Thursday, 5 December 2013

ரூத்தும் நகோமியும்

ரூத்தும் நகோமியும்

பைபிளில் ரூத் என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. இஸ்ரவேலில் நியாயாதிபதிகளின் காலத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. ரூத் என்பவள் மோவாப் தேசத்திலிருந்து வந்த ஓர் இளம் பெண்; கடவுளுடைய ஜனமான இஸ்ரவேலைச் சேர்ந்தவள் அல்ல. ஆனால் மெய்க் கடவுளான யெகோவாவைப் பற்றி தெரிந்து கொண்டதும் அவரை மிகவும் நேசிக்கிறாள். யெகோவாவைப் பற்றி ரூத்துக்குக் கற்றுக்கொடுத்த வயதான பெண்மணிதான் நகோமி.
நகோமி ஓர் இஸ்ரவேல் பெண். இஸ்ரவேலில் பஞ்சம் உண்டானபோது நகோமியும் அவளுடைய கணவனும் இரண்டு மகன்களும் மோவாப் தேசத்துக்குச் சென்றார்கள். பின்பு ஒருநாள் நகோமியின் கணவன் இறந்துபோனார். பிற்பாடு நகோமியின் மகன்கள் ரூத், ஒர்பாள் என்ற இரண்டு மோவாபிய பெண்களைக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின்பு, நகோமியின் இரண்டு மகன்களும் இறந்து போகிறார்கள். நகோமிக்கும் அந்த இரண்டு பெண்களுக்கும் எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! நகோமி இப்பொழுது என்ன செய்வாள்?
ஒருநாள் நகோமி வெகு தொலைவில் இருக்கிற தன் வீட்டுக்கே, தன் சொந்த ஜனங்களிடமே திரும்பிப்போக தீர்மானிக்கிறாள். ரூத்தும் ஒர்பாளும் அவள் கூடவே இருக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்களும் நகோமியுடன் செல்கிறார்கள். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன், நகோமி மருமக்களைப் பார்த்து: ‘நீங்கள் உங்கள் வீட்டுக்கே திரும்பிப் போய், உங்கள் அம்மாவுடன் இருங்கள்’ என்று சொல்கிறாள்.
நகோமி அவர்களைப் போய்வரச் சொல்லி முத்தமிடுகிறாள். அப்பொழுது அவர்கள் அழத்தொடங்கி விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் நகோமியின் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். ‘இல்லை! உங்களுடைய ஜனங்களிடத்திற்கு நாங்களும் வருவோம்’ என்று சொல்கிறார்கள். ஆனால் நகோமி: ‘என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப் போக வேண்டும், உங்கள் வீட்டில் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது’ என்று பதிலளிக்கிறாள். எனவே, ஒர்பாள் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகிறாள். ஆனால் ரூத் போகவில்லை.
நகோமி அவளிடம்: ‘ஒர்பாள் போய் விட்டாள், நீயும் அவளுடன் திரும்பிப் போ’ என்கிறாள். ஆனால் ரூத்: ‘உங்களை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை கட்டாயப்படுத்தாதீர்கள்! தயவுசெய்து என்னை உங்களோடு வரவிடுங்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் போவேன், நீங்கள் எங்கே வாழ்கிறீர்களோ அங்கே நானும் வாழ்வேன். உங்கள் ஜனமே என் ஜனம். உங்கள் கடவுளே என் கடவுள். நீங்கள் மரிக்கும் இடத்தில் நானும் மரிப்பேன், அங்கேயே நானும் அடக்கம் பண்ணப்படுவேன்’ என்று சொல்கிறாள். அதைக் கேட்ட பிறகு நகோமி அவளை திரும்பப் போகச் சொல்லி வற்புறுத்தவில்லை.
கடைசியாக இரண்டு பேரும் இஸ்ரவேலுக்குப் போய், அங்கேயே தங்கிவிடுகிறார்கள். வயல்களில் ரூத் வேலை செய்ய ஆரம்பிக்கிறாள், ஏனென்றால் அது வாற்கோதுமை அறுவடை செய்யும் காலம். போவாஸ் என்பவர் தன் வயல்களில் வாற்கோதுமையைப் பொறுக்கிக்கொள்ள அவளை அனுமதிக்கிறார். போவாஸின் அம்மா யார் என்று உனக்குத் தெரியுமா? எரிகோ பட்டணத்து ராகாப்தான் அவருடைய அம்மா.
ஒருநாள் போவாஸ் ரூத்திடம்: ‘உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் நான் கேள்விப்பட்டேன். நகோமியிடம் நீ எந்தளவு அன்பு வைத்திருக்கிறாய் என்பதை தெரிந்துகொண்டேன், நீ உன் அப்பா அம்மாவையும் உன் சொந்த ஊரையும் விட்டுவிட்டு, முன்பின் தெரியாத ஜனங்களுடன் வாழ வந்ததைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். யெகோவா உனக்கு நன்மை செய்வாராக!’ என்று சொல்கிறார். 
ரூத்தும் நகோமியும்
ரூத்தும் நகோமியும்

அதற்கு ரூத்: ‘ஐயா, நீர் என்னிடம் எவ்வளவு அன்பு காட்டுகிறீர். நீர் இப்படி என்னிடம் கரிசனையோடு பேசியதே எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது’ என்கிறாள். ரூத்தை போவாஸ் ரொம்பவும் நேசிக்கிறார், சீக்கிரத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். நகோமிக்கு எத்தனை சந்தோஷம்! ரூத்துக்கும் போவாஸுக்கும், ஓபேத் என்ற மகன் பிறந்தபோது நகோமிக்கு அதைவிட சந்தோஷமாகி விடுகிறது. பிற்பாடு ஓபேத் தாவீதின் தாத்தாவாக ஆகிறார். தாவீதைப் பற்றி பிறகு நாம் அதிகமாக தெரிந்துகொள்வோம்.
பைபிள் புத்தகமான ரூத்.


கேள்விகள்

  • மோவாப் தேசத்திற்கு நகோமி செல்வது ஏன்?
  • ரூத், ஒர்பாள் ஆகியோர் யார்?
  • தங்களுடைய ஜனங்களிடத்திற்குப் போகும்படி நகோமி சொல்கையில் ரூத்தும் ஒர்பாளும் என்ன செய்கிறார்கள்?
  • போவாஸ் யார், ரூத்துக்கும் நகோமிக்கும் அவர் எப்படி உதவுகிறார்?
  • போவாஸுக்கும் ரூத்துக்கும் பிறக்கும் பிள்ளையின் பெயர் என்ன, அந்தப் பெயரை நாம் ஏன் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

கூடுதல் கேள்விகள்

  • ரூத் 1:1-17-ஐ வாசி. (அ) ரூத் தன்னுடைய பற்றுமாறா அன்பை எப்படி அழகாக விவரிக்கிறாள்? (ரூத் 1:16, 17)
    (ஆ) இன்று பூமியிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்டோரிடம் ‘வேறே ஆடுகள்’ காட்டும் மனப்பான்மையை ரூத்தின் மனப்பான்மை எப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது? (யோவா. 10:16; சக. 8:23)
  • ரூத் 2:1-23-ஐ வாசி. இன்றுள்ள இளம் பெண்களுக்கு ரூத் எப்படிச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறாள்? (ரூத் 2:17, 18; நீதி. 23:22; 31:15)
  • ரூத் 3:5-13-ஐ வாசி. (அ) ரூத் ஓர் இளைஞனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதை போவாஸ் எப்படிக் கருதினார்?
    (ஆ) ரூத் வெளிக்காட்டிய மனப்பான்மையிலிருந்து பற்றுமாறா அன்பு பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ரூத் 3:10; 1 கொ. 13:4, 5)
  • ரூத் 4:7-17-ஐ வாசி இன்று கிறிஸ்தவ ஆண்கள் எப்படி போவாஸைப் போல் இருக்கலாம்? (ரூத் 4:9, 10; 1 தீ. 3:1, 12, 13; 5:8)

No comments:

Post a Comment