ஒவ்வொரு வருஷமாக கடந்து சென்று
கொண்டிருக்கிறது—10 வருஷம், 20 வருஷம், 30 வருஷம், 39 வருஷம் கடந்து சென்று
விடுகிறது! இஸ்ரவேலர் இன்னும் வனாந்தரத்தில் இருக்கிறார்கள். என்றாலும்,
இத்தனை வருஷங்களாக யெகோவா தம் ஜனத்தைக் காத்து வந்திருக்கிறார். மன்னாவைக்
கொடுத்து அவர்களைப் போஷித்திருக்கிறார். பகலில் தூண் போன்ற மேகத்தைக்
கொண்டும் இரவில் தூண் போன்ற நெருப்பைக் கொண்டும் அவர்களை
வழிநடத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இத்தனை வருஷங்களில் அவர்களுடைய
உடைகள் கிழிந்து போகவேயில்லை, அவர்களுடைய பாதங்களும் வீங்கிப் போகவில்லை.
எகிப்தை விட்டு வந்ததிலிருந்து கணக்கிட்டால், இது 40-வது வருஷத்தின் முதல்
மாதம். இஸ்ரவேலர் மறுபடியும் காதேசில் கூடாரம் போட்டுத் தங்குகிறார்கள்.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன் கானான் தேசத்தை வேவு பார்க்க 12
வேவுகாரர்கள் அனுப்பப்பட்டபோது இஸ்ரவேலர் இந்த இடத்தில்தான் இருந்தார்கள்.
மோசேயின் அக்கா மிரியாம் காதேசில் இறந்து விடுகிறாள். முன்பு போலவே
இங்கேயும் ஒரு பிரச்சினை எழும்புகிறது.
ஜனங்களுக்குத் தண்ணீர்
கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் மோசேயிடம், ‘நாங்கள் செத்துப்போயிருந்தால்
எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். எகிப்திலிருந்து இந்தப் பயங்கரமான
இடத்திற்கு எங்களை ஏன் கொண்டு வந்தீர்? இங்கு ஒன்றுமே இல்லை.
தானியமுமில்லை, அத்திப் பழங்களும் இல்லை, திராட்சப் பழங்களும் இல்லை,
மாதுளம் பழங்களுமில்லை, குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லை’ என்று
முறுமுறுக்கிறார்கள்.
மோசே கற்பாறையை அடிக்கிறார்
மோசேயும் ஆரோனும் இதைக் குறித்து விண்ணப்பம் செய்ய ஆசரிப்புக்
கூடாரத்திற்குப் போகும்போது, யெகோவா: ‘இந்த ஜனங்களை ஒன்றாகக் கூடிவரச்
செய். பின்பு அவர்கள் எல்லோருக்கும் முன்பு அங்கே இருக்கிற கற்பாறையைப்
பார்த்துப் பேசு. அப்போது ஜனங்களுக்கும் அவர்களுடைய எல்லா மிருகங்களுக்கும்
போதுமான தண்ணீர் அதிலிருந்து வரும்’ என்று மோசேயிடம் சொல்கிறார்.
அதனால் மோசே ஜனங்களைக் கூடிவரச் செய்து: ‘கடவுளை நம்பாத ஜனங்களே
கேளுங்கள்! ஆரோனும் நானும் இந்தக் கற்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர்
வரவழைக்க வேண்டுமா?’ என்கிறார். பின்பு மோசே ஒரு கோலினால் அந்தக் கற்பாறையை
இரண்டு முறை அடிக்கிறார், அந்தக் கற்பாறையிலிருந்து பெரும் ஓடையாகத்
தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. எல்லா ஜனங்களும் மிருகங்களும் குடிப்பதற்குப்
போதிய தண்ணீர் கிடைக்கிறது.
ஆனால், மோசேயையும் ஆரோனையும் பார்த்து யெகோவா கோபப்படுகிறார். ஏன் தெரியுமா? ஏனென்றால் மோசேயும் ஆரோனும் அந்தக் கற்பாறையிலிருந்து தாங்கள்
தண்ணீரை வரவழைக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் யெகோவாதான் அதைச்
செய்திருந்தார். இந்த உண்மையை மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் சொல்லவில்லை,
அதனால் அவர்களைத் தண்டிக்கப் போவதாக யெகோவா சொல்கிறார். ‘நீங்கள் என்
ஜனத்தைக் கானான் தேசத்திற்குள் வழிநடத்திப்போக மாட்டீர்கள்’ என்று அவர்
சொல்கிறார்.
சீக்கிரத்தில் இஸ்ரவேலர் காதேசை விட்டுச்
செல்கிறார்கள். கொஞ்ச காலத்திற்குப் பின் ‘ஓர்’ என்ற மலைக்கு வந்து
சேருகிறார்கள். இங்கே, மலை உச்சியில் ஆரோன் இறந்துவிடுகிறார். அப்போது
அவருக்கு வயது 123. இஸ்ரவேலர் மிகவும் விசனப்படுகிறார்கள், 30 நாட்கள்
அவருக்காக ஜனங்கள் எல்லோரும் அழுகிறார்கள். ஆரோனுடைய மகன் எலெயாசார்,
இஸ்ரவேல் ஜனத்தின் அடுத்த பிரதான ஆசாரியனாகிறார்.
எண்ணாகமம் 20:1-13, 22-29; உபாகமம் 29:5; நெகேமியா 9:21.
கேள்விகள்
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருக்கும்போது அவர்களை யெகோவா எப்படிக் காத்து வருகிறார்?
No comments:
Post a Comment