Thursday, 5 December 2013

வெண்கலப் பாம்பு

வெண்கலப் பாம்பு

அந்தக் கம்பத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது நிஜமான பாம்பா? இல்லை, அது நிஜமான பாம்பல்ல. அது வெண்கலத்தால் செய்யப்பட்ட பாம்பு. அதை அந்தக் கம்பத்தில் வைக்கும்படி யெகோவாதான் மோசேயிடம் சொல்லியிருந்தார். எதற்காக? ஜனங்கள் அதை ஏறெடுத்துப் பார்த்து உயிர் பிழைப்பதற்காக அவ்வாறு சொல்லியிருந்தார். ஆனால் தரையில் இருக்கிற மற்ற பாம்புகளெல்லாம் நிஜமானவை. அந்த மக்களை அவை கடித்திருக்கின்றன, அதனால் சாகும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவை ஏன் ஜனங்களைக் கடித்தன என்று உனக்குத் தெரியுமா? 
மோசேயும் வெண்கலப் பாம்பும்
மோசேயும் வெண்கலப் பாம்பும்

ஏனென்றால் இஸ்ரவேலர் கடவுளுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசியிருந்தார்கள். ‘இந்த வனாந்தரத்தில் சாவதற்காகவா எங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்? இங்கே சாப்பாடும் இல்லை, தண்ணீரும் இல்லை. இந்த மன்னாவை பார்த்தாலே எங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது, இனியும் அதை எங்களால் சாப்பிட முடியாது’ என்று அவர்கள் முறுமுறுத்திருந்தார்கள்.
ஆனால் மன்னா நல்ல உணவு. அற்புதமாய் யெகோவா கொடுத்த உணவு. அதோடு, தண்ணீரையும் அவர் அற்புதமாய் கொடுத்திருக்கிறார். அவர் இப்படிக் கவனித்து வந்தும்கூட அந்த ஜனங்களுக்கு நன்றியே இருக்கவில்லை. எனவே, இஸ்ரவேலரைத் தண்டிப்பதற்காக யெகோவா இந்த விஷப் பாம்புகளை அனுப்புகிறார். இந்தப் பாம்புகள் அவர்களைக் கடிக்கின்றன, அவர்களில் பலர் செத்து விடுகிறார்கள்.
கடைசியாக, அந்த ஜனங்கள் மோசேயிடம் வந்து: ‘நாங்கள் யெகோவாவுக்கும் உமக்கும் விரோதமாகப் பேசி பாவம் செய்தோம். இப்பொழுது இந்தப் பாம்புகளை நீக்கிப்போடும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்’ என்று சொல்கிறார்கள். 
பாம்புகளால் கடிபட்ட இஸ்ரவேலர்கள்
பாம்புகளால் கடிபட்ட இஸ்ரவேலர்கள்

ஆகையால் மோசே ஜனங்களுக்காக வேண்டிக்கொள்கிறார். ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கும்படி மோசேயிடம் யெகோவா சொல்கிறார். அதை ஒரு கம்பத்தில் உயர்த்தி வைக்க வேண்டும் என்றும், பாம்பு கடிபட்டவர்கள் அதை ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். கடவுள் சொல்கிறபடியே மோசே செய்கிறார். பாம்பு கடிபட்ட ஆட்கள் அந்த வெண்கலப் பாம்பை ஏறெடுத்துப் பார்த்து மறுபடியும் சுகமடைகிறார்கள்.
இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. ஒரு விதத்தில் நாமெல்லோரும் பாம்பு கடிபட்ட அந்த இஸ்ரவேலரைப் போல் இருக்கிறோம். சாகும் நிலையில் இருக்கிறோம். எங்கே திரும்பினாலும் மக்கள் வயதாகி, நோயுற்று சாவதையே நீ பார்ப்பாய். ஏனென்றால் முதல் மனிதனும் மனுஷியுமான ஆதாம் ஏவாள் யெகோவாவை விட்டு விலகிப்போனார்கள். நாமெல்லோரும் அவர்களுடைய பிள்ளைகளாக இருப்பதால்தான் நமக்கும் சாவு வருகிறது. என்றாலும், நாம் சாவில்லாமல் வாழ ஒரு வழியை யெகோவா உண்டாக்கியிருக்கிறார்.
தமது மகன் இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினார். இயேசு ஒரு கழுமரத்தில் அறையப்பட்டார், ஏனென்றால் அவர் கெட்டவர் என்று பல ஆட்கள் நினைத்தார்கள். ஆனால் நம்மைக் காப்பாற்றவே இயேசுவை யெகோவா கொடுத்தார். நாம் அவரை ஏறெடுத்துப் பார்த்தால், அதாவது அவரைப் பின்பற்றினால், நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். பிற்பாடு இதைப் பற்றி இன்னும் அதிகமாக கற்றுக்கொள்வோம்.
எண்ணாகமம் 21:4-9; யோவான் 3:14, 15.


கேள்விகள்

  • படத்தில் அந்தக் கம்பத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது என்ன, அதைக் கம்பத்தில் வைக்கும்படி மோசேயிடம் யெகோவா ஏன் சொன்னார்?
  • கடவுள் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்திருந்த போதிலும் ஜனங்கள் எப்படி நன்றிகெட்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்?
  • ஜனங்களைத் தண்டிப்பதற்காக விஷப் பாம்புகளை யெகோவா அனுப்பிய பிறகு மோசேயிடம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
  • ஒரு வெண்கலப் பாம்பை உண்டாக்கும்படி மோசேயிடம் யெகோவா ஏன் சொல்கிறார்?
  • இந்தக் கதையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

கூடுதல் கேள்விகள்

  • எண்ணாகமம் 21:4-9-ஐ வாசி. (அ) யெகோவா செய்த ஏற்பாடுகளுக்கு எதிராக இஸ்ரவேலர் முறையிட்டது நமக்கு எப்படி எச்சரிக்கையாக அமைகிறது? (எண். 21:5, 6; ரோ. 2:4)
    (ஆ) பிற்பட்ட நூற்றாண்டுகளில் இந்த வெண்கலப் பாம்பை இஸ்ரவேலர் எதற்காக பயன்படுத்தினர், எசேக்கியா ராஜா என்ன நடவடிக்கை எடுத்தார்? (எண். 21:9; 2 இரா. 18:1-4)
  • யோவான் 3:14, 15-ஐ வாசி. வெண்கலப் பாம்பை ஒரு கம்பத்தில் வைத்தது இயேசு கிறிஸ்துவை கழுமரத்தில் ஏற்றியதற்கு எப்படி ஒரு படமாக இருந்தது? (கலா. 3:13; 1 பே. 2:24)

No comments:

Post a Comment