இஸ்ரவேலின் கடைசி நல்ல ராஜா
யோசியா இஸ்ரவேலின் இரண்டு கோத்திர தெற்கு
ராஜ்யத்திற்கு ராஜாவாக ஆகிறார். அப்போது அவருக்கு எட்டு வயதுதான்.
ராஜாவாவதற்கு இது ரொம்பவும் சின்ன வயது. அதனால் தொடக்கத்தில், வயதில்
மூத்தவர்களாயிருந்த சில பேர் ஆட்சி செய்ய அவருக்கு உதவுகிறார்கள்.
யோசியா ஏழு ஆண்டுகள் ராஜாவாக இருந்த பிறகு யெகோவாவைத் தேட ஆரம்பிக்கிறார்.
தாவீது, யோசபாத், எசேக்கியா போன்ற நல்ல ராஜாக்களின் முன்மாதிரியைப்
பின்பற்றி நடக்கிறார். பின்பு, இருபது வயதை எட்டுவதற்கு முன்பே யோசியா
தைரியமான ஒரு காரியத்தைச் செய்கிறார்.
![]() |
யோசியாவும் அவருடைய ஆட்களும் விக்கிரங்களை அடித்து நொறுக்குகிறார்கள் |
வெகு காலமாக இஸ்ரவேலரில் பெரும்பாலோர் படுமோசமானவர்களாய் இருந்து
வருகிறார்கள். பொய்க் கடவுட்களை வணங்குகிறார்கள். விக்கிரகங்களுக்கு முன்
குனிந்து பணிகிறார்கள். அதனால் யோசியா தன்னுடைய ஆட்களுடன் சேர்ந்து, பொய்
வணக்கத்தை தேசத்திலிருந்து ஒழித்துப்போட தொடங்குகிறார். இது ஒரு பெரிய
வேலை, ஏனென்றால் எக்கச்சக்கமானோர் பொய்க் கடவுட்களை வணங்குகிறார்கள்.
இந்தப் படத்தில் யோசியாவும் அவருடைய ஆட்களும் விக்கிரகங்களை உடைத்துப்
போடுவதை நீ பார்க்கலாம்.
இதற்குப் பிறகு, யெகோவாவின் ஆலயத்தைப்
பழுது பார்க்கும் பொறுப்பை மூன்று ஆட்களிடம் யோசியா ஒப்படைக்கிறார்.
ஜனங்களிடமிருந்து பெற்ற பணம் இந்த வேலைக்காக இவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
ஆலய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பிரதான ஆசாரியர் இல்க்கியா அங்கே
மிக முக்கியமான ஒன்றை கண்டுபிடிக்கிறார். அது என்ன தெரியுமா? ரொம்ப
காலத்திற்கு முன் மோசேயிடம் யெகோவா எழுதச் சொல்லியிருந்த நியாயப்பிரமாண
புத்தகம்தான் அது. பல ஆண்டுகளாக அது காணாமல் போயிருந்தது.
இந்தப்
புத்தகம் யோசியாவிடம் கொடுக்கப்படுகிறது, அதைத் தனக்கு வாசித்துக்
காண்பிக்கும்படி சொல்கிறார். அப்படி வாசிக்கப்படுகையில் அதைக் கவனமாக
கேட்கிறார், யெகோவாவின் சட்டங்களுக்கு ஜனங்கள் கீழ்ப்படியாமல்
இருந்திருப்பது அப்போதுதான் அவருக்குப் புரிகிறது. அதனால் இந்தப் படத்தில்
நீ பார்க்கிறபடி, ரொம்ப வேதனைப்பட்டு தன் உடைகளை இரண்டாகக் கிழிக்கிறார்.
‘இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சட்டங்களை நம்முடைய முன்னோர்
கடைப்பிடிக்காததால்தான் யெகோவா நம்மிடம் கோபமாய் இருக்கிறார்’ என்று
சொல்கிறார்.
![]() |
சாப்பான் மற்றும் யோசியா ராஜா |
யெகோவா தங்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து வரும்படி
பிரதான ஆசாரியரான இல்க்கியாவுக்கு யோசியா கட்டளையிடுகிறார். அதனால் உல்தாள்
என்ற ஒரு தீர்க்கதரிசினியிடம் அதைப் பற்றி இல்க்கியா கேட்கிறார். அதற்கு
அவள்: ‘எருசலேமும் எல்லா ஜனங்களும் தண்டிக்கப்படுவார்கள், ஏனென்றால்
அவர்கள் பொய்க் கடவுட்களை வணங்கியிருக்கிறார்கள், தேசம் கெட்டு கிடக்கிறது.
என்றாலும் யோசியாவே, நீ நல்லதைச் செய்திருப்பதால் இந்தத் தண்டனை உன்
நாட்களில் வராது, நீ இறந்த பின்பே வரும்’ என்று யெகோவா உரைத்த செய்தியை
யோசியாவுக்குச் சொல்லி அனுப்புகிறாள்.
2 நாளாகமம் 34:1-28.
கேள்விகள்
- யோசியா எத்தனை வயதில் ராஜாவாக ஆகிறார், அவர் ஏழு ஆண்டுகள் ராஜாவாக இருந்த பிறகு என்ன செய்ய ஆரம்பிக்கிறார்?
- முதல் படத்தில் யோசியா என்ன செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாய்?
- ஆலயத்தை ஆட்கள் பழுது பார்த்துக் கொண்டிருக்கையில் பிரதான ஆசாரியர் அங்கே எதைக் கண்டுபிடிக்கிறார்?
- யோசியா தன்னுடைய உடைகளை ஏன் கிழிக்கிறார்?
- யெகோவாவிடமிருந்து வருகிற என்ன செய்தியை யோசியாவுக்கு உல்தாள் தீர்க்கதரிசினி சொல்லி அனுப்புகிறாள்?
கூடுதல் கேள்விகள்
- இரண்டு நாளாகமம் 34:1-28-ஐ வாசி.
(அ) குழந்தை பருவத்திலேயே சிலர் கஷ்டத்தைச் சகித்திருந்திருக்கலாம்,
அப்படிப்பட்டவர்களுக்கு யோசியா என்ன முன்மாதிரி வைக்கிறார்? (2 நா.
33:21-25; 34:1, 2; சங். 27:10)
(ஆ) யோசியா தனது ஆட்சியின் 8-ம், 12-ம், 18-ம் ஆண்டுகளில் மெய் வணக்கத்தை மேம்படுத்துவதற்காக என்னென்ன முக்கிய படிகளை எடுத்தார்? (2 நா. 34:3, 8)
(இ) வணக்கத்திற்காக நாம் கூடிவரும் இடங்களைப் பராமரிப்பதில் ராஜா யோசியாவும், பிரதான ஆசாரியன் இல்க்கியாவும் வைத்த முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 34:9-13; நீதி. 11:14; 1 கொ. 10:31)
No comments:
Post a Comment