இயேசு கொல்லப்படுகிறார்
ஐயோ! இங்கே நடந்துகொண்டிருக்கிற பயங்கரத்தைப்
பார்! இயேசுவைக் கொல்கிறார்கள். அவரைக் கழுமரத்தில் அறைந்திருக்கிறார்கள்.
அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன.
இயேசுவுக்கு ஏன் சிலர் இப்படிச் செய்கிறார்கள்?
இயேசு |
ஏனென்றால் சில ஆட்கள் இயேசுவை வெறுக்கிறார்கள், அதனால்தான் இப்படிச்
செய்கிறார்கள். இயேசுவை வெறுப்பவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?
அவர்களில் ஒருவன் பொல்லாத தூதனான பிசாசாகிய சாத்தான், அவன்தான் ஆதாமையும்
ஏவாளையும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக வைத்தான். இயேசுவின் எதிரிகள்
இந்தப் பயங்கர குற்றத்தைச் செய்ய தூண்டியவனும் அவன்தான்.
இயேசுவை
இங்கே கழுமரத்தில் அறைவதற்கு முன்புகூட, எதிரிகள் அவரைக் கேவலமாக
நடத்துகிறார்கள். கெத்செமனே தோட்டத்திற்கு வந்து அவரை எப்படிப் பிடித்துக்
கொண்டு போனார்கள் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? அந்த எதிரிகள் யார்?
அவர்கள் மதத் தலைவர்களே. அடுத்து என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.
இயேசுவை மதத் தலைவர்கள் பிடித்துக்கொண்டு போகும்போது அவருடைய
அப்போஸ்தலர்கள் பயத்தில் ஓடிப்போகிறார்கள். எதிரிகளிடம் இயேசுவைத்
தன்னந்தனியாக விட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆனால் பேதுருவும் யோவானும்
ரொம்ப தூரம் போகவில்லை. இயேசுவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க
அவர்கள் பின்னாலேயே போகிறார்கள்.
முன்பு பிரதான ஆசாரியராக இருந்த
அன்னா என்ற வயதானவரிடம் அந்த மதத் தலைவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறார்கள்.
அங்கே அவர்கள் கொஞ்ச நேரமே இருக்கிறார்கள். அதன் பிறகு, காய்பாவின்
வீட்டுக்கு அவரைக் கொண்டு போகிறார்கள், இப்போது காய்பாதான் பிரதான
ஆசாரியர். மதத் தலைவர்கள் நிறைய பேர் அவருடைய வீட்டில் கூடி
வந்திருக்கிறார்கள்.
காய்பாவின் வீட்டில் விசாரணை நடக்கிறது.
இயேசுவைப் பற்றி பல பொய்களைச் சொல்வதற்கு நிறைய ஆட்கள் அங்கு
வரவழைக்கப்படுகிறார்கள். மதத் தலைவர்கள் எல்லோரும்: ‘இயேசு கொல்லப்பட
வேண்டும்’ என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய முகத்தில் துப்பி,
தங்கள் முஷ்டிகளால் அவரைக் குத்துகிறார்கள்.
இதெல்லாம் நடந்து
கொண்டிருக்கையில் பேதுரு வெளியே முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்த
இரவு நேரம் ரொம்ப குளிராய் இருக்கிறது, அதனால் அங்குள்ள ஜனங்கள் நெருப்பு
உண்டாக்கி, அதைச் சுற்றி உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஒரு வேலைக்காரப் பெண் பேதுருவைப் பார்த்து: ‘இந்த ஆள்கூட
இயேசுவுடன் இருந்தான்’ என்று சொல்கிறாள்.
அதற்கு பேதுரு: ‘இல்லை, அது நான் இல்லை!’ என்கிறார்.
இயேசுவுடன் பேதுரு இருந்ததாக மூன்று முறை அங்கிருந்த ஆட்கள்
சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்று பேதுரு ஒவ்வொரு முறையும்
சொல்கிறார். மூன்றாவது முறை அப்படிச் சொன்னபோது இயேசு அவரைத் திரும்பிப்
பார்க்கிறார். இந்தப் பொய்களைச் சொன்னதற்காகப் பேதுரு ரொம்பவும்
வருத்தப்படுகிறார், அதனால் வெளியே போய் அழுகிறார்.
வெள்ளிக்கிழமை
காலை சூரியன் உதிக்கத் தொடங்கியபோது அந்த ஆசாரியர்கள் இயேசுவைத் தங்களுடைய
ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு போகிறார்கள். அவரை என்ன செய்வது என்பது
பற்றி அங்கே கூடிப்பேசுகிறார்கள். பிறகு, யூதேயா மாகாணத்து அதிபதியான
பொந்தியு பிலாத்துவிடம் அவரைக் கொண்டு போகிறார்கள்.
அந்த
ஆசாரியர்கள் பிலாத்துவிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டி: ‘இவன் மோசமான ஒரு
ஆள். இவனைக் கொல்ல வேண்டும்’ என்று சொல்கிறார்கள். இயேசுவிடம் பிலாத்து
நிறைய கேள்விகளைக் கேட்ட பிறகு, ‘இவன் எந்தத் தவறும் செய்திருப்பதாக
எனக்குத் தெரியவில்லை’ என்கிறார். பின்பு இயேசுவை ஏரோது அந்திப்பாவிடம்
பிலாத்து அனுப்புகிறார். ஏரோது கலிலேயாவின் அதிபதி, ஆனால் அவர் எருசலேமில்
தங்கியிருக்கிறார். அவரும் இயேசு எந்தத் தப்பும் செய்யவில்லை என்று சொல்லி,
அவரைத் திரும்ப பிலாத்துவிடமே அனுப்பி விடுகிறார்.
இயேசுவை
பிலாத்து விடுதலை செய்ய விரும்புகிறார். ஆனால் இயேசுவின் எதிரிகள்
அவருக்குப் பதிலாக மற்றொரு கைதியை விடுதலை செய்யச் சொல்லி கேட்கிறார்கள்.
அந்தக் கைதி பரபாஸ் என்ற ஒரு திருடன். ஏறக்குறைய மத்தியான வேளையில்,
இயேசுவை பிலாத்து வெளியே கொண்டு வந்து: ‘இதோ! உங்கள் ராஜா!’ என்கிறார்.
ஆனால் பிரதான ஆசாரியர்கள்: ‘அவனைக் கொண்டுபோய் கொல்லும்! கொல்லும்!’ என்று
கூச்சலிடுகிறார்கள். ஆகவே பரபாஸை பிலாத்து விடுதலை செய்கிறார். இயேசுவோ
கொல்லப்படுவதற்காக கொண்டு போகப்படுகிறார்.
வெள்ளிக்கிழமை
பிற்பகலில் இயேசு ஒரு கழுமரத்தில் அறையப்படுகிறார். இயேசுவின் வலது
பக்கத்தில் ஒரு கள்ளனும், இடது பக்கத்தில் ஒரு கள்ளனும் கழுமரத்தில்
கொல்லப்படுகிறார்கள். இந்தப் படத்தில் நீ அவர்களைப் பார்க்க முடியாது.
இயேசு மரிப்பதற்குச் சற்று முன், இந்தக் கள்ளர்களில் ஒருவன் இயேசுவிடம்:
‘நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்துக்கொள்ளும்’ என்று
சொல்கிறான். அதற்கு இயேசு: ‘நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய் என்று நான்
உனக்கு வாக்குக் கொடுக்கிறேன்’ என்று பதிலளிக்கிறார்.
இது ஓர்
அருமையான வாக்கு அல்லவா? இயேசு எந்தப் பரதீஸைப் பற்றி பேசிக்
கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? ஆரம்பத்தில் கடவுள் உண்டாக்கிய
அந்தப் பரதீஸ் எங்கே இருந்தது? பூமியில்தான் இருந்தது. இயேசு பரலோகத்தில்
ராஜாவாக ஆட்சி செய்யும்போது அந்தக் கள்ளன் பூமியில் திரும்ப உயிருக்குக்
கொண்டு வரப்படுவான், அப்போது அவன் அந்தப் புதிய பரதீஸை அனுபவித்து
மகிழ்வான். இதைக் குறித்து நாம் சந்தோஷப்படலாம் அல்லவா?
மத்தேயு 26:57-75; 27:1-50; லூக்கா 22:54-71; 23:1-49; யோவான் 18:12-40; 19:1-30.
கேள்விகள்
- இயேசு மரிப்பதற்கு முக்கிய காரணம் யார்?
- இயேசுவை மதத் தலைவர்கள் பிடித்துக்கொண்டு போகும்போது அப்போஸ்தலர்கள் என்ன செய்கிறார்கள்?
- பிரதான ஆசாரியனான காய்பாவின் வீட்டில் என்ன நடக்கிறது?
- பேதுரு ஏன் வெளியே போய் அழுகிறார்?
- பிலாத்துவிடம் இயேசுவைத் திரும்ப கொண்டுவந்த பிறகு, ஆசாரியர்கள் என்ன செய்யச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்?
- வெள்ளிக்கிழமை பிற்பகலில் இயேசுவை என்ன செய்கிறார்கள், தமக்கு அருகே கழுமரத்தில் அறையப்பட்டிருக்கிற கள்ளனிடம் இயேசு என்ன வாக்குக் கொடுக்கிறார்?
- இயேசு சொன்ன அந்தப் பரதீஸ் எங்கே இருக்கும்?
கூடுதல் கேள்விகள்
- மத்தேயு 26:57-75-ஐ வாசி.
யூத உயர்நீதி மன்றத்தின் உறுப்பினர்களுடைய இருதயம் பொல்லாததாய் இருந்தது
என்பதை அவர்கள் எவ்விதத்தில் காட்டினார்கள்? (மத். 26:59, 67, 68)
- மத்தேயு 27:1-50-ஐ வாசி. யூதாஸின் மனவருத்தம் உண்மையானதல்ல என்று நம்மால் ஏன் சொல்ல முடியும்? (மத். 27:3, 4; மாற். 3:29; 14:21; 2 கொ. 7:10, 11)
- லூக்கா 22:54-71-ஐ வாசி.
இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரவில் அவரை பேதுரு
மறுதலித்ததிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (லூக்.
22:60-62; மத். 26:31-35; 1 கொ. 10:12)
- லூக்கா 23:1-49-ஐ வாசி.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டபோது இயேசு எப்படி நடந்துகொண்டார், இதிலிருந்து
நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (லூக். 23:33, 34; ரோ. 12:17-19;
1 பே. 2:23)
- யோவான் 18:12-40-ஐ வாசி. மனித பயத்தால்
சிறிது நேரத்திற்கு பேதுரு தடுமாறியபோதிலும், பிற்பாடு ஒரு தலைசிறந்த
அப்போஸ்தலராக ஆனார் என்பது எதைக் காட்டுகிறது? (யோவா. 18:25-27; 1 கொ. 4:2;
1 பே. 3:14, 15; 5:8, 9)
- யோவான் 19:1-30-ஐ வாசி. (அ)
உணவு, உடை, உறைவிடம் போன்ற விஷயங்களில் இயேசு எப்படிச் சமநிலையோடு
இருந்தார்? (யோவா. 2:1, 2, 9, 10; 19:23, 24; மத். 6:31, 32; 8:20)
(ஆ) மரிக்கப் போகும் சமயத்தில் இயேசு சொன்ன வார்த்தைகள், யெகோவாவின் பேரரசுரிமையைக் கடைசிவரை ஆதரிப்பதில் அவர் ஜெயம் கொண்டார் என எப்படிக் காட்டுகின்றன? (யோவா. 16:33; 19:30; 2 பே. 3:14; 1 யோ. 5:4)
No comments:
Post a Comment