தாவீதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்
இங்கே என்ன நடந்திருக்கிறதென்று உனக்குத் தெரிகிறதா? அந்தப் பையன்
கரடியிடமிருந்து இந்த ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றியிருக்கிறான். கரடி இந்த
ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போய் அதைச் சாப்பிடப் பார்த்தது. ஆனால்
அதற்குள் அந்தப் பையன் பின்னால் ஓடிப்போய் கரடியின் வாயிலிருந்து
ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றினான். பிறகு, அந்தக் கரடி தாக்க வந்தபோது அவன்
அதை அடித்துக் கொன்றே போட்டான்! மற்றொரு சமயத்தில் சிங்கத்திடமிருந்து ஒரு
செம்மறியாட்டை காப்பாற்றினான். நிச்சயமாகவே இவன் ஒரு தைரியசாலி இல்லையா?
இவன் யார் தெரியுமா?
இவன்தான் தாவீது. இவன் பெத்லெகேம்
பட்டணத்தில் வாழ்கிறான். ரூத்துக்கும் போவாஸுக்கும் பிறந்த ஓபேத் என்பவர்
இவனுடைய தாத்தா. இவர்களை உனக்கு நினைவிருக்கிறதா? தாவீதின் அப்பா பெயர்
ஈசாய். தன் அப்பாவின் செம்மறியாடுகளை தாவீது கவனித்து வருகிறான். சவுலை
ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்து 10 ஆண்டுகளுக்குப் பின்பே தாவீது பிறந்தான்.
![]() |
ஓர் ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றும் தாவீது |
குறிப்பிட்ட ஒரு காலம் வருகிறபோது யெகோவா சாமுவேலிடம்: ‘நீ
கொஞ்சம் விசேஷ எண்ணெய்யை எடுத்துக்கொண்டு பெத்லெகேமில் இருக்கும் ஈசாயின்
வீட்டுக்குப் போ. அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாக
தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். ஈசாயின் மூத்த மகன் எலியாபை
சாமுவேல் பார்த்ததும்: ‘நிச்சயம் இவனைத்தான் யெகோவா
தேர்ந்தெடுத்திருக்கிறார்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொள்கிறார். ஆனால்
யெகோவா அவரிடம்: ‘அவனுடைய உயரத்தையும் கம்பீரமான தோற்றத்தையும் பார்க்காதே.
ராஜாவாக இருப்பதற்கு நான் அவனைத் தேர்ந்தெடுக்கவில்லை’ என்று சொல்கிறார்.
எனவே, அபினதாபை சாமுவேலிடம் ஈசாய் அழைத்து வருகிறார். ஆனால் சாமுவேல்:
‘இல்லை, இவனையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை’ என்று சொல்கிறார். அடுத்து,
தன்னுடைய இன்னொரு மகன் சம்மாவை அழைத்து வருகிறார். ‘இல்லை, இவனையும்கூட
யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை’ என்று சாமுவேல் சொல்கிறார். ஈசாய் தன்னுடைய
மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கூட்டிக்கொண்டு வருகிறார்,
என்றாலும் அவர்களில் எவரையும் யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை. ‘உனக்கு இவ்வளவு
மகன்கள்தான் இருக்கிறார்களா?’ என்று சாமுவேல் கேட்கிறார்.
‘இல்லை, இன்னும் ஒரு மகன் இருக்கிறான், அவன் எல்லோரையும்விட இளையவன், அவன்
வெளியே ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஈசாய் சொல்கிறார்.
தாவீதை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தபோது, அவன் அழகாக இருப்பதை சாமுவேல்
பார்க்கிறார். ‘இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவன் தலையில்
எண்ணெயை ஊற்று’ என்று யெகோவா சொல்கிறார். ஆம், காலம் வரும்போது தாவீது
இஸ்ரவேலின் ராஜாவாக ஆவான்.
1 சாமுவேல் 17:34, 35; 16:1-13.
கேள்விகள்
- படத்திலுள்ள அந்தப் பையனின் பெயர் என்ன, அவன் ஒரு தைரியசாலி என்று நமக்கு எப்படித் தெரியும்?
- தாவீது எங்கு வாழ்கிறான், அவனுடைய அப்பா மற்றும் தாத்தாவின் பெயர் என்ன?
- பெத்லகேமிலுள்ள ஈசாயின் வீட்டிற்குப் போகும்படி சாமுவேலிடம் யெகோவா ஏன் சொல்கிறார்?
- ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலிடம் கூட்டிக்கொண்டு வரும்போது என்ன நடக்கிறது?
- தாவீதை உள்ளே அழைத்து வந்ததும் சாமுவேலிடம் யெகோவா என்ன சொல்கிறார்?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று சாமுவேல் 17:34, 35-ஐ வாசி.
தாவீதின் தைரியத்தையும் யெகோவா மீது அவர் சார்ந்திருந்ததையும் இந்தச்
சம்பவங்கள் எப்படிச் சிறப்பித்துக் காட்டுகின்றன? (1 சா. 17:37)
- ஒன்று சாமுவேல் 16:1-14-ஐ வாசி.
(அ) 1 சாமுவேல் 16:7-ல் உள்ள யெகோவாவின் வார்த்தைகள் பட்சபாதம்
காட்டாதிருப்பதற்கும் வெளித்தோற்றத்தைப் பார்த்து தப்புக்கணக்கு
போடாதிருப்பதற்கும் நமக்கு எப்படி உதவுகின்றன? (அப். 10:34, 35; 1 தீ. 2:4)
(ஆ) யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை ஒருவரிடமிருந்து நீக்கும்போது கெட்ட ஆவி, அதாவது கெட்டதைச் செய்யும் உந்துதல் அந்த வெற்றிடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதை சவுலின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (1 சா. 16:14; மத். 12:43-45; கலா. 5:16)
No comments:
Post a Comment