ஒரு நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்ட ஆட்கள்
இந்த ஆட்களில் ஒருவர் பிரகாசமான நட்சத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த நட்சத்திரத்தை உன்னால் பார்க்க முடிகிறதா? அவர்கள் எருசலேமிலிருந்து
கிளம்பியபோது அந்த நட்சத்திரம் அவர்களுக்குத் தெரிந்தது. இவர்கள்
கிழக்கிலிருந்து வந்தவர்கள், நட்சத்திரங்களை ஆராய்கிறவர்கள். இந்தப் புதிய
நட்சத்திரம் முக்கியமான ஒருவரிடம் தங்களை அழைத்துச் செல்கிறதென்று அவர்கள்
நினைக்கிறார்கள்.
இந்த ஆட்கள் எருசலேமுக்குப் போய்ச் சேரும்போது,
‘யூதர்களுக்கெல்லாம் ராஜாவாகப் போகிற அந்தப் பிள்ளை எங்கே?’ என்று
கேட்கிறார்கள். ‘யூதர்’ என்பது இஸ்ரவேலருடைய மற்றொரு பெயர். ‘நாங்கள்
கிழக்கில் இருந்தபோது அந்தப் பிள்ளையின் நட்சத்திரத்தை முதலில் பார்த்தோம்.
அவரை வணங்குவதற்காக இப்போது வந்திருக்கிறோம்’ என்று அவர்கள்
சொல்கிறார்கள்.
எருசலேமின் ராஜாவான ஏரோது இதைக் கேள்விப்பட்டு
மனக்கலக்கம் அடைகிறான். தன்னுடைய இடத்தை மற்றொரு ராஜா பிடித்துக்கொள்வதை
அவன் விரும்பவில்லை. அதனால் ஏரோது முக்கிய ஆசாரியர்களை அழைத்து:
‘வாக்குப்பண்ணப்பட்ட ராஜா எங்கே பிறப்பார்?’ என்று கேட்கிறான். அதற்கு
அவர்கள்: ‘பெத்லகேமில் பிறப்பார் என பைபிள் சொல்கிறது’ என்று
பதிலளிக்கிறார்கள்.
எனவே, ஏரோது கிழக்கிலிருந்து வந்த அந்த ஆட்களை
அழைத்து: ‘நீங்கள் போய் அந்த இளம் பிள்ளையைத் தேடுங்கள். அவனைக்
கண்டுபிடித்தவுடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் அவனைப் போய் வணங்க
விரும்புகிறேன்’ என்று சொல்கிறான். ஆனால் உண்மையில் அந்தப் பிள்ளையைக்
கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்பதுதான் அவனுடைய திட்டம்.
பிறகு
அந்த நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் பெத்லகேமை நோக்கிச் செல்கிறது,
அதன்பின், அந்தப் பிள்ளை இருக்கிற இடத்திற்கு மேல் நின்று விடுகிறது.
பிள்ளை இருக்கும் வீட்டுக்குள் அவர்கள் போகிறபோது மரியாளையும் குழந்தை
இயேசுவையும் பார்க்கிறார்கள். தாங்கள் எடுத்து வந்திருந்த பரிசுப்
பொருட்களை இயேசுவுக்குக் கொடுக்கிறார்கள். பிறகு, ஏரோதிடம் திரும்பிப்
போகக்கூடாது என்று அவர்களை யெகோவா கனவில் எச்சரிக்கிறார். அதனால் அவர்கள்
வேறொரு வழியாகத் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போய் விடுகிறார்கள்.
கிழக்கிலிருந்து வந்த ஆட்கள் தங்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள் என்று
கேள்விப்பட்டதும் ஏரோதுக்குப் பயங்கர கோபம் வந்துவிடுகிறது. அதனால்
பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா பையன்களையும் கொன்றுபோடச்
சொல்லி கட்டளையிடுகிறான். ஆனால் அதற்குள் யோசேப்பை யெகோவா கனவில்
எச்சரிக்கிறார். எனவே, அவர் குடும்பத்துடன் எகிப்துக்குப் போய் விடுகிறார்.
பிற்பாடு, ஏரோது இறந்து விட்டான் என்று தெரிய வரும்போதுதான் மரியாளையும்
இயேசுவையும் நாசரேத்துக்கு அழைத்துக் கொண்டு போகிறார். இந்த இடத்தில்தான்
இயேசு வளருகிறார்.
அந்தப் புதிய நட்சத்திரத்தை அனுப்பியது யார்
என்று நீ நினைக்கிறாய்? நட்சத்திரத்தைப் பார்த்த பிறகு அந்த ஆட்கள்
முதலாவதாக எருசலேமுக்குத்தான் போனார்கள் என்று நாம் வாசித்தோம். கடவுளுடைய
குமாரனைக் கொல்ல வேண்டுமென்று நினைத்தது பிசாசாகிய சாத்தானே, அதனால்தான்
எருசலேமின் ராஜா ஏரோது அவரைக் கொல்ல முயலுவான் என்பதைத் தெரிந்து அந்த
நட்சத்திரத்தை அவன் எருசலேமுக்கு வழிநடத்தினான். ஆக, சாத்தானே அந்த
நட்சத்திரத்தைத் தோன்றச் செய்திருக்க வேண்டும்.
![]() |
சோதிடர்கள் |
மத்தேயு 2:1-23; மீகா 5:2.
கேள்விகள்
- படத்திலுள்ள ஆட்கள் யார், அவர்களில் ஒருவர் ஏன் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்?
- ஏரோது ராஜா ஏன் மனக்கலக்கம் அடைகிறான், அதனால் அவன் என்ன செய்கிறான்?
- பிரகாசமான அந்த நட்சத்திரம் அந்த ஆட்களை எங்கே வழிநடத்துகிறது, ஆனால் அவர்கள் ஏன் வேறு வழியாய் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய் விடுகிறார்கள்?
- ஏரோது என்ன கட்டளையிடுகிறான், ஏன்?
- யோசேப்பை யெகோவா என்ன செய்யச் சொல்கிறார்?
- இந்தப் புதிய நட்சத்திரத்தை அனுப்பியது யார், ஏன்?
கூடுதல் கேள்வி
- மத்தேயு 2:1-23-ஐ வாசி. சாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க வந்தபோது, அவருக்கு எத்தனை வயது, அவர் எங்கே இருந்தார்? (மத். 2:1, 11, 16)
No comments:
Post a Comment