யோசுவா தலைவர் ஆகிறார்
இஸ்ரவேலரோடு கானானுக்குள் செல்ல மோசே
விரும்புகிறார். அதனால், ‘யெகோவாவே, யோர்தான் நதியைக் கடந்து அந்த நல்ல
தேசத்தைப் பார்ப்பதற்காவது என்னை அனுமதியும்’ என்று கேட்கிறார். அதற்கு
யெகோவா: ‘போதும், அதைப் பற்றி என்னிடம் மறுபடியும் பேசாதே!’ என்று
சொல்கிறார். யெகோவா ஏன் அப்படிச் சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?
மோசே கற்பாறையை அடித்தபோது என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? மோசேயும்
ஆரோனும் யெகோவாவை மதிக்கவில்லை. கற்பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்தவர்
யெகோவாவே என்று அவர்கள் ஜனங்களுக்குச் சொல்லவில்லை. அதனால்தான் அவர்களைக்
கானானுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று யெகோவா சொன்னார்.
எனவே, ஆரோன் மரித்து சில மாதங்களுக்குப் பிறகு மோசேயிடம் யெகோவா: ‘யோசுவாவை
அழைத்து, ஆசாரியனான எலெயாசாருக்கும் ஜனங்களுக்கும் முன்பாக அவனை நிறுத்து.
அங்கே யோசுவாவே புதிய தலைவன் என்று அவர்களுக்குச் சொல்’ என்கிறார். யெகோவா
சொல்கிறபடியே மோசே செய்கிறார், அதைத்தான் நீ இந்தப் படத்தில்
பார்க்கிறாய்.
பின்பு யெகோவா யோசுவாவிடம்: ‘பயப்படாதே, தைரியமாயிரு. இஸ்ரவேலருக்கு
நான் வாக்குக் கொடுத்திருக்கிற கானான் தேசத்திற்குள் நீ அவர்களை
வழிநடத்துவாய், நான் உன்கூடவே இருப்பேன்’ என்று சொல்கிறார்.
![]() |
யோசுவாவை தலைவராக அறிவிக்கும் மோசே |
பிற்பாடு, மோவாப் தேசத்திலுள்ள நேபோ மலை மீது மோசேயை ஏறிப்போகச்
சொல்கிறார். அங்கிருந்து யோர்தான் நதிக்கு அப்பாலுள்ள அந்த அழகிய கானான்
தேசத்தை மோசேயினால் பார்க்க முடிகிறது. அப்போது அவரிடம் யெகோவா: ‘ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் பிள்ளைகளுக்குக் கொடுப்பதாக நான் வாக்கு
கொடுத்த தேசம் இதுதான், அதைப் பார்க்க இப்போது உன்னை அனுமதிக்கிறேன், ஆனால்
அதற்குள் செல்ல நான் உன்னை அனுமதிக்கப் போவதில்லை’ என்று சொல்கிறார்.
அந்த நேபோ மலையில் மோசே மரணமடைகிறார். அப்போது அவருக்கு வயது 120. அந்த
வயதிலும்கூட அவர் திடகாத்திரமாக இருந்தார், கண்ணும் நன்றாக தெரிந்தது. மோசே
மரித்துப் போனதால் ஜனங்கள் மிகவும் விசனப்பட்டு அழுகிறார்கள். என்றாலும்
யோசுவா தங்களுடைய புதிய தலைவராக இருப்பதில் சந்தோஷப்படுகிறார்கள்.
எண்ணாகமம் 27:12-23; உபாகமம் 3:23-29; 31:1-8, 14-23; 32:45-52; 34:1-12.
கேள்விகள்
- படத்தில் மோசேயுடன் நிற்கும் இரண்டு பேர் யார்?
- யோசுவாவிடம் யெகோவா என்ன சொல்கிறார்?
- நேபோ மலை மீது மோசே ஏன் ஏறிப்போகிறார், அங்கே அவரிடம் யெகோவா என்ன சொல்கிறார்?
- மோசே மரிக்கும்போது அவருக்கு எத்தனை வயது?
- ஜனங்கள் ஏன் விசனப்பட்டு அழுகிறார்கள், என்றாலும் அவர்கள் ஏன் பிறகு சந்தோஷப்படுகிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
- எண்ணாகமம் 27:12-23-ஐ வாசி.
யெகோவாவிடமிருந்து யோசுவா என்ன முக்கிய வேலையைப் பெற்றுக்கொண்டார், இன்று
தம் மக்களை யெகோவா எப்படிக் கவனித்து வருகிறார்? (எண். 27:15-19; அப்.
20:28; எபி. 13:7)
- உபாகமம் 3:23-29-ஐ வாசி.
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் மோசேயையும் ஆரோனையும் யெகோவா ஏன்
அனுமதிக்கவில்லை, இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (உபா.
3:25-27; எண். 20:12, 13)
- உபாகமம் 31:1-8, 14-23-ஐ வாசி.
யெகோவா கொடுத்த தண்டனையை மோசே தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார் என்பதை
மரிப்பதற்கு முன் இஸ்ரவேலரிடம் அவர் சொன்ன என்ன வார்த்தைகள் காட்டுகின்றன?
(உபா. 31:6-8, 23)
- உபாகமம் 32:45-52-ஐ வாசி. கடவுளுடைய வார்த்தை நம் வாழ்க்கையை எப்படிப் பாதிக்க வேண்டும்? (உபா. 32:47; லேவி. 16:5; எபி. 4:2)
- உபாகமம் 34:1-12-ஐ வாசி.யெகோவாவை மோசே நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும், இருவருக்கும் இடையே இருந்த பந்தத்தைப் பற்றி உபாகமம் 34:12 என்ன சொல்கிறது? (யாத். 33:11, 20; எண். 12:8)
No comments:
Post a Comment