Monday, 9 December 2013

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்

அங்கே நிற்பது அப்போஸ்தலனாகிய பேதுரு, அவருக்குப் பின்னால் நிற்பவர்கள் அவருடைய சில நண்பர்கள். ஆனால் அந்த ஆள் ஏன் பேதுருவுக்கு முன் விழுந்து வணங்குகிறார்? அவர் அப்படிச் செய்ய வேண்டுமா என்ன? அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?
அவருடைய பெயர் கொர்நேலியு. அவர் ஒரு ரோம படைத்தளபதி. பேதுரு யாரென்பது கொர்நேலியுவுக்குத் தெரியாது, ஆனால் அவரைத் தன் வீட்டுக்கு அழைக்குமாறு அவனுக்குச் சொல்லப்பட்டது. இது எப்படி நடந்ததென்று நாம் பார்க்கலாம். 

கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்


இயேசுவை முதலாவது பின்பற்றியவர்கள் யூதர்கள், ஆனால் கொர்நேலியு ஒரு யூதன் அல்ல. என்றாலும் கடவுளை அவர் நேசிக்கிறார், அவரிடம் ஜெபிக்கிறார், ஜனங்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்கிறார். ஒருநாள் மத்தியான வேளையில், ஒரு தேவதூதன் அவருக்குக் காணப்பட்டு: ‘கடவுள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுகிறார். உன் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கப் போகிறார். அதனால் சில ஆட்களை அனுப்பி பேதுரு என்பவரை இங்கே அழைத்துவரச் சொல். அவர் யோப்பாவில், கடலோரப் பகுதியிலுள்ள சீமோனின் வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்று சொல்கிறார்.
கொர்நேலியு உடனடியாக பேதுருவைக் கண்டுபிடிக்க சில ஆட்களை அனுப்புகிறார். மறுநாள், யோப்பாவுக்கு அருகில் அவர்கள் போய்ச் சேர்ந்தபோது, சீமோனுடைய வீட்டின் மேல் மாடியில் பேதுரு இருக்கிறார். அங்கே பரலோகத்திலிருந்து ஒரு பெரிய துணி கீழே வருவதைப் பார்ப்பதைப் போல் பேதுருவைக் கடவுள் நினைக்க வைக்கிறார். அந்தத் துணியில் எல்லா வகையான மிருகங்களும் இருக்கின்றன. கடவுளுடைய சட்டத்தின்படி, இவை சாப்பிடக் கூடாத அசுத்தமான மிருகங்கள், ஆனாலும் ஒரு குரல்: ‘பேதுருவே, எழுந்திரு, இவற்றையெல்லாம் கொன்று சாப்பிடு’ என்று சொல்கிறது.
அதற்கு பேதுரு: ‘மாட்டேன்! அசுத்தமான எதையும் நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை’ என்கிறார். ஆனால் அந்தக் குரல் பேதுருவிடம்: ‘சுத்தமானவை என்று கடவுள் இப்போது சொல்வதை அசுத்தம் என்று இனிமேல் சொல்லாதே’ என்று கூறுகிறது. இப்படியே மூன்று தடவை நடக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று பேதுரு யோசித்துக் கொண்டிருந்தபோது, கொர்நேலியுவால் அனுப்பப்பட்ட ஆட்கள் அந்த வீட்டுக்கு வந்து பேதுரு இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
பேதுரு கீழே இறங்கி வந்து: ‘நான்தான் பேதுரு. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். தன் வீட்டுக்கு பேதுருவை அழைக்குமாறு கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதன் சொன்னதாக அந்த ஆட்கள் விளக்கியபோது அவர்களோடு செல்ல அவர் சம்மதிக்கிறார். அடுத்த நாள் அவரும் அவருடைய நண்பர்களும் செசரியாவில் இருக்கிற கொர்நேலியுவைப் பார்க்கப் புறப்படுகிறார்கள்.
கொர்நேலியு, தன்னுடைய சொந்தக்காரர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அங்கு வரவழைத்திருக்கிறார். அப்போது பேதுரு உள்ளே வருகிறார், அவர் வந்ததுமே கொர்நேலியு அவரை வரவேற்கிறார். இங்கே நீ பார்க்கிறபடி, பேதுருவின் கால்களில் விழுந்து வணங்குகிறார். உடனே பேதுரு: ‘எழுந்திரு; நானும் ஒரு மனிதன்தான்’ என்று சொல்கிறார். ஆம்! ஒரு மனிதனுக்கு முன் விழுந்து வணங்குவது சரியல்ல என்று பைபிள் காட்டுகிறது. யெகோவாவை மாத்திரமே நாம் வணங்க வேண்டும்.
பேதுரு இப்போது அங்குக் கூடி வந்திருப்பவர்களிடம் பிரசங்கிக்கிறார். பிறகு, ‘கடவுள் தம்மைச் சேவிக்க விரும்புகிற எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது’ என்று சொல்கிறார். அப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை அங்கிருந்தோருக்குக் கொடுக்கிறார், உடனே அந்த ஆட்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்குகிறார்கள். பேதுருவுடன் வந்த அந்த யூத சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியமாகி விடுகிறது, ஏனென்றால் யூதருக்கு மாத்திரமே கடவுள் தயவு காட்டுகிறார் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் எந்த ஒரு ஜாதியாரையும் மற்ற ஜாதியாரைவிட மேலானவர்களாக அல்லது அதிக முக்கியமானவர்களாக கடவுள் கருதுவதில்லை என்பதை இதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். நாமெல்லோரும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய விஷயம் இது அல்லவா?
அப்போஸ்தலர் 10:1-48; 11:1-18; வெளிப்படுத்துதல் 19:10.


கேள்விகள்

  • இந்தப் படத்தில் கீழே விழுந்து வணங்குபவர் யார்?
  • கொர்நேலியுவிடம் ஒரு தேவதூதன் என்ன சொல்கிறார்?
  • யோப்பாவிலுள்ள சீமோனுடைய வீட்டின் மேல் மாடியில் பேதுரு இருக்கையில் அவர் எதைப் பார்க்கும்படி கடவுள் செய்கிறார்?
  • தன் கால்களில் விழுந்து வணங்கக் கூடாது என கொர்நேலியுவிடம் பேதுரு ஏன் சொல்கிறார்?
  • பேதுருவுடன் வந்த யூத சீஷர்களுக்கு ஏன் ஆச்சரியமாகி விடுகிறது?
  • கொர்நேலியுவை பேதுரு சந்தித்ததிலிருந்து என்ன முக்கிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 10:1-48-ஐ வாசி. ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பது பற்றி அப்போஸ்தலர் 10:42-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் என்ன காட்டுகின்றன? (மத். 28:19; மாற். 13:10; அப். 1:8)
  • அப்போஸ்தலர் 11:1-18-ஐ வாசி. புறஜாதியாரைக் குறித்த யெகோவாவின் நோக்கம் தெளிவானபோது பேதுரு என்ன மனப்பான்மையைக் காட்டினார், அவருடைய மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (அப். 11:17, 18: 2 கொ. 10:5; எபே. 5:17)

1 comment:

  1. MCC's new poker rooms are coming up in 2021
    A new poker room is coming to the hotel lobby in the Marina District in downtown New 이천 출장안마 Jersey, according to 제주 출장샵 a Nov 거제 출장안마 2, 2020 · 동해 출장샵 Uploaded by 당진 출장안마 MCC in Downtown New York

    ReplyDelete