Thursday, 5 December 2013

யெகோவா சட்டங்களைக் கொடுக்கிறார்

யெகோவா சட்டங்களைக் கொடுக்கிறார்

எகிப்தை விட்டு வந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகின்றன, இப்போது இஸ்ரவேலர் சீனாய் மலையருகே வந்து சேருகிறார்கள். இது ஓரேப் என்றும் அழைக்கப்படுகிறது. எரிகிற புதரிலிருந்து மோசேயிடம் யெகோவா பேசின அதே இடம்தான் இது. இங்கே இந்த ஜனங்கள் கூடாரம் போட்டு கொஞ்ச காலம் தங்குகிறார்கள்.
மோசே மலையின் மேல் ஏறிப் போகிறார், ஜனங்களோ அவர் வரும் வரையில் கீழே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே மலை உச்சியில் மோசேயிடம் யெகோவா பேசுகிறார்; இஸ்ரவேலர் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் தம்முடைய சொந்த ஜனமாக ஆக வேண்டுமென்றும் தாம் விரும்புவதாக சொல்கிறார். மோசே கீழே வந்தபோது யெகோவா சொன்னதை இஸ்ரவேலருக்குச் சொல்கிறார். அவர்கள் யெகோவாவின் ஜனமாக ஆவதற்கு விரும்புவதாகவும் அவருக்குக் கீழ்ப்படிய விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.
யெகோவா இப்பொழுது ஒரு விநோதமான காரியத்தைச் செய்கிறார். மலை உச்சியில் புகை உண்டாகும்படி செய்கிறார், பயங்கரமான இடி முழக்கம் உண்டாகும்படியும் செய்கிறார். பிறகு அந்த ஜனத்தாரிடம் பேசுகிறார்: ‘எகிப்திலிருந்து உங்களைக் கொண்டு வந்திருக்கிற உன் கடவுளாகிய யெகோவா நானே’ என்று சொல்கிறார். பின்பு: ‘என்னைத் தவிர வேறு எந்தக் கடவுட்களையும் நீங்கள் வணங்கக் கூடாது’ என்று கட்டளையிடுகிறார். 

இரண்டு கற்பலகைகள்

இன்னும் ஒன்பது கட்டளைகளை, அதாவது சட்டங்களை இஸ்ரவேலருக்குக் கொடுக்கிறார். அந்த ஜனங்களோ மிகவும் பயப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மோசேயிடம்: ‘நீர் எங்களிடம் பேசும், கடவுள் எங்களிடம் பேசினால் நாங்கள் செத்துப்போய் விடுவோமோ என்று பயமாக இருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.
பிற்பாடு யெகோவா மோசேயிடம்: ‘நீ மலை மீதேறி என்னிடத்திற்கு வா. அங்கு நான் உனக்கு இரண்டு தட்டையான கற்களைக் கொடுப்பேன். இந்த ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களை அதில் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார். அதனால் மோசே மறுபடியுமாக மலைக்கு ஏறிச் செல்கிறார். இரவும் பகலும் நாற்பது நாட்கள் அங்கே தங்கியிருக்கிறார்.
கடவுள் தம்முடைய ஜனத்திற்கு ஏராளமான சட்டங்களை வைத்திருக்கிறார். மோசே இந்தச் சட்டங்களை எழுதுகிறார். அந்த இரண்டு தட்டையான கற்களையும் மோசேக்குக் கடவுள் கொடுக்கிறார். முழு ஜனத்தாரிடமும் தாம் கூறியிருந்த 10 சட்டங்களை அவரே அவற்றின் மீது எழுதியிருக்கிறார். இவை பத்துக் கட்டளைகள் என்று அழைக்கப்படுகின்றன. 

சீனாய் மலையில் மோசே

இந்தப் பத்துக் கட்டளைகள் எல்லாமே முக்கியமான சட்டங்கள். ஆனால் இஸ்ரவேலுக்கு இன்னும் பல சட்டங்களையும் கடவுள் கொடுக்கிறார். அவையும் முக்கியமானவையே. இந்தச் சட்டங்களில் ஒன்று: ‘உன் கடவுளாகிய யெகோவாவை நீ உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும்’ என்பதே. மற்றொன்று: ‘உன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நீ நேசிக்க வேண்டும்’ என்பதாகும். இவை தம்முடைய ஜனமான இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்த இரண்டு மிகப் பெரிய சட்டங்கள் என்று கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து சொன்னார். கடவுளுடைய குமாரனையும் அவருடைய போதனைகளையும் பற்றிய பல காரியங்களைப் பிறகு நாம் படிப்போம்.
யாத்திராகமம் 19:1-25; 20:1-21; 24:12-18; 31:18; உபாகமம் 6:4-6; லேவியராகமம் 19:18; மத்தேயு 22:36-40.


கேள்விகள்

  • எகிப்தைவிட்டு வெளியேறி ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரவேலர் எங்குக் கூடாரம் போடுகிறார்கள்?
  • ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்று தாம் விரும்புவதாக யெகோவா சொல்கிறார், அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
  • யெகோவா ஏன் இரண்டு தட்டையான கற்களை மோசேயிடம் கொடுக்கிறார்?
  • பத்துக் கட்டளைகளைத் தவிர வேறு என்ன சட்டங்களையும் இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுக்கிறார்?
  • என்ன இரண்டு சட்டங்களை மிகப் பெரிய சட்டங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்?

கூடுதல் கேள்விகள்

  • யாத்திராகமம் 19:1-25; 20:1-21; 24:12-18; 31:18-ஐ வாசி. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதில் என்னென்ன காரியங்கள் உட்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள யாத்திராகமம் 19:8 எவ்வாறு நமக்கு உதவுகிறது? (மத். 16:24; 1 பே. 4:1-3)
  • உபாகமம் 6:4-6; லேவியராகமம் 19:18; மத்தேயு 22:36-40-ஐ வாசி. கடவுளையும் அயலாரையும் நேசிப்பதைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள்? (மாற். 6:34; அப். 4:20; ரோ. 15:2)

No comments:

Post a Comment