திரளான ஜனங்களுக்கு இயேசு உணவளிக்கிறார்
பயங்கரமான ஒரு சம்பவம் நடந்துவிட்டது. ஆம்,
முழுக்காட்டுபவனாகிய யோவான் கொலை செய்யப்பட்டுவிட்டார்! ராஜாவின் மனைவி
ஏரோதியாளுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அதனால் ராஜாவைப் பயன்படுத்தி,
யோவானின் தலையை வெட்டச் செய்துவிட்டாள்.
இதைக் கேள்விப்பட்ட இயேசு
மிகவும் கவலைப்படுகிறார். தன்னந்தனியாக ஓர் இடத்திற்குப் போகிறார். ஆனால்
ஜனங்கள் அவரைப் பின்தொடருகிறார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்து இயேசு
மனதுருகுகிறார். அதனால் அவர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி
பேசுகிறார், நோயுற்றவர்களைச் சுகப்படுத்துகிறார்.
அந்தச் சாயங்கால
வேளையில் அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து: ‘ஏற்கெனவே ரொம்ப நேரமாகி
விட்டது, ஆள் நடமாட்டமில்லாத இடமாய் வேறு இருக்கிறது. அதனால் பக்கத்திலுள்ள
கிராமங்களுக்குச் சென்று ஏதாவது சாப்பாடு வாங்கிக்கொள்வதற்கு இந்த ஜனங்களை
அனுப்பிவிடுங்கள்’ என்று சொல்கிறார்கள்.
அதற்கு இயேசு: ‘அவர்கள் போக வேண்டாம், சாப்பிட நீங்களே ஏதாவது
அவர்களுக்குக் கொடுங்கள்’ என்கிறார். பிறகு, பிலிப்புவிடம் திரும்பி: ‘இந்த
ஜனங்கள் எல்லோருக்கும் சாப்பிட கொடுக்க நாம் எங்கே போய் உணவு வாங்கலாம்?’
என்று கேட்கிறார்.
‘ஆளுக்கு கொஞ்ச உணவு வாங்குவதற்குக்கூட
எக்கச்சக்கமான பணம் வேண்டியிருக்குமே’ என்று பிலிப்பு பதிலளிக்கிறார்.
‘இதோ, இந்தப் பையனிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் இருக்கின்றன.
ஆனால் இது எல்லா ஜனங்களுக்கும் போதாதே’ என்று அந்திரேயா சொல்கிறார்.
‘ஜனங்களைப் புல் தரையில் உட்காரச் சொல்லுங்கள்’ என்று இயேசு கூறுகிறார்.
பிறகு, உணவுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைத் துண்டு துண்டாகப்
பிய்க்கிறார். அடுத்து, சீஷர்கள் அந்த ரொட்டியையும் மீனையும் எல்லா
ஜனங்களுக்கும் கொடுக்கிறார்கள். அங்கே 5,000 ஆண்களும் இன்னும் பல
ஆயிரக்கணக்கான பெண்களும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும்
வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டது போக மீதி 12 கூடைகள்
சேர்க்கப்படுகின்றன!
இப்போது படகில் ஏறி கலிலேயா கடலுக்கு அப்பால்
செல்லும்படி இயேசு தமது சீஷர்களிடம் சொல்கிறார். அவர்கள் பயணம் செய்து
கொண்டிருக்கும்போது, இரவில் ஒரு பெரிய புயல் வீசத்தொடங்குகிறது, அலைகள்
அந்தப் படகை இப்படியும் அப்படியும் தூக்கிப் போடுகின்றன. சீஷர்கள்
ரொம்பவும் பயந்து விடுகிறார்கள். அப்போது நடு ஜாமத்தில், யாரோ தங்களை
நோக்கி தண்ணீர் மேல் நடந்து வருவதைப் பார்க்கிறார்கள். பயத்தில்
அலறுகிறார்கள், ஏனென்றால் தாங்கள் பார்க்கிறது என்னவென்று அவர்களுக்குத்
தெரியவில்லை.
![]() |
இயேசு ஒரு கூட்டத்திற்கு உணவளிக்கிறார் |
‘பயப்படாதிருங்கள், நான்தான்!’ என்று இயேசு
சொல்கிறார். அவர் அப்படிச் சொல்லியும் அவர்களால் நம்ப முடியவில்லை. அதனால்
பேதுரு: ‘கர்த்தரே, இது உண்மையில் நீர்தான் என்றால், தண்ணீர் மேல் நான்
நடந்து உம்மிடத்தில் வரும்படி சொல்லும்’ என்கிறார். அதற்கு இயேசு, ‘வா!’
என்று கூப்பிடுகிறார். பேதுரு படகிலிருந்து இறங்கி தண்ணீர் மேல்
நடக்கிறார்! அப்படி நடக்கும்போது திடீரென அவருக்குப் பயமுண்டாகி தண்ணீரில்
மூழ்க ஆரம்பிக்கிறார், ஆனால் இயேசு அவரைக் காப்பாற்றி விடுகிறார்.
பிற்பாடு, இயேசு மறுபடியும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு உணவளிக்கிறார்.
இந்தச் சமயத்தில் அவர் ஏழு ரொட்டிகளையும் சில சிறிய மீன்களையும் வைத்து
அவ்வாறு உணவளிக்கிறார். மறுபடியும் எல்லோருக்கும் ஏராளமான உணவு
கிடைக்கிறது. இயேசு எவ்வளவு நன்றாக மக்களைக் கவனிக்கிறார் அல்லவா?
அப்படியானால், கடவுளுடைய ராஜ்யத்தில் அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது
எதைப் பற்றியுமே நாம் கவலைப்பட வேண்டியிருக்காது!
மத்தேயு 14:1-32; 15:29-38; யோவான் 6:1-21.
கேள்விகள்
- முழுக்காட்டுபவரான யோவானுக்கு என்ன பயங்கரமான சம்பவம் நடந்துவிட்டது, அதைக் குறித்து இயேசு எப்படி உணருகிறார்?
- தம்மைப் பின்தொடர்ந்து வந்தோருக்கு இயேசு எப்படி உணவளிக்கிறார், மீதி எவ்வளவு உணவு சேர்க்கப்படுகிறது?
- இரவில் சீஷர்கள் ஏன் பயப்படுகிறார்கள், பேதுருவுக்கு என்ன ஆகிறது?
- இரண்டாம் தடவை இயேசு எப்படி ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கிறார்?
- கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவாக இயேசு பூமியை ஆளும்போது அந்த ஆட்சி ஏன் மிக நன்றாக இருக்கும்?
கூடுதல் கேள்விகள்
- மத்தேயு 14:1-32-ஐ வாசி. (அ) மத்தேயு 14:23-32-ல் உள்ள பதிவு பேதுருவின் சுபாவத்தை எப்படித் தெளிவாகக் காட்டுகிறது?
(ஆ) பேதுரு, முன்பின் யோசிக்காமல் நடந்துகொள்ளும் சுபாவத்தை விட்டுவிட்டு நன்கு முதிர்ச்சியுள்ளவராக ஆனார் என்பதை பைபிள் பதிவு எப்படிக் காட்டுகிறது? (மத். 14:27-30; யோவா. 18:10; 21:7; அப். 2:14, 37-40; 1 பே. 5: 6, 10)
- மத்தேயு 15:29-38-ஐ வாசி. தம் பிதா கொடுத்த உணவுக்கு இயேசு எப்படி மதிப்பு காட்டினார்? (மத். 15:37; யோவா. 6:12; கொலோ. 3:15)
- யோவான் 6:1-21-ஐ வாசி. அரசியல் விவகாரங்களில் இன்று கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் மாதிரியைப் பின்பற்றலாம்? (யோவா. 6:15; மத். 22:21; ரோ. 12:2; 13:1-4)
No comments:
Post a Comment