Wednesday, 4 December 2013

செங்கடலைக் கடந்து செல்லுதல்

செங்கடலைக் கடந்து செல்லுதல்

இங்கே என்ன நடக்கிறது பார்! செங்கடலின் மேல் கோலை நீட்டிக் கொண்டிருப்பது மோசே. அவரோடுகூட பத்திரமாய் இருப்பவர்கள் இஸ்ரவேலர். ஆனால் பார்வோனும் அவனுடைய முழு சேனையும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்ததென்று நாம் பார்க்கலாம்.
எகிப்தியர்களின் சேனை கடலில் மூழ்குகிறது
எகிப்தியர்களின் சேனை கடலில் மூழ்குகிறது


         
எகிப்தியரின் மீது கடவுள் 10-வது வாதையைக் கொண்டுவந்த பின்பு, இஸ்ரவேலர் எகிப்தைவிட்டுப் போகும்படி பார்வோன் சொன்னான். இதைப் பற்றி நாம் ஏற்கெனவே வாசித்தோம். ஏறக்குறைய 6,00,000 இஸ்ரவேல் ஆண்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களோடு நிறைய பெண்களும் பிள்ளைகளும் இருந்தார்கள். யெகோவா மீது நம்பிக்கை வைத்த ஏராளமான மற்ற ஜனங்களும்கூட இஸ்ரவேலரோடு சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் தங்கள் ஆடு மாடுகளையெல்லாம் தங்களுடன் அழைத்து சென்றார்கள்.
இஸ்ரவேலர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், உடைகளையும் பொன், வெள்ளி சாமான்களையும் தங்களுக்குக் கொடுக்குமாறு எகிப்தியரிடம் கேட்டார்கள். கடைசி வாதையைக் கண்டு எகிப்தியர் மிகவும் பயந்து போயிருந்ததால் இஸ்ரவேலர் தங்களிடம் கேட்டவுடனே எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
சில நாட்களுக்குப் பின் இஸ்ரவேலர் செங்கடலுக்கு அருகே வந்து சேர்ந்தார்கள். அங்கே கொஞ்சம் ஓய்வெடுத்தார்கள். இதற்கிடையில், இஸ்ரவேலரை ஏன்தான் அனுப்பி விட்டோமோ என பார்வோனும் அவனுடைய ஆட்களும் கவலைப்பட ஆரம்பித்தார்கள். ‘அடிமைகளைப் போக விட்டுவிட்டோமே!’ என புலம்பினார்கள்.
அதனால், பார்வோன் மறுபடியும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டான். தன்னுடைய யுத்த இரதத்தையும் சேனையையும் அவசர அவசரமாக தயார் செய்தான். பின்பு 600 விசேஷ இரதங்களுடனும் எகிப்திலிருந்த மற்ற எல்லா இரதங்களுடனும் இஸ்ரவேலரைப் பிடிக்க துரத்திச் சென்றான்.
பார்வோனும் அவனுடைய சேனையும் தங்களைத் துரத்தி வருவதை கண்ட இஸ்ரவேலர் பயத்தில் நடுநடுங்கிப் போனார்கள். தப்பி ஓட ஒரு வழியும் இல்லை. அவர்களுக்கு முன்னால் செங்கடல், பின்னாலோ எகிப்தியர். ஆனால் யெகோவா தமது ஜனத்தாருக்கும் எகிப்தியருக்கும் நடுவே ஒரு மேகத்தை வைத்தார். எனவே, எகிப்தியரால் இஸ்ரவேலரைப் பார்க்க முடியவில்லை, அதன் காரணமாக அவர்களைத் தாக்க முடியவில்லை.
பிறகு, மோசே தன்னுடைய கோலை செங்கடலின் மேல் நீட்டுமாறு யெகோவா சொன்னார். அப்படி நீட்டியதும், கிழக்கிலிருந்து பலத்த காற்று வீசும்படி யெகோவா செய்தார். அப்போது அந்தக் கடலின் தண்ணீர் இரண்டாகப் பிளந்து இரு பக்கங்களிலும் சுவர் போல் நின்றது.
அதன்பின் இஸ்ரவேலர் அந்தக் கடலின் உலர்ந்த தரை வழியாக நடந்து செல்லத் தொடங்கினார்கள். லட்சக்கணக்கான ஜனங்களும் அவர்களுடைய எல்லா மிருகங்களும் அந்தக் கடலைப் பத்திரமாய் கடந்து செல்ல பல மணிநேரம் பிடித்தது. கடைசியாக எகிப்தியரால் இஸ்ரவேலரை மறுபடியும் பார்க்க முடிந்தது. அதோ, அந்த அடிமைகள் போய்க் கொண்டிருந்தார்கள்! அவர்களைத் துரத்திப் பிடிக்க எகிப்தியர் உடனடியாக கடலுக்குள் பாய்ந்து சென்றார்கள்.
அப்போது, அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்று விழும்படி கடவுள் செய்தார். எகிப்தியர் மிகவும் பயந்துபோய்: ‘இஸ்ரவேலருக்காக யெகோவா யுத்தம் செய்கிறார். வாருங்கள் இங்கிருந்து ஓடிவிடலாம்!’ என்று அலறத் தொடங்கினார்கள். ஆனால் என்ன பிரயோஜனம்!
மோசே தன் கோலை செங்கடலின் மேல் நீட்டும்படி யெகோவா சொன்னார், அப்படி நீட்டியபோது சுவர் போல் நின்ற அந்தத் தண்ணீர் திமுதிமுவென்று எகிப்தியரையும் அவர்களுடைய இரதங்களையும் அப்படியே மூழ்கடித்துப் போட்டது. அதைத்தான் நீ அந்தப் படத்தில் பார்த்தாய். எகிப்தியரின் முழு சேனையும் இஸ்ரவேலரைத் துரத்தி கடலுக்குள் இறங்கியிருந்ததால், அவர்களில் ஒருவன்கூட உயிரோடு வெளியே வரவில்லை!
தப்பிப் பிழைத்ததற்காக கடவுளுடைய ஜனங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! ‘யெகோவாவுக்கு மாபெரும் வெற்றி. குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று ஆண்கள் எல்லோரும் யெகோவாவுக்கு நன்றி சொல்லி ஒரு பாட்டைப் பாடினார்கள். மோசேயின் அக்கா மிரியாம் தன்னுடைய தம்புருவை எடுத்தாள், மற்ற பெண்கள் தங்கள் தம்புருக்களோடு அவளைப் பின் தொடர்ந்தார்கள். ‘யெகோவாவுக்கு மாபெரும் வெற்றி. குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று ஆண்கள் பாடிக்கொண்டிருந்த அதே பாட்டைப் பாடி மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள்.
யாத்திராகமம் அதிகாரங்கள் 12-15.


கேள்விகள்

  • பெண்கள், பிள்ளைகளோடுகூட எத்தனை இஸ்ரவேல் ஆண்கள் எகிப்தை விட்டு வெளியேறினார்கள், அவர்களோடு சேர்ந்து வேறு யாரும் வெளியேறினார்கள்?
  • இஸ்ரவேலரைப் போகவிட்ட பின் பார்வோன் என்ன நினைத்தான், அதனால் அவன் என்ன செய்தான்?
  • தம்முடைய ஜனங்களை எகிப்தியர் தாக்காமல் இருக்க யெகோவா என்ன செய்தார்?
  • மோசே தன்னுடைய கோலை செங்கடலின் மேல் நீட்டியதும் என்ன நடந்தது, அப்போது இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?
  • இஸ்ரவேலரைப் பிடிக்க எகிப்தியர் கடலுக்குள் வேகமாய்ப் பாய்ந்ததும் என்ன நடந்தது?
  • தப்பிப்பிழைத்ததற்கான சந்தோஷத்தையும் நன்றியையும் யெகோவாவுக்கு இஸ்ரவேலர் எப்படிக் காட்டினர்?

கூடுதல் கேள்விகள்

  • யாத்திராகமம் 12:33-36-ஐ வாசி. தம்முடைய ஜனங்கள் எகிப்தியரின் கீழ் அடிமைகளாகப் பட்ட பாடுகளுக்கெல்லாம் பலன் கிடைக்கும்படி யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்? (யாத். 3:21, 22; 12:35, 36)
  • யாத்திராகமம் 14:1-31-ஐ வாசி. யாத்திராகமம் 14:13, 14-ல் உள்ள மோசேயின் வார்த்தைகள், வரவிருக்கும் அர்மகெதோன் யுத்தத்தை எதிர்கொள்ள இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்படி உதவுகின்றன? (2 நா. 20:17; சங். 91:8)
  • யாத்திராகமம் 15:1-8, 20, 21-ஐ வாசி. (அ) யெகோவாவின் ஊழியர்கள் ஏன் அவரைப் புகழ்ந்து பாட வேண்டும்? (யாத். 15:1, 2; சங். 105:2, 3; வெளி. 15:3, 4)
    (ஆ) யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதில் மிரியாமும், மற்ற பெண்களும் இன்று கிறிஸ்தவப் பெண்களுக்கு என்ன முன்மாதிரி வைத்தார்கள்? (யாத். 15:20, 21; சங். 68:11, NW)

No comments:

Post a Comment