எரிகிற புதர்
ஆடுகளுக்குப் புல்லைத் தேடித் தேடி ஓரேப் மலை
வரை மோசே வந்துவிட்டிருந்தார். நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு
புதரை அவர் அங்கே பார்த்தார், ஆனால் அது கருகியே போகவில்லை!
![]() |
எரிகிற புதருக்கு அருகில் மோசே |
‘என்ன இது அதிசயமாய் இருக்கிறதே, கிட்டப் போய் நன்றாகப் பார்க்கப்
போகிறேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். அப்படி அவர் கிட்டே போனபோது
புதரிலிருந்து ஒரு குரல் வந்தது: ‘அங்கேயே நில், இன்னும் கிட்டே வராதே. உன்
செருப்புகளைக் கழற்றிப் போடு, ஏனென்றால் நீ நிற்கிற இடம் புனிதமானது.’
ஆம், ஒரு தூதன் மூலமாக கடவுள்தான் பேசிக்கொண்டிருந்தார், அப்போது மோசே தன்
முகத்தை மூடிக் கொண்டார்.
பின்பு கடவுள்: ‘எகிப்தில் என் ஜனம்
படுகிற கஷ்டத்தைப் பார்த்தேன். அதனால் அவர்களை நான் விடுவிக்கப் போகிறேன்.
என் ஜனத்தை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர நான் உன்னைத்தான் அனுப்பப்
போகிறேன்’ என்று சொன்னார். யெகோவா தம்முடைய ஜனத்தை அழகிய தேசமான
கானானுக்குக் கொண்டு செல்ல விரும்பினார்.
ஆனால் மோசே: ‘நான் ஒரு
சாதாரண ஆள். இதை என்னால் எப்படிச் செய்ய முடியும்? அப்படியே நான் போனாலும்
“உன்னை யார் அனுப்பியது?” என்று இஸ்ரவேலர் என்னைக் கேட்பார்கள். அதற்கு
நான் என்ன சொல்வது?’ என்று கேட்டார்.
அதற்கு, ‘ஆபிரகாமின்
கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான யெகோவா என்னை
உங்களிடம் அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்’ என்று கடவுள்
பதிலளித்தார். பிறகு ‘என்றென்றும் இதுவே என் பெயர்’ என்று சொன்னார்.
‘ஆனால், நீர்தான் என்னை அனுப்பினீர் என்பதை அவர்கள் நம்பாவிட்டால் என்ன செய்வது?’ என்று மோசே கேட்டார்.
அதற்கு, ‘உன் கையில் என்ன இருக்கிறது?’ என்று கடவுள் திரும்பக் கேட்டார்.
‘ஒரு கோல் இருக்கிறது’ என்று மோசே பதிலளித்தார்.
‘அதைக் கீழே போடு’ என்றார். கடவுள் சொன்னபடியே மோசே அதைக் கீழே போட்டார்,
உடனே அந்தக் கோல் ஒரு பாம்பாக மாறியது. பின்பு யெகோவா மற்றொரு அற்புதத்தைக்
காட்டினார். ‘உன் கையை உன் அங்கிக்குள் வை’ என்றார். மோசே அப்படியே
செய்தார். அவர் தன் கையை வெளியில் எடுத்தபோது அது வெள்ளை வெளேரென்று
இருந்தது! குஷ்டம் என சொல்லப்படுகிற மோசமான ஒரு வியாதி வந்திருப்பது போல்
தெரிந்தது. அடுத்தபடியாக மூன்றாவது ஒரு அற்புதத்தைச் செய்வதற்கான வல்லமையை
மோசேக்கு யெகோவா கொடுத்தார். கடைசியாக அவர்: ‘இந்த அற்புதங்களையெல்லாம் நீ
செய்கையில் நான்தான் உன்னை அனுப்பினேன் என்று இஸ்ரவேலர் நம்புவார்கள்’
என்று சொன்னார்.
அதன் பிறகு, மோசே வீட்டுக்குப் போய்
எத்திரோவிடம்: ‘எகிப்தில் என் சொந்தக்காரர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று
பார்த்துவர தயவுசெய்து என்னை அனுமதியும்’ என்று கேட்டார்.
கேட்டுக்கொண்டபடியே, எத்திரோ அனுமதியளித்தார், பிறகு மோசே எகிப்துக்குப்
புறப்பட்டுப் போனார்.
யாத்திராகமம் 3:1-22; 4:1-20.
கேள்விகள்
- படத்தில் பார்க்கிற மலையின் பெயர் என்ன?
- ஆடுகளைக் கூட்டிக்கொண்டு மோசே அந்த மலை வரை போனபோது என்ன அதிசயத்தைப் பார்த்தாரென்று விவரமாகச் சொல்.
- எரிகிற அந்தப் புதரிலிருந்து வந்த குரல் என்ன சொன்னது, அது யாருடைய குரல்?
- தமது ஜனத்தை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டுமென கடவுள் சொன்னபோது மோசே என்ன பதிலளித்தார்?
- தன்னை யார் அனுப்பியது என ஜனங்கள் கேட்டால் என்ன சொல்லும்படி மோசேயிடம் கடவுள் சொன்னார்?
- கடவுளே தன்னை அனுப்பினார் என்பதை மோசே எப்படி நிரூபித்துக் காட்டுவார்?
கூடுதல் கேள்விகள்
- யாத்திராகமம் 3:1-22-ஐ வாசி.
கடவுளுடைய அமைப்பில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம்
தகுதியற்றவர்களாக உணர்ந்தாலும்கூட யெகோவா நமக்குப் பக்கபலமாக இருப்பார்
என்பதற்கு மோசேயின் அனுபவம் எப்படி உறுதியளிக்கிறது? (யாத். 3:11, 13;
2 கொ. 3:5, 6)
- யாத்திராகமம் 4:1-20-ஐ வாசி. (அ)
மீதியான் தேசத்தில் 40 வருடங்களைக் கழித்தபோது மோசேயின் மனநிலையில் என்ன
மாற்றம் ஏற்பட்டது, சபையில் சிலாக்கியங்களைப் பெறுவதற்கு முயற்சி
செய்பவர்கள் இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (யாத். 2:11,
12; 4:10, 13; மீ. 6:8; 1 தீ. 3:1, 6, 10)
(ஆ) யெகோவாவின் அமைப்பு மூலம் நாம் சிட்சிக்கப்பட்டாலும்கூட மோசேயின் உதாரணம் நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது? (யாத். 4:12-14; சங். 103:104; எபி. 12:4-11)
No comments:
Post a Comment