யோசேப்பு தன் அண்ணன்மாரை சோதித்துப் பார்க்கிறார்
தன்னுடைய 10 அண்ணன்களுமே இன்னமும் அற்ப
புத்தியுள்ளவர்களாயும் அன்பற்றவர்களாயும் இருக்கிறார்களா என்பதை அறிய
யோசேப்பு விரும்புகிறார். எனவே அவர்களைப் பார்த்து: ‘நீங்களெல்லாம்
வேவுகாரர்கள், எங்கள் தேசத்தில் என்ன குறை இருக்கிறதென்பதைக்
கண்டுபிடிக்கத்தான் வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார்.
அதற்கு
அவர்கள்: ‘இல்லை, நாங்கள் வேவுகாரர்கள் இல்லை. நாங்கள் நல்லவர்கள்.
நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிமார். நாங்கள் மொத்தம் 12 பேர். ஆனால் ஒரு
தம்பி காணாமல் போய்விட்டான். கடைசி தம்பி, வீட்டில் எங்கள் அப்பாவோடு
இருக்கிறான்’ என்று சொல்கிறார்கள்.
அவர்களை நம்பாதது போல்
யோசேப்பு நடிக்கிறார். தனது அண்ணன் சிமியோனை மட்டும் சிறையில்
வைத்துவிட்டு, மற்றவர்கள் உணவை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்படி
அனுமதிக்கிறார். ஆனால் அவர்களிடம், ‘நீங்கள் திரும்பி வரும்போது உங்கள்
கடைசி தம்பியையும் கூட்டிக்கொண்டு வர வேண்டும்’ என்று சொல்கிறார்.
இவர்கள் கானானிலிருந்த தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, நடந்த
எல்லாவற்றையும் தங்கள் அப்பாவிடம் சொல்கிறார்கள். யாக்கோபு ரொம்பவும்
சோகமாகிவிடுகிறார். ‘ஏற்கெனவே யோசேப்பு இல்லை, இப்போது சிமியோனும் இல்லை’
என்று சொல்லி அழுகிறார். ‘என் கடைசி மகன் பென்யமீனைக் கொண்டு போக நான்
விடவே மாட்டேன்’ என்கிறார். ஆனால் அவர்களுடைய உணவு கொஞ்சம் கொஞ்சமாக
தீர்ந்துபோக ஆரம்பிக்கிறபோது, மீண்டும் உணவு வாங்கி வருவதற்காக பென்யமீனை
எகிப்துக்கு அழைத்துச் செல்ல யாக்கோபு அனுமதிக்க வேண்டியதாகிறது.
தன் அண்ணன்மாரும் தம்பியும் வருகிறதை யோசேப்பு இப்பொழுது பார்க்கிறார்.
தன்னுடைய தம்பி பென்யமீனைப் பார்த்து ரொம்பவே சந்தோஷமடைகிறார். அவர்கள்
யாருக்குமே யோசேப்பை அடையாளம் தெரியவில்லை. தன்னுடைய அண்ணன்மாரான இந்தப்
பத்துப் பேரைச் சோதிப்பதற்கு யோசேப்பு இப்போது ஒரு காரியத்தைச் செய்கிறார்.
அவர்கள் எல்லோருடைய சாக்குகளிலும் உணவு நிரப்பும்படி தன்னுடைய
வேலையாட்களிடம் சொல்கிறார். ஆனால் பென்யமீனுடைய சாக்கில் யாருக்கும்
தெரியாமல் தன்னுடைய வெள்ளி பானபாத்திரத்தைப் போடும்படி சொல்கிறார். அவர்கள்
எல்லோரும் புறப்பட்டு கொஞ்ச தூரம் போன பிறகு, தன்னுடைய வேலைக்காரர்களை
அனுப்புகிறார். இந்த வேலைக்காரர்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து: ‘எங்கள்
எஜமானரின் வெள்ளி பானபாத்திரத்தை நீங்கள் ஏன் திருடினீர்கள்?’ என்று
கேட்கிறார்கள்.
‘ஐயோ, நாங்கள் எதையும் திருடவில்லை, எங்களில்
எவரிடமாவது அந்தப் பானபாத்திரத்தை நீங்கள் கண்டுபிடித்தால் அந்த ஆள்
கொல்லப்படுவானாக’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.
உடனே எல்லோருடைய
சாக்குகளையும் அந்த வேலைக்காரர்கள் சோதனையிடுகிறார்கள். அப்போது, நீ இந்தப்
படத்தில் பார்க்கிறபடி அந்தப் பானபாத்திரத்தை பென்யமீனின் சாக்கில்
கண்டுபிடிக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்ததும், ‘இனி மற்றவர்கள் போகலாம்,
பென்யமீன் மட்டும் எங்களுடன் வர வேண்டும்’ என்று சொல்கிறார்கள். இந்தப் 10
பேரும் இப்பொழுது என்ன செய்வார்கள்?
பென்யமீனுடன் சேர்ந்து
அவர்கள் எல்லோருமே யோசேப்பிடம் திரும்பி வருகிறார்கள். யோசேப்பு தன்
அண்ணன்மாரிடம்: ‘நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போகலாம். ஆனால் பென்யமீன்
மட்டும் என் அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும்’ என்கிறார்.
அப்பொழுது யூதா: ‘இவன் இல்லாமல் நான் வீட்டுக்குப் போனால் என் அப்பா செத்தே
விடுவார். ஏனென்றால் இவன் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார். அதனால்
தயவுசெய்து என்னை உம்முடைய அடிமையாக இங்கே வைத்துக்கொண்டு இவனை
வீட்டுக்குப் போகும்படி விட்டுவிடும்’ என்று சொல்கிறார்.
தன்னுடைய
அண்ணன்மாரின் மனம் மாறியிருப்பதை யோசேப்புவால் காண முடிகிறது; ஆம்,
அவர்கள் இப்போது அற்ப புத்தியுள்ளவர்களாயும் அன்பற்றவர்களாயும் இல்லை
என்பதை தெரிந்துகொள்கிறார். எனவே, அவர் இப்போது என்ன செய்யப் போகிறார்?
நாம் பார்க்கலாம்.
ஆதியாகமம் 42:9-38; 43:1-34; 44:1-34.
![]() |
யோசேப்பின் அண்ணன்கள் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் |
கேள்விகள்
- யோசேப்பு தன் அண்ணன்மாரை வேவு பார்க்க வந்தவர்கள் என்று ஏன் குற்றம்சாட்டுகிறார்?
- கடைசி மகனான பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல யாக்கோபு ஏன் அனுமதிக்கிறார்?
- யோசேப்பின் வெள்ளி பானபாத்திரம் எப்படி பென்யமீனின் சாக்கில் இருக்கிறது?
- பென்யமீனை விடுவிப்பதற்காக யூதா என்ன செய்ய முன்வருகிறார்?
- யோசேப்பின் அண்ணன்மார் மனம் மாறியிருப்பது எப்படித் தெரிய வருகிறது?
கூடுதல் கேள்விகள்
- ஆதியாகமம் 42:9-38-ஐ வாசி.
ஆதியாகமம் 42:18-ல் காணப்படும் யோசேப்பின் வார்த்தைகள், இன்று யெகோவாவின்
அமைப்பில் பொறுப்பான ஸ்தானத்திலுள்ளவர்களுக்கு எப்படி ஒரு சிறந்த
நினைப்பூட்டுதலாக இருக்கிறது? (நெ. 5:15; 2 கொ. 7:1, 2)
- ஆதியாகமம் 43:1-34-ஐ வாசி.
(அ) ரூபன் தலைப்பிள்ளையாக இருந்தாலும், தன் சகோதரர்கள் சார்பாக பேசியவர்
யூதாதான் என்பது எப்படித் தெளிவாகிறது? (ஆதி. 43:3, 8, 9; 44:14, 18; 1 நா.
5:2)
(ஆ) தன் சகோதரர்களை யோசேப்பு எப்படிச் சோதித்தார், ஏன்? (ஆதி. 43:33, 34)
- ஆதியாகமம் 44:1-34-ஐ வாசி. (அ) தன் சகோதரர்கள் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்க யோசேப்பு தன்னை யாராக காட்டிக்கொண்டார்? (ஆதி. 44:5, 15; லேவி. 19:26)
(ஆ) தம்பி மீது முன்பு இருந்த பொறாமை இப்போது மறைந்து விட்டது என்பதை யோசேப்பின் அண்ணன்மார் எப்படிக் காட்டினார்கள்? (ஆதி. 44:13, 33, 34)
No comments:
Post a Comment