இயேசுவை யோவான் முழுக்காட்டுகிறார்
அதோ பார், அந்த நபருடைய தலைமேல் ஒரு புறா
வந்து இறங்குகிறது. அந்த நபர் இயேசுவே. அவருக்கு இப்போது சுமார் 30
வயதாகிறது. அவரோடு இருப்பவர் யோவான். யோவானைப் பற்றி ஏற்கெனவே ஒரு விஷயம்
நமக்குத் தெரியும். எலிசபெத்தை மரியாள் பார்க்கச் சென்றபோது, எலிசபெத்தின்
வயிற்றில் இருந்த குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது உனக்கு ஞாபகமிருக்கிறதா?
அந்தக் குழந்தைதான் இந்த யோவான். இப்போது யோவானும் இயேசுவும் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்?
சற்று முன்புதான் இயேசுவை யோர்தான் நதியில் யோவான் முழுக்காட்டினார்.
ஒரு நபர் இப்படித்தான் முழுக்காட்டப்படுவார். முதலாவதாக, தண்ணீருக்குள்
அமிழ்த்தப்பட்டு, பிறகு மேலே கொண்டு வரப்படுவார். யோவான் இதையே
மக்களுக்குச் செய்வதால், முழுக்காட்டுபவரான யோவான் என்று
அழைக்கப்படுகிறார். ஆனால் இயேசுவை யோவான் ஏன் முழுக்காட்டினார்?
தம்மை முழுக்காட்டும்படி இயேசுவே கேட்டுக் கொண்டதால் யோவான் அப்படிச்
செய்தார். யாரெல்லாம் கெட்ட காரியங்களை விட்டு மனந்திரும்பியதை வெளிக்காட்ட
விரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் யோவான் முழுக்காட்டுகிறார். ஆனால்
மனந்திருந்துவதற்கு இயேசு ஏதாவது கெட்ட காரியம் செய்தாரா? இல்லவே இல்லை,
ஏனென்றால் அவர் பரலோகத்திலிருந்து வந்த கடவுளுடைய குமாரன். ஆக, வேறொரு
காரணத்தின் நிமித்தமே தம்மை முழுக்காட்டும்படி அவர் யோவானைக்
கேட்டுக்கொண்டார். அது என்ன காரணம்?
இயேசு இங்கே யோவானிடம்
வருவதற்கு முன் ஒரு தச்சனாக இருந்தார். தச்சன் என்பவர் மேஜை, நாற்காலி
போன்ற மரச் சாமான்களைச் செய்கிறவர். மரியாளின் கணவர் யோசேப்பு ஒரு தச்சனாக
இருந்தார். இயேசுவுக்கும் அந்த வேலையைக் கற்றுக் கொடுத்திருந்தார். ஆனால்
தம்முடைய குமாரன் ஒரு தச்சனாக இருக்க வேண்டும் என்பதற்காக யெகோவா அவரை
இந்தப் பூமிக்கு அனுப்பவில்லை. அவருக்கென்றே ஒரு விசேஷ வேலையை யெகோவா
வைத்திருக்கிறார், அந்த வேலையைத் தொடங்கும் சமயம் வந்துவிட்டது. பரம
பிதாவின் சித்தத்தைச் செய்ய இப்போது தாம் வந்திருப்பதைக்
காட்டுவதற்காகத்தான் தம்மை முழுக்காட்டும்படி யோவானை அவர் கேட்டுக்
கொள்கிறார். இதைக் குறித்து கடவுள் சந்தோஷப்படுகிறாரா?
ஆம், அவர்
சந்தோஷப்படுகிறார், ஏனென்றால் இயேசு தண்ணீரிலிருந்து மேலே வந்தவுடன்
பரலோகத்திலிருந்து ஒரு குரல்: ‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்
பிரியமாயிருக்கிறேன்’ என்று சொல்கிறது. அதோடு, வானம் திறக்கப்படுவது போல
தோன்றுகிறது, பிறகு இயேசுவின் மேல் இந்தப் புறா வந்து இறங்குகிறது. ஆனால்
அது ஒரு நிஜ புறா அல்ல. பார்ப்பதற்கு புறாவைப் போல் இருந்தாலும், அது
உண்மையில் கடவுளுடைய பரிசுத்த ஆவியே.
இயேசுவுக்கு இப்போது
யோசித்துப் பார்க்க நிறைய விஷயம் இருக்கிறது, அதனால் 40 நாட்களுக்கு
தனிமையான ஓர் இடத்திற்குப் போய் விடுகிறார். அங்கே சாத்தான் அவரிடம்
வருகிறான். கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமாக நடக்கும்படி இயேசுவை மூன்று
தடவை அவன் தூண்டுகிறான். ஆனால் இயேசு உறுதியாக இருக்கிறார்.
![]() |
இயேசுவின் ஞானஸ்நானம் |
அதற்குப் பிறகு, இயேசு திரும்பி வருகிறார், சில ஆட்களைச் சந்திக்கிறார்.
அந்த ஆட்கள் அவருடைய முதல் சீஷர்கள் ஆகிறார்கள், அதாவது அவரைப்
பின்பற்றுகிறவர்கள் ஆகிறார்கள். அந்திரேயா, பேதுரு (சீமோன் என்றும்
அழைக்கப்படுகிறார்), பிலிப்பு, நாத்தான்வேல் (பற்தொலொமேயு என்றும் பெயர்)
ஆகியோர் இவர்களில் சிலர். இயேசுவும் இந்தப் புதிய சீஷர்களும் கலிலேயா
மாகாணத்திற்குச் செல்கிறார்கள். கலிலேயாவில் அவர்கள் நாத்தான்வேலின் சொந்த
ஊரான கானாவில் தங்குகிறார்கள். அங்கே இயேசு ஒரு பெரிய கல்யாண
விருந்துக்குப் போகிறார், தம்முடைய முதல் அற்புதத்தை அங்குச் செய்கிறார்.
அது என்னவென்று உனக்குத் தெரியுமா? தண்ணீரைத் திராட்ச ரசமாக மாற்றியதே அந்த
அற்புதம்.
மத்தேயு 3:13-17; 4:1-11; 13:55; மாற்கு 6:3; யோவான் 1:29-51; 2:1-12.
கேள்விகள்
- படத்திலுள்ள இரண்டு பேர் யார்?
- ஒரு நபர் எப்படி முழுக்காட்டப்படுகிறார்?
- பொதுவாக யாரை யோவான் முழுக்காட்டுகிறார்?
- என்ன விசேஷ காரணத்திற்காகத் தம்மை முழுக்காட்டும்படி யோவானிடம் இயேசு கேட்கிறார்?
- இயேசு முழுக்காட்டப்பட்டதைக் குறித்து தாம் சந்தோஷப்படுவதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்?
- இயேசு 40 நாட்களுக்குத் தனிமையான ஓர் இடத்திற்குப் போய் விடுகையில் என்ன நடக்கிறது?
- இயேசுவின் முதல் சீஷர்களில் சிலர் யார், இயேசுவின் முதல் அற்புதம் எது?
கூடுதல் கேள்விகள்
- மத்தேயு 3:13-17-ஐ வாசி. தம்முடைய சீஷர்கள் முழுக்காட்டப்படுவதற்கு இயேசு என்ன மாதிரி வைத்தார்? (சங். 40:7, 8; மத். 28:19, 20; லூக். 3:21, 22)
- மத்தேயு 4:1-11-ஐ வாசி.
இயேசு வேதவசனங்களை திறம்பட பயன்படுத்தியது, பைபிளைத் தவறாமல் படிக்க நம்மை
எப்படி உற்சாகப்படுத்துகிறது? (மத். 4:5-7; 2 பே. 3:17, 18; 1 யோ. 4:1)
- யோவான் 1:29-51-ஐ வாசி.
முழுக்காட்டுபவரான யோவான் தன்னுடைய சீஷர்களை யாரிடம் வழிநடத்தினார், இன்று
அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (யோவா. 1:29, 35, 36; 3:30; மத். 23:10)
- யோவான் 2:1-12-ஐ வாசி. யெகோவா தம் ஊழியர்களுக்கு
நன்மையான எதையும் கொடுக்காமல் இருந்துவிடுவதில்லை என்பதை இயேசுவின் முதல்
அற்புதம் எப்படிக் காட்டியது? (யோவா. 2:9, 10; சங். 84:11; யாக். 1:17)
No comments:
Post a Comment