Monday, 9 December 2013

நோயுற்றவர்களை இயேசு சுகப்படுத்துகிறார்

நோயுற்றவர்களை இயேசு சுகப்படுத்துகிறார்

இஸ்ரவேல் தேசம் முழுக்க இயேசு பயணம் செய்கிறார், அப்போது நோயுற்றவர்களை அவர் சுகப்படுத்துகிறார். இந்த அற்புதங்களைப் பற்றிய செய்தி சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் பரவுகிறது. அதனால் குருடர்கள், செவிடர்கள், நொண்டிகள், பிணியாளிகள் ஏராளமானோரை ஜனங்கள் அவரிடம் கொண்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு சுகப்படுத்துகிறார்.
இயேசுவை யோவான் முழுக்காட்டி இப்போது மூன்று வருஷங்களுக்கு மேலாகிறது. இயேசு தாம் சீக்கிரத்தில் எருசலேமுக்குப் போவார் என்றும், அங்கே தாம் கொல்லப்படுவார் என்றும், பிறகு உயிர்த்தெழுப்பப்படுவார் என்றும் அப்போஸ்தலரிடம் சொல்கிறார். இதற்கிடையில், நோயுற்றவர்களைத் தொடர்ந்து சுகப்படுத்தி வருகிறார். 
வியாதியாயிருக்கும் ஒரு பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார்
வியாதியாயிருக்கும் ஒரு பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார்

ஒரு சமயம் ஓய்வுநாளன்று இயேசு கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஓய்வுநாள் என்பது யூதர்கள் ஓய்வெடுக்கும் நாள். இங்கே நீ பார்க்கிற இந்தப் பெண்ணுக்கு ரொம்பவே உடம்பு சரியில்லை. 18 வருஷங்களாக கூன் விழுந்து நிமிர்ந்து நிற்க முடியாமல் கஷ்டப்படுகிறாள். அதனால் இயேசு தம்முடைய கைகளை அவள் மேல் வைக்கிறார். உடனடியாக அவள் நிமிர்ந்து நிற்கத் தொடங்குகிறாள். ஆம், அவள் சுகமடைந்து விடுகிறாள்!
இதைப் பார்த்த அந்த மதத் தலைவர்களுக்குப் பயங்கர கோபம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒருவன்: ‘நாம் வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில்தான் சுகப்படுத்த வேண்டும், ஓய்வுநாளில் அல்ல!’ என்று கூட்டத்தைப் பார்த்து சத்தம் போடுகிறான்.
அதற்கு இயேசு: ‘கெட்ட ஆட்களே, ஓய்வுநாளில் நீங்கள் எவருமே உங்கள் கழுதையை அவிழ்த்துக் கொண்டுபோய் அதற்குத் தண்ணீர் காட்ட மாட்டீர்களா? அப்படியிருக்கும்போது, 18 வருஷங்களாக நோயுற்றிருக்கிற இந்த ஏழை பெண்ணை ஓய்வுநாளில் சுகப்படுத்தக் கூடாதா?’ என்று கேட்கிறார். இயேசு இப்படிக் கேட்டது இந்தக் கெட்ட ஆட்களைத் தலைகுனிய வைக்கிறது.
பின்னர் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எருசலேமுக்குக் கிளம்புகிறார்கள். அவர்கள் எரிகோ பட்டணத்திற்குச் சற்று வெளியே இருக்கையில், இயேசு அவ்வழியாக போய்க் கொண்டிருப்பதைக் குருடரான இரண்டு பிச்சைக்காரர்கள் கேள்விப்படுகிறார்கள். அதனால், ‘இயேசுவே எங்களுக்கு உதவி செய்யும்!’ என்று சப்தமாக கூப்பிடுகிறார்கள்.
இயேசு அந்தக் குருடர்களை அழைத்து: ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார். அதற்கு அவர்கள்: ‘கர்த்தரே, எங்கள் கண்கள் திறக்கும்படி செய்யும்’ என்கிறார்கள். இயேசு அவர்களுடைய கண்களைத் தொடுகிறார், உடனடியாக அவர்களுக்குப் பார்வை வந்துவிடுகிறது! இயேசு ஏன் இந்த அற்புதங்களைச் செய்கிறார் என்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர் ஜனங்களை நேசிக்கிறார், தம்மீது அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதனால் அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது பூமியில் யாருக்குமே எந்த நோயும் வராதென்று நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
மத்தேயு 15:30, 31; லூக்கா 13:10-17; மத்தேயு 20:29-34.


கேள்விகள்

  • இஸ்ரவேல் தேசம் முழுக்க பிரயாணம் செய்கையில் இயேசு என்ன செய்கிறார்?
  • இயேசு முழுக்காட்டப்பட்டு ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு சீஷர்களிடம் அவர் என்ன சொல்கிறார்?
  • இந்தப் படத்திலுள்ள ஆட்கள் யார், இந்தப் பெண்ணுக்கு இயேசு என்ன செய்கிறார்?
  • மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போதெல்லாம் இயேசு கொடுக்கிற பதில் அவர்களை ஏன் தலைகுனிய வைக்கிறது?
  • இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எரிகோவுக்கு அருகே இருக்கையில் குருடரான இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இயேசு என்ன செய்கிறார்?
  • இயேசு ஏன் அற்புதங்களைச் செய்கிறார்?

கூடுதல் கேள்விகள்

  • மத்தேயு 15:30, 31-ஐ வாசி. யெகோவாவுடைய வல்லமையை என்ன அருமையான விதத்தில் இயேசு வெளிக்காட்டினார், புதிய உலகைப் பற்றி யெகோவா கொடுத்துள்ள வாக்குறுதியை நாம் நன்கு புரிந்துகொள்வதற்கு இது எப்படி உதவுகிறது? (சங். 37:29; ஏசா. 33:24)
  • லூக்கா 13:10-17-ஐ வாசி. ஓய்வுநாளில் இயேசு குறிப்பிடத்தக்க சில அற்புதங்களைச் செய்தது, அவருடைய ஆயிர வருட ஆட்சியில் மனிதகுலத்திற்கு அளிக்கப்போகும் பரிகாரத்தை எவ்விதத்தில் காட்டுகிறது? (லூக். 13:10-13; சங். 46:9; மத். 12:8; கொலோ. 2:16, 17; வெளி. 21:1-4)
  • மத்தேயு 20:29-34-ஐ வாசி. ஜனங்களுக்கு உதவி செய்ய முடியாதளவுக்கு இயேசு எப்போதுமே ரொம்ப வேலையாக இருக்கவில்லை என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (உபா. 15:7; யாக். 2:15, 16; 1 யோ. 3:17)

No comments:

Post a Comment