எருசலேம் அழிக்கப்படுகிறது
படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்களாய் இருந்த
இஸ்ரவேலர் அனைவரையும் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டு போய் 10
ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்பொழுது என்ன நடக்கிறதென்று பார்! எருசலேம்
எரிக்கப்படுகிறது. கொல்லப்படாத இஸ்ரவேலர் கைதிகளாக பாபிலோனுக்குக் கொண்டு
போகப்படுகிறார்கள்.
கெட்ட வழிகளை விட்டுத் திரும்பாவிட்டால்
இதுதான் நடக்கும் என்று யெகோவாவின் தீர்க்கதரிசிகள் ஏற்கெனவே அந்த
ஜனங்களுக்கு எச்சரித்திருந்தது உனக்கு ஞாபகமிருக்கும். ஆனால் இஸ்ரவேலர்
அந்தத் தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்கவில்லை. யெகோவாவை வணங்குவதற்குப்
பதிலாகப் பொய்க் கடவுட்களை வணங்குவதிலேயே மூழ்கிப் போயிருந்தார்கள். அதனால்
அவர்கள் இப்படித் தண்டிக்கப்பட்டது சரியானதே. அந்த இஸ்ரவேலர் கெட்ட
காரியங்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?
கடவுளுடைய தீர்க்கதரிசியான எசேக்கியேல் சொல்வதால் நமக்குத் தெரியும்.
எசேக்கியேல் யார் என்று உனக்குத் தெரியுமா? ராஜா நேபுகாத்நேச்சார்
பாபிலோனுக்குக் கொண்டு சென்ற இளைஞர்களில் இவரும் ஒருவர். எருசலேமுக்கு
மாபெரும் அழிவு ஏற்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. அந்தச்
சமயத்தில்தான் தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களான சாத்ராக், மேஷாக்,
ஆபேத்நேகோவும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டார்கள்.
எசேக்கியேல் பாபிலோனில் இருக்கும்போது, எருசலேம் ஆலயத்தில் நடக்கிற கெட்ட
காரியங்களை யெகோவா அவருக்குக் காட்டுகிறார். அற்புதகரமாக யெகோவா அதை
அவருக்குக் காட்டுகிறார். எசேக்கியேல் இன்னும் பாபிலோனில்தான் இருக்கிறார்,
என்றாலும் எருசலேம் ஆலயத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை அவருடைய
கண்களுக்குத் தெரியும்படி செய்கிறார். பார்த்த காரியங்கள் எசேக்கியேலை
திடுக்கிட வைக்கின்றன!
எசேக்கியேலிடம் யெகோவா: ‘இங்கே ஆலயத்தில்
ஜனங்கள் செய்து கொண்டிருக்கிற அருவருப்பான காரியங்களைப் பார். அந்தச்
சுவர்கள் முழுக்க பாம்புகளின் படங்களும் மிருகங்களின் படங்களும் இருப்பதைப்
பார். அதோ, இஸ்ரவேலர் அவற்றை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்!’ என்று
சொல்கிறார். அவற்றையெல்லாம் எசேக்கியேலால் பார்க்க முடிகிறது, பார்ப்பதை
அப்படியே எழுதி வைக்கிறார்.
![]() |
எருசலேமிலிருந்து செல்லும் சிறைக்கைதிகள் |
யெகோவா எசேக்கியேலிடம்: ‘இஸ்ரவேல் தலைவர்கள் இரகசியமாக ஏதோ செய்து
கொண்டிருப்பதை உன்னால் பார்க்க முடிகிறதா?’ என்று கேட்கிறார். ஆம்,
எசேக்கியேலால் அதையும் பார்க்க முடிகிறது. அங்கே 70 ஆட்கள் இருக்கிறார்கள்,
அவர்கள் எல்லோரும் பொய்க் கடவுட்களை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
‘யெகோவா நம்மை இப்போது பார்த்துக் கொண்டில்லை. அவர் இந்தத் தேசத்தைக்
கைவிட்டார்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறகு ஆலயத்தின்
வடக்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் சில பெண்களை எசேக்கியேலுக்கு யெகோவா
காட்டுகிறார். அவர்கள் அங்கே பொய்க் கடவுளான தம்மூஸை வணங்கிக்
கொண்டிருக்கிறார்கள். அதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலிலுள்ள அந்த ஆட்களைப்
பார்! ஏறக்குறைய 25 பேர் அங்கே இருக்கிறார்கள். எசேக்கியேல் அவர்களைப்
பார்க்கிறார். அவர்கள் கிழக்குப் பக்கமாய்க் குனிந்து சூரியனை வணங்கிக்
கொண்டிருக்கிறார்கள்!
இந்த ஜனங்கள் என்னை மதிப்பதே இல்லை, கெட்ட
காரியங்களைச் செய்கிறது மட்டுமல்லாமல், என் ஆலயத்திற்கே வந்து அவற்றைச்
செய்கிறார்கள்!’ என்று யெகோவா சொல்கிறார். ‘அவர்கள் என் கடுங்கோபத்திற்கு
ஆளாவார்கள். அழிவு வரும்போது அவர்களுக்காக நான் மனமிரங்க மாட்டேன்’ என்று
உறுதியாய்ச் சொல்கிறார்.
எசேக்கியேலுக்கு யெகோவா இந்தக்
காரியங்களையெல்லாம் காண்பித்து ஏறக்குறைய மூன்றே ஆண்டுகளுக்குப் பிறகு,
நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாய் இஸ்ரவேலர் கலகம் செய்கிறார்கள். அதனால்
அவர்களை எதிர்த்துப் போரிட அவன் கிளம்புகிறான். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்
எருசலேமின் மதில்களை பாபிலோனியர் உடைத்து உள்ளே புகுந்து அந்த நகரத்தைத்
தரைமட்டமாக எரித்துப் போடுகிறார்கள். அநேக ஆட்கள் கொல்லப்படுகிறார்கள்,
மீதி பேர் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு போகப்படுகிறார்கள்.
இஸ்ரவேலருக்கு இந்தப் பயங்கர அழிவு வரும்படி யெகோவா ஏன் அனுமதித்தார்
தெரியுமா? அவர்கள் யெகோவாவுடைய பேச்சைக் கேட்காமலும் அவருடைய
சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலும் போனதால்தான் அதை அனுமதித்தார். யெகோவா
நமக்குச் சொல்வதை எப்போதும் செய்து வருவது எவ்வளவு முக்கியம் என்பதை இது
காட்டுகிறது அல்லவா?
ஆரம்பத்தில் கொஞ்ச ஆட்கள் மட்டுமே இஸ்ரவேல்
தேசத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த மக்களை
மேற்பார்வையிடும் பொறுப்பை கெதலியா என்ற ஒரு யூதனுக்கு நேபுகாத்நேச்சார்
கொடுக்கிறான். ஆனால் பிற்பாடு சில இஸ்ரவேலர் கெதலியாவைக் கொலை செய்து
விடுகிறார்கள். இந்தக் கெட்ட காரியத்தைச் செய்துவிட்டதால் பாபிலோனியர்
வந்து தங்கள் எல்லோரையும் அழித்துப் போடுவார்களோ என்று அந்த மக்கள் இப்போது
பயப்படுகிறார்கள். அதனால் கட்டாயப்படுத்தி எரேமியாவை அழைத்துக்கொண்டு
எகிப்துக்கு ஓடிப்போகிறார்கள்.
இதனால் இஸ்ரவேல் தேசமே
வெறிச்சோடிக் கிடக்கிறது, ஒரு ஆள்கூட இல்லை. 70 ஆண்டுகளுக்கு அந்தத்
தேசத்தில் யாருமே வாழவில்லை. ஆனால் தமது ஜனத்தை 70 ஆண்டுகளுக்குப் பிறகு
அந்தத் தேசத்திற்குத் திரும்பக் கொண்டு வரப்போவதாக யெகோவா வாக்குக்
கொடுக்கிறார். இதற்கிடையில், பாபிலோன் தேசத்திற்குக் கொண்டு போகப்பட்ட
கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் பார்க்கலாம்.
2 இராஜாக்கள் 25:1-26; எரேமியா 29:10; எசேக்கியேல் 1:1-3; 8:1-18.
கேள்விகள்
- படத்தில் பார்க்கிறபடி, எருசலேமுக்கும் இஸ்ரவேலருக்கும் என்ன நடக்கிறது?
- எசேக்கியேல் யார், திடுக்கிட வைக்கிற என்ன காரியங்களை அவருக்கு யெகோவா காண்பிக்கிறார்?
- இஸ்ரவேலர் யெகோவாவை மதிக்காததால், அவர் என்ன செய்யப் போவதாக சொல்கிறார்?
- தனக்கு விரோதமாய் இஸ்ரவேலர் கலகம் செய்தபின் நேபுகாத்நேச்சார் என்ன செய்கிறான்?
- இஸ்ரவேலருக்கு இந்தப் பயங்கர அழிவு வரும்படி யெகோவா ஏன் அனுமதிக்கிறார்?
- இஸ்ரவேல் தேசம் எப்படி வெறிச்சோடிப்போன இடமாக ஆகிறது, எவ்வளவு காலத்திற்கு அப்படிக் கிடக்கிறது?
கூடுதல் கேள்விகள்
- இரண்டு இராஜாக்கள் 25:1-26-ஐ வாசி.
(அ) சிதேக்கியா யார், அவருக்கு என்ன சம்பவித்தது, இது பைபிள்
தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றியது? (2 இரா. 25:5-7; எசே. 12:13-15)
(ஆ) இஸ்ரவேலர் செய்த தவறுக்காக யெகோவா யாரிடம் கணக்குக் கேட்டார்? (2 இரா. 25:9, 11, 12, 18, 19; 2 நா. 36: 14, 17)
- எசேக்கியேல் 8:1-18-ஐ வாசி.
சூரியனை வழிபட்ட விசுவாச துரோக இஸ்ரவேலரைக் கிறிஸ்தவமண்டலம் எப்படிப்
பின்பற்றியிருக்கிறது? (எசே. 8:16; ஏசா. 5:20, 21; யோவா. 3:19-21;
2 தீ. 4:3)
No comments:
Post a Comment