யெப்தா செய்த சத்தியம்
![]() |
யெப்தாவின் மகள் |
ஏதோவொன்றை செய்வதாக நீ சத்தியம் பண்ணியிருக்கிறாயா? பிற்பாடு அதை
நிறைவேற்ற முடியாதது போல உணர்ந்திருக்கிறாயா? இந்தப் படத்திலுள்ள மனிதர்
அப்படித்தான் உணர்ந்தார். அதனால்தான் இவ்வளவு சோகமாக இருக்கிறார். இவர்
பெயர் யெப்தா. இஸ்ரவேலின் தைரியமுள்ள ஒரு நியாயாதிபதி.
இஸ்ரவேலர்
யெகோவாவை வணங்காதிருக்கிற ஒரு காலத்தில் வாழ்கிறவர்தான் யெப்தா. அவர்கள்
மறுபடியும் கெட்ட காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்
அவர்களுக்குத் தீங்கு செய்ய அம்மோன் தேசத்தாரை யெகோவா அனுமதிக்கிறார்.
கஷ்டம் வந்ததுமே இஸ்ரவேலர் யெகோவாவை நோக்கி கூப்பிடுகிறார்கள்: ‘உமக்கு
விரோதமாக நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். தயவுசெய்து எங்களைக்
காப்பாற்றும்!’ என்று கெஞ்சுகிறார்கள்.
![]() |
யெப்தாவும் அவருடைய மனிதர்களும் |
தாங்கள் செய்த கெட்ட காரியங்களுக்காக இஸ்ரவேலர் மனம் வருந்துகிறார்கள்.
மீண்டும் யெகோவாவை வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு யெகோவா
மறுபடியும் உதவுகிறார்.
அந்தக் கெட்ட அம்மோனியருடன் போர் செய்ய
யெப்தாவை ஜனங்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தப் போரில் வெற்றி பெற
யெகோவாவின் உதவி யெப்தாவுக்கு மிகவும் தேவைப்பட்டது. அதனால் அவர் யெகோவாவை
நோக்கி, ‘அம்மோனியர் மீது நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால், நான் வீடு
திரும்பும்போது என் வீட்டிலிருந்து என்னை வரவேற்க வருகிற முதல் நபரை உமக்கு
அர்ப்பணிப்பேன்’ என்று சத்தியம் செய்கிறார்.
யெப்தா செய்த
சத்தியத்தை யெகோவா கேட்கிறார். அவர் வெற்றி பெற உதவி செய்கிறார். யெப்தா
வீட்டுக்குத் திரும்பி வருகையில், அவரை வரவேற்க முதலில் வெளியே வருவது யார்
தெரியுமா? அவருடைய ஒரே மகள். ‘ஐயோ, என் மகளே!’ என்று யெப்தா கதறுகிறார்.
‘எனக்கு இப்படியொரு வேதனையை ஏற்படுத்தி விட்டாயே! நான் யெகோவாவிடம்
சத்தியம் செய்து விட்டேன், அதை என்னால் இனி மாற்ற முடியாது’ என்று
சொல்கிறார்.
யெப்தாவின் மகள் அந்தச் சத்தியத்தைப் பற்றி தெரிந்து
கொண்டபோது முதலில் வருத்தப்படுகிறாள். ஏனென்றால் தன் தகப்பனையும்
தோழிகளையும் விட்டுப் பிரிய வேண்டியிருக்குமே. என்றாலும், சீலோவிலிருக்கிற
ஆசரிப்புக் கூடாரத்தில் யெகோவாவுக்கு வாழ்நாளெல்லாம் சேவை செய்ய முடியும்
என்பதை நினைத்துப் பார்க்கிறாள். பிறகு தன் அப்பாவைப் பார்த்து:
‘யெகோவாவுக்கு நீங்கள் சத்தியம் செய்திருந்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற
வேண்டும்’ என்று கூறுகிறாள்.
அதன் பின், யெப்தாவின் மகள்
சீலோவுக்குப் போகிறாள். அங்கே யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில்
வாழ்நாளெல்லாம் அவருக்குச் சேவை செய்கிறாள். ஒவ்வொரு வருடமும் நான்கு
நாட்கள் இஸ்ரவேல் பெண்கள் அவளைப் பார்க்க போகிறார்கள், அவளுடன் சந்தோஷமாக
பொழுதைக் கழிக்கிறார்கள். யெப்தாவின் மகளை ஜனங்கள் மிகவும்
நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவள் யெகோவாவின் அருமையான ஊழியக்காரியாக
இருக்கிறாள்.
நியாயாதிபதிகள் 10:6-18; 11:1-40.
கேள்விகள்
- யெப்தா யார், அவர் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்?
- யெகோவாவிடம் யெப்தா என்ன சத்தியம் செய்கிறார்?
- அம்மோனியரிடம் வெற்றி பெற்று வீடு திரும்பியதும் யெப்தா ஏன் வேதனையடைகிறார்?
- யெப்தா செய்த சத்தியத்தைப் பற்றி அறிந்துகொண்ட அவருடைய மகள் என்ன சொல்கிறாள்?
- யெப்தாவின் மகளை ஜனங்கள் ஏன் நேசிக்கிறார்கள்?
கூடுதல் கேள்விகள்
- நியாயாதிபதிகள் 10:6-18-ஐ வாசி.
யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக நடந்த இஸ்ரவேலரிடமிருந்து நாம் என்ன
எச்சரிப்பைப் பெறுகிறோம்? (நியா. 10:6, 15, 16; ரோ. 15:4; வெளி. 2:10)
- நியாயாதிபதிகள் 11:1-11, 29-40-ஐ வாசி.
(அ) யெப்தா தன் மகளை ‘சர்வாங்க தகனபலியாகக்’ கொடுத்தது ஒரு நரபலியாக
தீயில் போடுவதை அர்த்தப்படுத்தவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
(நியா. 11:31; லேவி. 16:24; உபா. 18:10, 12)
(ஆ) எந்த விதத்தில் யெப்தா தன் மகளை ஒரு பலியாக அளித்தார்?
(இ) யெகோவாவுக்குப் பொருத்தனை செய்த விஷயத்தில் யெப்தா காட்டிய மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நியா. 11:35, 39; பிர. 5:4, 5; மத். 16:24)
(ஈ) முழுநேர ஊழியம் செய்ய விரும்பும் இளம் கிறிஸ்தவர்களுக்கு யெப்தாவின் மகள் எப்படிச் சிறந்த மாதிரியாக இருக்கிறாள்? (நியா. 11:36; மத். 6:33; பிலி. 3:8)
No comments:
Post a Comment