த ஆசாரியனா லேவியனா அல்லது சமாரியனா?’ என்று இயேசு கேட்கிறார்.
‘அந்தச் சமாரியனே. அவன்தான் அந்த அடிபட்ட யூதனிடம் அன்பாக நடந்துகொண்டான்!’ என்று அவன் பதிலளிக்கிறான்.
அதற்கு இயேசு: ‘சரியாகச் சொன்னாய், அதனால் நீயும் அவனைப் போலவே மற்றவர்களை நடத்து’ என்று சொல்கிறார்.
இயேசு கற்பிக்கிற விதம் உனக்குப் பிடித்திருக்கிறது தானே? பைபிளில் இயேசு சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு நாம் கவனம் செலுத்தினால், முக்கியமான காரியங்களை நாம் ஏராளமாக கற்றுக்கொள்ளலாம் இல்லையா?
லூக்கா 10:25-37.


கேள்விகள்

  • இயேசுவிடம் ஓர் ஆள் என்ன கேள்வியைக் கேட்கிறான், ஏன்?
  • சில சமயங்களில் இயேசு எதைச் சொல்லி கற்பிக்கிறார், யூதர்களையும் சமாரியர்களையும் பற்றி நாம் ஏற்கெனவே என்ன தெரிந்திருக்கிறோம்?
  • இயேசு சொன்ன கதையின்படி, எரிகோவுக்குப் போகும் வழியில் ஒரு யூதனுக்கு என்ன நடக்கிறது?
  • அந்த வழியே செல்கிற ஒரு யூத ஆசாரியனும் லேவியனும் அதைப் பார்த்து என்ன செய்கிறார்கள்?
  • இந்தப் படத்தில் பார்க்கிறபடி, அடித்துப்போடப்பட்ட அந்த யூதனுக்கு யார் உதவி செய்கிறான்?
  • இயேசு இந்தக் கதையை சொல்லி முடித்ததும் என்ன கேள்வி கேட்கிறார், அதற்கு அந்த ஆள் என்ன பதில் சொல்கிறான்?

கூடுதல் கேள்விகள்

  • லூக்கா 10:25-37-ஐ வாசி. (அ) நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்த அந்த ஆள் தம்மிடம் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கு இயேசு எப்படி உதவினார்? (லூக். 10:26; மத். 16:13-16)
    (ஆ) கேட்போரின் மனதிலுள்ள தப்பெண்ணத்தைப் போக்க இயேசு எப்படி உவமைகளைப் பயன்படுத்தினார்? (லூக். 10:36, 37; 18:9-14; தீத். 1:9)

No comments:

Post a Comment